கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

காய்கறிகளின் அரசன் கத்தரி

இந்திய விவசாயத்தில் தொன்றுதொட்டே நறுமணப் பொருள்கள் (SPICES) ஏற்றுமதிச் சிறப்புள்ளவை.

News image
Updated On :3 ஜூன் 2015, 8:09 pm

ஆர்.எஸ். நாரா​ய​ணன்

இந்திய விவசாயத்தில் தொன்றுதொட்டே நறுமணப் பொருள்கள் (SPICES) ஏற்றுமதிச் சிறப்புள்ளவை. மிளகு நறுமணப் பொருள்களின் அரசன் என்றும், ஏலக்காய் நறுமணப் பொருள்களின் அரசி என்றும் குறிப்பிடுவார்கள்.
 நறுமணப் பொருள்கள் பணக்காரப் பயிர்கள். அவற்றை சாகுபடி செய்ய மலைப் பகுதிகளில் தோட்டங்கள் வாங்க வேண்டும். காய்கறிகளில் மகுடம் தரிக்கும் கத்தரிக்காய் ஏழை விவசாயிகளின் பயிர். மிளகும், ஏலக்காயும் கத்தரிக்காய் சமையலுக்கு வாசனை தரலாம். சோற்றோடு கலந்து உண்ணப்படும் உணவாகிவிடாது!
 1950-களிலிருந்து எனக்கும், கத்தரிக்காய்க்கும் உள்ள தொடர்பை வர்ணிக்க வார்த்தைகள் போதாது. அப்போது நான் பள்ளிச் சிறுவன். மயிலை நாச்சியப்பத் தெருவில் வாசம். கணுக்கால் முழுவதும் அழுகுணிச் சிரங்கு படைபடையாக அப்பியிருந்தது.
 எனது தாயார் கச்சேரி சாலையில் உள்ள வெங்கடரமணா ஆயுர்வேத மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காண்பித்தபோது கஷாயம், சூர்ணம் வழங்கியதுடன் பத்திய உணவைக் குறிப்பிட்டு பிஞ்சுக் கத்தரி, அவரை, புடல் தவிர வேறு காய்கறி சேர்க்க வேண்டாம் என்றதுடன், கடல் அலை புண்ணில் அலம்பும் வண்ணம் கடற்கரையில் சிறிது நேரம் நிற்கச் சொன்னார்.
 வைத்தியர் சொன்ன காய்கறிகளை வாங்க என் தாயார் ராயப்பேட்டை சாலையில் உள்ள தண்ணித் துறை காய்கறி அங்காடிக்குச் சென்று அவரை, புடல், கத்தரி வாங்கி வருவார்கள். அப்போதுதான் பொடிப் பொடியான கரு நீலக் கத்தரிக்காயைப் பார்த்தேன். கேட்டபோது இது ரசக் கத்தரிக்காய் என்றார். மேற்படி வைத்தியத்தால் குணமடைந்து பள்ளிக்குச் சென்ற கதை இருக்கட்டும்.
 அதேசமயம் நல்ல ருசியுள்ள, ஒரு கொட்டைப் பாக்கு அளவுள்ள அந்தப் பொடிக் கத்தரிக்காய் இன்று காணாமல் போய்விட்டது. பின்னர் பெரியவனாகி மைய விவசாய அமைச்சரகப் பிரிவான அங்காடிப் புலனாய்வுத் துறையில் பணிபுரிந்தபோது, நான் சுவைத்த பீம விலாஸ் கத்தரிக்காய் கொஸ்துவை மறக்க முடியாது.
 அதே மயிலையில் கச்சேரி சாலை, அருண்டேல் தெருமுனையில் காலை 9 மணி வரை இட்லி - கத்தரிக்காய் கொஸ்து காம்பினேஷன் கிட்டும். உட்கார இடம் கிடைக்காது. பார்சலுக்கு பாத்திரம் வேண்டும்.
 அப்போதெல்லாம் பாலிதீன் காகிதத்தில் பார்சல் தர மாட்டார்கள்! தம்புச் செட்டித் தெரு, தாசப்பிரகாஷ் ஹோட்டலில் "வாங்கிபாத்' (கத்தரிக்காய் சாதம்) பிரசித்தம். அதற்கென்றே வருபவர்கள் உண்டு.
 ஏன் இவ்வளவு பீடிகை? கத்தரிக்காயை எல்லாவிதமாகவும் சமைக்கலாம். பொறியல், சாம்பார், காரக் குழம்பு, கூட்டு, மோர்க் குழம்பு, அவியல், கதம்ப சாம்பார், சுட்டு அரைத்த துவையல், ரச வாங்கி ரசம் என்று எப்படி வேண்டுமானாலும் சமைத்து உண்ணப் பயன்படும் கத்தரியைக் காய்கறிகளின் அரசன் என்பது மிகை அல்ல.
 எனது பணி வேளாண் விளைபொருள் அங்காடிப் புலனாய்வு என்பதால், தமிழ்நாடு முழுவதும் சுற்ற வேண்டும். அது எனது கத்தரிக்காய் ஆராய்ச்சிக்கு உதவியது. மாவட்டத்துக்கு மாவட்டம் கத்தரிக்காய்களின் மாறுபட்ட தோற்றம், ருசி வியப்பூட்டியது.
 வேலூரில் ஒரு ரகம், விழுப்புரத்தில் ஒரு ரகம், கடலூரில் ஒரு ரகம், திருச்சியில் பல ரகம், புதுக்கோட்டையில் ஒரு ரகம், கும்பகோணத்தில் ஒரு ரகம். திண்டுக்கல் - மதுரையில் ஒரு ரகம், காரியாபட்டியில் ஒரு ரகம், நெல்லையில் ஒரு ரகம், குமரியில் ஒரு ரகம், சேலம் - கோவையில் சில ரகங்கள். நிறத்திலும் உருவத்திலும் நிறைய வேற்றுமை.
 குண்டுக் கத்தரிக்காய்களில் சிறிது, பெரிது, நடுத்தரம். நீட்டக் கத்தரிக்காய்களில் விரல் கத்தரிக்காய் தனி. நிறங்களில் பச்சை, ஊதா, கருநீலம், வெள்ளை, ஊதாவில் வெள்ளை, பச்சையில் வெள்ளை, தமிழ்நாட்டில் விளையும் கத்தரிக்காய்களில் மிகுந்த ருசியுள்ள ரகம் எது என்று வினவப்பட்டால் என்னுடைய ஓட்டு வேலூர் முள் கத்தரிக்காய்க்குத்தான். அதன் பச்சை கிரீடத்தில் (காம்பு) முள்கள் உண்டு.
 முள்கள் உள்ள பலாப்பழம் போல் முள்கள் நிறைந்த வேலூர் கத்தரிக்காய் காரலோ கசப்போ இல்லாதது. அதிக ருசியுள்ளது. வேலூரில் உள்ள ஒருவர் என்னிடம் திண்டுக்கல் பச்சைக் கத்தரிக்காய் விதைகளைப் பெற்றுக் கொண்டு அதன் சுவையை விரும்பினார். நானோ வேலூரிலிருந்து முள் கத்தரி விதைகளைப் பெற்று என் வீட்டுத் தோட்டத்தையும் மாடித் தோட்டத்தையும் அலங்கரித்துள்ளேன்.
 தமிழ்நாடு, அதுபோல் ஆந்திரம், கர்நாடகம், கேரளம் போன்ற திராவிட மாநிலங்கள் நீங்கலாக பிற மாநிலங்களிலும் சரி, பிரதேசங்களிலும் சரி, விளைவிக்கப்படுபவை சுரை அளவு பெரிதாயுள்ள நீர்க் கத்தரிக்காய்தான். எவ்வாறு "சாம்பார் வெங்காயம்' என்று கூறப்படும் சின்ன வெங்காயம் தமிழ்நாட்டின் கொடையோ அவ்வாறே சின்னக் கத்தரிக்காய்களும் தமிழ்நாட்டின் கொடை.
 நான் உலகம் சுற்றியதில்லை. இந்தியாவை ஓரளவு சுற்றியுள்ளேன். 15 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா செல்லும் வாய்ப்பு வந்தது. அப்போது சிகாகோ நகரில் உள்ள இந்தியன் ஸ்டோர் சென்று காய்கறி வாங்கும்போது, காணாமல் போன நீல நிற நச்சுப் பொடிக் கத்தரிக்காய்களைக் கண்ணுற்றேன்.
 "கண்டேன் சீதையை' என்று அனுமார் குதித்தது போல் உற்சாகமுற்று, இவை எங்கிருந்து வருகின்றன என்று கடை நடத்தும் சேட்டை ஹிந்தியில் கேட்டேன். "மத்ராஸ் úஸ' என்றார்.
 சென்னை - ஆந்திரம் எல்லையில் பயிராகும் இந்தச் சிறப்பு ரகக் கத்தரிக்காய் சென்னை அங்காடிக்கு வராமல், சிகாகோவுக்குப் போகிறது! சிகாகோ மட்டுமல்ல; அநேகமாக அமெரிக்க மாநிலங்களில் பல நகரங்களில் உள்ள "இந்தியன் அங்காடிகளிலும்' இந்த சின்னக் கத்தரிக்காய் கிட்டும் என்று தோன்றுகிறது. சின்ன வயதில் எனது சின்னக் காலில் படையாக வந்த சிரங்கைக் குணப்படுத்திய சின்னக் கத்தரிக்காயை நான் எப்படி மறப்பேன்?
 கத்தரிக்காயில் நிறைய இரும்புச் சத்துடன் வேறு அரிய உலோகச் சத்துகளும் உண்டு. ஆயுர்வேத வைத்தியர்கள் விதை பெரிதான முற்றிய கத்தரிக்காய்களை பத்திய உணவுக்கு அனுமதிக்க மாட்டார்கள். கத்தரிக்காய் பிஞ்சாக இருந்தால் சாப்பிட வேண்டும்.
 மூன்று தோஷங்களான பித்தம், வாயு, கபம் ஆகியவற்றைக் கண்டிக்கும் திறன் பிஞ்சுக் கத்தரிக்காய்களுக்கு உண்டு. பொதுவாக கத்தரிக்காய் நல்ல மலமிளக்கி, வயிற்று நோய்க்கு நன்று. குறிப்பாக வாத தோஷம் அடங்கும். பிஞ்சுக் கத்தரிக்காய் மருந்து. முற்றிய கத்தரிக்காய் மருந்து அல்ல.
 கத்தரிக்காயின் தோற்ற வரலாறு என்ன? வேதியர்களின் சிரார்த்த சமையலில் கத்தரிக்காய்க்குத் தடை என்பதாலும், சங்க நூல்களிலும், வேத நூல்களிலும் கத்தரிக்காய் பற்றிய குறிப்பு இல்லாததாலும் கத்தரிக்காயை அன்னியப் பயிராகக் கருதுகிறார்கள்.
 ஆனால், கத்தரிக்காய் குடும்பத்தைச் சேர்ந்த சுண்டையைப் பற்றிய குறிப்பு உள்ளது. எவ்வாறு முரட்டுப் புல் ரகத்திலிருந்து விதைத் தேர்வு அடிப்படையில் நெல் உருவானதோ அதுபோல் சுண்டையிலிருந்து விதைத் தேர்வு அடிப்படையில் சின்னக் கத்தரிக்காய் தோன்ற வாய்ப்பு உள்ளது!
 இதன் சமையல் பயன் பிற்கால மரபாயிருக்கலாம் அல்லவா? பயோ டைவர்சிட்டி, பல்லுயிர்ப் பெருக்கம் என்ற கண்ணோடத்தில் தமிழ்நாடு விவசாயிகள் உருவாக்கிய ஏராளமான சிறு கத்தரிக்காய் ரகங்களுக்கு ஆபத்து நெருங்கி விட்டது.
 மகைக்கோ - மான்சன்டோ விதைக் கம்பெனி உருவாக்கியுள்ள ஹைபிரீட் / வீரிய ஒட்டு கலர் கத்திரிக்காய் இன்று படுபோடு போடுகிறது. ருசி அவ்வளவு மோசமில்லை. நல்ல மகசூல் என்பதால் லாப நோக்கில் அங்காடி வரத்தில் சுமார் 40 சதவீதம் மான்சன்டோ - மகைக்கோ கத்தரி உள்ளது.
 இதனால், பல நாட்டு ரகக் கத்தரிக்காய்கள் அருகிவிட்டன என்பது கசப்பான உண்மை. கத்தரிக்காயை இத்தோடு விடாமல் அமெரிக்க போதனையால் போதையில் இயங்கும் சில தமிழ்நாடு வேளாண் விஞ்ஞானிகள், மரபணு உத்திகொண்டு பி.ட்டி. கத்தரிக்காய்களை அறிமுகம் செய்து நாட்டு ரகக் கத்தரிக்காய்களுக்குக் கானல் வரி எழுதுவது எவ்வளவு மடமை? நம்மிடமுள்ள நாட்டு ரகங்களைக் கொண்டே சரியான சாகுபடி உத்திகளைக் கொண்டு மகசூலை உயர்த்த வழி உள்ளபோது, மரபணு விஷம் வேண்டாமே.
 கத்தரிக்காய் புராணத்தில் இறுதியாக சொற்பொருள் பற்றிய மொழி ஆராய்ச்சியும் உள்ளது. தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராட்டியம், சிந்தி மொழிகளில் "வாங்கி, வாங்கே' என்றும், ஹிந்தியில் "பைகன்' என்றும் வழங்கப்படும் இக்காய் தமிழில் மட்டுமே கத்திரி, கத்தாரி, கத்தரி என்று பேசப்படுகிறது.
 சம்ஸ்கிருதத்தில் "கிரீட பலம்'. கிரீட பலம் என்றால் மகுடமுள்ள காய். அதாவது, "காய்கறி அரசன்'. கத்திரி என்ற திரிபுச் சொல் பஞ்சாபியில் "க்ஷத்திரீய' என்று பொருள் தரும்.
 தமிழில் கத்தரி ஒரு க்ஷத்திரியக் காய் என்பதால், வடமொழியில் கிரீடம் சூடியுள்ளது. ஆகா, என்ன பொருத்தம், இந்தப் பொருத்தம்! கத்தரிக்காய் செடியில் உள்ளபோது அதன் காம்பு மகுடம் போல் காட்சியளிக்கும்.
 தமிழில் "பாவாடை' என்பர். தலைகீழாகப் பார்த்தால் பாவாடை அணிந்த பெண்ணுருவம் கிட்டும். தமிழில் ராணி என்றால் சம்ஸ்கிருதத்தில் ராஜா. காய்கறிகளின் அரசன் மட்டுமல்ல; அரசியும் கூட.
 காலங்களில் அவள் வசந்தம்
 கலைகளிலே அவள் ஓவியம்
 மாதங்களில் அவள் மார்கழி
 மலர்களிலே அவள் மல்லிகை
 கனிகளிலே அவள் மாங்கனி....
 என்று சிந்து பாடிய கண்ணதாசன், "காய்களிலே அவள் கத்தரி' என்று தொடர்ந்திருக்கலாம். ஆண் பாலைப் பெண் பாலாக்க வேண்டாம் என்று வடமொழி பயின்ற கண்ணதாசன் எண்ணியிருக்கலாம்.
 சரி, போகட்டும். காய்கறி ராஜாக்களை சாகுபடி செய்யும் ஏழை விவசாயிகள் நல்வாழ்வு பெற, நாட்டுக் கத்தரிக்காய்களுக்குக் கானல் வரி எழுதும் மரபணு மாற்ற விஞ்ஞானிகளை மனமாற்றம் செய்ய, கத்தரிக்காய்களின் பன்முக நிறங்களும், ரகங்களும் கொண்ட பல்லுயிர்ப் பெருக்கம் உதவட்டுமே.
 
 கட்டுரையாளர்:
 இயற்கை விஞ்ஞானி.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.