எஞ்சி நிற்கும் நஞ்சு - நாடகமல்ல
காய்கறிகளில் எஞ்சியுள்ள நஞ்சு குறித்த நாடகத்தைக் கேரள அரசு கடந்த மாதம் (ஜூன்) தொடங்கியது. பின்னர்,


காய்கறிகளில் எஞ்சியுள்ள நஞ்சு குறித்த நாடகத்தைக் கேரள அரசு கடந்த மாதம் (ஜூன்) தொடங்கியது. பின்னர், தமிழகப் பயிர்ப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் அதை மறுத்து ஒரு முற்றுப்புள்ளி வைத்து விட்டதன் மூலம் நிஜங்கள் மாறிவிடாது. நடந்து கொண்டிருக்கும் நாடகம் என்ன?
தமிழ்நாட்டை விட கேரள மாநிலம் நஞ்சில்லா வேளாண்மையை நோக்கிச் செல்வதில் தீவிரமாக உள்ளது. குறிப்பாக, "எண்டோசல்ஃபான்' என்ற பூச்சி மருந்தால் கேரள விவசாயிகள் அதிகமாகப் பாதிக்கப்பட்டனர். பக்கவிளைவு பக்கவாதம். ஆயிரக்கணக்கான விவசாயிகளின் கை, கால் உறுப்புகள் செயலிழந்தன. கேரளத்தில் எண்டோசல்ஃபான் 2012-இல் தடை செய்யப்பட்டது.
மற்றொரு பக்கவிளைவு, நஞ்சில்லா இயற்கை வழி வேளாண்மையில் வேகம் வந்தது. இந்தச் சூழ்நிலையில், தமிழ்நாட்டிலிருந்து வரும் காய்கறிகளில் பூச்சி மருந்து விஷம் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக உள்ளதாகக் கேரள மக்களை எச்சரித்ததுடன், தமிழக அரசுக்குக் கேரள அரசு புகார் அனுப்பியது.
இந்தப் புகாருக்கு பதில் கூறும் வகையில் கேரள மாநில எல்லையில் உள்ள கிராமங்களிலிருந்து மாதிரிகள் பெற்றுத் தமிழ்நாடு அரசின் சார்பில் மாநிலப் பயிர்ப் பாதுகாப்புத் துறை மேற்கொண்ட பரிசோதனையில் 96 சதவீதக் காய்கறிகளில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு உள்பட்டே நஞ்சு எஞ்சியுள்ளதென்றும், இதனால் உயிருக்கு ஆபத்தில்லை என்றும் சொன்னது.
இப்படி திடீரென்று தமிழ்நாட்டுக் காய்கறிகளில் விஷம் எஞ்சியுள்ளதைக் கேரள அரசு புகார் செய்த விதம் தமிழ்நாடு வேளாண்மைத் துறைக்கு எரிச்சல் ஊட்டியிருக்கலாம். மேகி நூடுல்ஸில் உள்ள காரீய விஷம் வெளிச்சமாகி தமிழ்நாடு அரசு மேகி நூடுல்ஸýக்குத் தடை விதித்தது போல் காய்கறிகளில் எஞ்சியுள்ள விஷத்துக்கும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள அரசு விரும்பியிருக்கலாம்.
நின்று கொல்லும் விஷம் பற்றி தமிழ்நாடு வேளாண் துறை வழங்கிய பதில்களில் நகைச்சுவையும் உண்டு. மேலும், ஆய்வுக்கு உள்படுத்தும் கட்டாயமும் உண்டு. "உயிரையே பலி வாங்கும் அளவில் விஷமில்லை...' என்று முதலில் கூறப்பட்டது. சில நாள்கள் சென்றதும் வந்த செய்தி சிறப்பானது.
இந்தியப் பயிர்ப் பாதுகாப்புக் கூட்டமைப்பு என்பது, வேளாண்மை அமைச்சக அங்கீகாரம் பெற்ற அமைப்பு. அந்த அமைப்பில் மாநில வேளாண் துறை விஞ்ஞானிகளும், பூச்சி மருந்து நிறுவனப் பிரதிநிதிகளும் உறுப்பினர்களாவர்.
இந்தியப் பயிர்ப் பாதுகாப்புக் கூட்டமைப்பு தாங்கள் எப்படியெல்லாம் காய்கறி, பழங்களில் மாதிரிகள் எடுத்துப் பரிசோதித்தோம் என்றும், உடல்நலத்தைப் பாதிக்கும் வகையில் விஷ அளவு எஞ்சவில்லை என்றும் வழங்கிய சான்றிதழின்படி, "ஆஹா, இனி பயமில்லை, அங்காடிகளில் விற்கப்படும் காய்கறிகளில் விஷமே எஞ்சவில்லை' என்று நாம் நெஞ்சைத் தடவிவிட்டுக் கொண்டு பூச்சி மருந்துகளுக்கு "ஓ'ப் போடத் தோன்றும்.
இந்தியப் பயிர்ப் பாதுகாப்புக் கூட்டமைப்பு நாம் உண்ணும் காய்கறி, பழங்களில் எந்த அளவில் விஷம் எஞ்சியிருந்தால் உடலுக்குத் தீமை தராது என்பது பற்றிய அளவுகோல், அதாவது P.P.M. (Percentage Per Million) பற்றிய வெள்ளை அறிக்கையை வெளியிடவில்லை. இந்தியப் பயிர்ப் பாதுகாப்புக் கூட்டமைப்பு நிர்ணயித்துள்ள P.P.M. அலகுக்கும் கேரள அரசு நிர்ணயித்துள்ள அலகுக்கும் வேற்றுமை இருக்கலாம்.
தமிழ்நாடு அரசின் வேளாண்மைத் துறை / இந்தியப் பயிர்ப் பாதுகாப்புக் கூட்டமைப்பு நிர்ணயித்துள்ள அளவு என்ன? உணவுக் கட்டுப்பாட்டு ஆணையம் (Food Control Authority) நிர்ணயித்துள்ள P.P.M. அளவு என்ன? இவர்களுக்கெல்லாம் மேல் U.S.F. & D.A. - அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம் நிர்ணயித்துள்ள ட.ட.ங. அலகு / அளவு என்ன?
காய்கறி, பழங்களில் எஞ்சி நிற்கும் விஷ விஷயம் தமிழ்நாட்டுக்கும், கேரளத்துக்கும் குழாயடிச் சண்டையாக மாறிவிட்டது. இந்தியப் பயிர்ப் பாதுகாப்புக் கூட்டமைப்பு, "நீ மட்டும் என்ன ஒழுங்கு?' கேரளத்தில் விளையும் மிளகு, ஏலக்காய் விஷமா, இல்லையா என்று கிண்டல் செய்துள்ளது. இதற்கான பதிலை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நறுமணப் பொருள் வாரியமே வழங்க வேண்டும்.
கொச்சியை மையமாகக் கொண்டு இயங்கும் நறுமணப் பொருள் வாரியத்தின் முயற்சியால் நஞ்சில்லா நறுமணப் பொருள் சாகுபடி புத்தூக்கம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள இயற்கை விவசாயிகளைக் கேரளத்து நறுமணப் பொருள் வாரியம் ஊக்குவித்து உதவித் தொகை வழங்கிய அளவில் தமிழ்நாடு வேளாண்மைத் துறை உதவியதில்லை.
கடந்த ஜூலை 21-ஆம் தேதி வந்த புதிய செய்தி: தமிழ்நாட்டிலிருந்து கொண்டுவரும் காய்கறிகளுடன் நஞ்சில்லா நிலை பற்றிய சான்றிதழையும் கொண்டுவர வேண்டுமென்று கேரளம் வற்புறுத்தியுள்ளது. அதற்கு ஒரு வாரம் கெடு விதித்துள்ளது. உண்மையில் வரவேற்க வேண்டிய முடிவுதான்.
நுகர்வோர் நலன் கருதி தமிழ்நாட்டில் உள்ள காய்கறி அங்காடிகளுக்குள் வரும் சரக்குகளுக்கும் அப்படிப்பட்ட சான்றிதழ்களை தமிழ்நாடு வேளாண்மைத் துறை வழங்குவது நல்லது.
சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த "36 வயதினிலே' என்ற திரைப்படத்தில் காய்கறி, பழங்களில் எஞ்சியிருக்கும் விஷம் பற்றி எடுத்துக் கூறி, படத்தின் கதாநாயகி ஜோதிகா, மொட்டை மாடியில் இயற்கை விவசாயம் செய்கிறார். "நஞ்சில்லா உணவே' அந்தப் படத்தின் மையக் கருத்து. இந்தத் திரைப்படத்தின் காரணமாகவும் மக்களிடையே நஞ்சில்லா உணவு பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதை மறுப்பதற்கில்லை.
நானும் என்னுடைய தேவைக்குக் கடந்த 17 ஆண்டுகளாக மொட்டை மாடியில் காய்கறி சாகுபடி செய்து வருகிறேன். செயற்கை உரம், பூச்சி மருந்து கொண்டு உற்பத்தியாகும் காய்கறிகளைவிட இயற்கையில் விளையும் காய்கறிகள் அதிக ருசியுடனும் மணத்துடன் இருப்பது மட்டுமல்ல; இயற்கையில் விளைந்த காய்கறிகளில் கூடுதலான ஊட்டச்சத்து உள்ளதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஒட்டன்சத்திரத்தைச் சுற்றியும் கொடைக்கானல் மலைப் பகுதியிலும் விளையும் உருளைக்கிழங்கு, பீட்ருட், முட்டைகோஸ், காலிஃபிளவர், வெண்டைக்காய், பீன்ஸ் போன்ற பயிர்கள் மீது மானோ குரோட்டோபாஸ் விஷத்தை, பயிர்கள் நட்டதிலிருந்து அறுவடையாகும் வரை பத்து முறை மழை போல் குளிப்பாட்டப்படுவதைப் பார்த்துள்ளேன்.
பூச்சி மருந்து விற்பனையில் முன்னணி மாநிலமான தமிழ்நாட்டில் காய்கறிப் பயிர்களுக்குத்தான் உயிர்க்கொல்லியான பூச்சி மருந்தின் பயன்பாடு அதிகம் என்ற புள்ளிவிவரமும் உண்டு.
பூச்சி மருந்து விஷம் பற்றிய செய்தியை 1992-இல் முதலில் வெளியிட்டு வளங்குன்றா வேளாண்மைக்கு வித்திட்டது டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் என்பதை மக்கள் அறிய வாய்ப்பில்லை.
அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற டாக்டர் எம்.எஸ்.எஸ். சென்னை தரமணி வளாகத்துக்கு மாறும் முன்பு, அருகில் உள்ள கோட்டூர்புரத்தில் அவர் அலுவலகம் இருந்தபோது "காய்கறி, பழங்களில் எஞ்சியுள்ள விஷம்' என்ற தலைப்பில் நிகழ்ந்த கருத்தரங்கில் கலந்துகொண்ட தமிழக வேளாண் விஞ்ஞானிகள், அனுமதிக்கப்பட்ட அளவை விட விஷம் 100 சதவீதம் கூடுதலாக உள்ளதை ஏற்று வாக்குமூலம் வழங்கினர்.
அந்தக் கருத்தரங்கில் டாக்டர் எம்.எஸ்.எஸ். நிறுவன விஞ்ஞானி ஒருவர் அங்கு படித்த ஆய்வுக் கட்டுரையின் சாராம்சத்தை இங்கு வழங்குகிறேன்: "அதி விஷமான பூச்சி மருந்துகளைப் பயிர்கள் மீது தெளிக்கும்போது முதற்கண் அப்பயிர்களின் சூலகங்கள் பாதிப்புற்று விதைகள் மலடாகின்றன. இப்படித்தான் பாரம்பரிய விதைகள் அழிவுற்றன. மண் மீது விழுந்து மண் விஷமாகிறது. காற்றில் கலந்து விண்ணும் விஷமாகிறது. உயிரினங்களின் சுவாச மண்டலம் பழுதாகிறது.
இதனால் மனிதர்களுக்கு ஏற்படும் நோய்கள்: 1. அல்ட்ரீன், டி.டி.ட்டி. போன்ற ஆர்கோ குளோரின்களால் மீன், பால், இறைச்சி போன்றவை விஷமாகி மனிதர்களுக்கு வயிற்று நோய், குடல் நோய், ஈரல் நோய் ஏற்படுகிறது. தாய்ப்பால் விஷமாகிறது. 2. லிண்டேன், ஹெர்ப்டோ குளோர், என்றின், டையசினான் அலுமினியம் பாஸ்பைடு எஞ்சினால் வயிறு, ஈரல் நோயுடன் புற்றுநோய் ஏற்படும். 3. மாலத்தியான், பாரத்தியான், மானோ குரோட்டோபாஸ் போன்ற ஆர்கனோ பாஸ்பரஸ் விஷத்தால் ஈரல், புற்றுநோய்க்கு மேல் கூடவே வாதநோய், காசநோய் ஏற்படும்...'
மேற்படி 1992-இல் நிகழ்ந்த பூச்சி மருந்து விஷம் பற்றிய கருத்தரங்கில் நிறைவுரை ஆற்றிய டாக்டர் எம்.எஸ்.எஸ்., தமிழ்நாடு வேளாண் துறை விஞ்ஞானிகளைச் சற்றுக் கடுமையாக எச்சரித்துவிட்டுப் பூச்சி மருந்தின் பயன்பாட்டைத் தவிர்த்து விட்டு அதன் மாற்றாக இயற்கைப் பூச்சி விரட்டியைப் பயன்படுத்தி நமது காய்கறி, பழங்களில் எஞ்சியுள்ள விஷம் அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம் நிர்ணயித்துள்ள அளவு காப்பாற்றப்பட்டால்தான் காய்கறி, பழ ஏற்றுமதியில் நல்ல லாபம் பெற முடியும் என்று அவர் அன்று கூறியதை நினைவில் கொள்வது நன்று.
மேற்படி கருத்தரங்கின் விளைவால் அதுநாள் வரை ரசாயன விவசாயத்துக்குத் துணை போன நான், இயற்கை விவசாயத்துக்கு மாறினேன்.
தாய்ப்பாலை விஷமாக்கும் டி.டி.ட்டியை இந்தியா தடை செய்தது. எண்டோசல்ஃபானை கேரள அரசு தடை செய்தது. பின்னர் கர்நாடகம் தடை செய்தது. அடுத்தடுத்த மாநிலங்களான கேரளமும், கர்நாடகமும் நஞ்சில்லா உணவு உற்பத்தியை லட்சியமாகக் கொண்டு இயற்கை வழி விவசாயத்துக்கு உதவியும் வருகிறது. தமிழ்நாட்டிலோ நிலைமை நேர்மாறாக உள்ளது.
எஞ்சி நிற்கும் நஞ்சு என்பது கேரள அரசு நிகழ்த்தும் நாடகம் அல்ல. அது உண்மை நிலை. P.P.M. - பத்து லட்சத்தில் அனுமதிக்கப்படும் பங்கு அமெரிக்க உணவுக் கட்டுப்பாட்டு அளவின்படி அதிகபட்சம் 50 எனலாம். இந்த அளவு இந்திய மாநிலந்தோறும் உள்ள உணவுக் கட்டுப்பாட்டு அலகுடன் ஒத்துப்போகாது.
ஏனெனில், இங்குள்ள பூச்சி மருந்து நிறுவனம் வாய்க்கரிசி போட்டால் அதிகபட்சம் எஞ்சியுள்ள நஞ்சை 50-லிருந்து 100 என்று மாற்றி நஞ்சில்லாச் சான்றிதழைப் பெற்று விடலாம். அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் இது பலிக்காமல்தான், ஒரு குறிப்பிட்ட மருந்து தடையாகி, "ரான்பாக்சி' மூடப்பட்டதை நினைத்துப் பார்க்கலாம்.
ஆகவே, இந்தியாவில் மாநில வாரியாக உணவுக் கட்டுப்பாட்டு வாரியம் நிர்ணயித்துள்ள அனுமதிக்கப்படும் எஞ்சி நிற்கும் நஞ்சின் ட.ட.ங. அளவை ஊடகங்களிலும் வலைப் பின்னல்களிலும் வழங்கி பகிரங்கப்படுத்த வேண்டும். விஷ விஷயத்தில் ஒளிவு மறைவு ஏன்? நஞ்சில்லா உணவு உற்பத்தியை நோக்கி நடைபோடுவதுதான் நாட்டுக்கு நல்லது.
இந்தியப் பிரதமர் வலியுறுத்தும் தூய்மை பாரதத்தில் நஞ்சில்லா உணவு உற்பத்தியும் நலவாழ்வின் ஒரு பங்களிப்பு என்பதால், வாழ்க தூய்மை பாரதம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...