கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

கேசரி (பருப்பு) அரசியல்!

உணவு அரசியலில் அரிசி அரசியல், கோதுமை அரசியல், வெங்காய அரசியல், பாமாயில் அரசியல் பற்றியெல்லாம் கேள்விப்பட்டுள்ளோம்.

News image
Updated On :4 ஏப்ரல் 2016, 7:49 pm

ஆர்.எஸ். நாரா​ய​ணன்

உணவு அரசியலில் அரிசி அரசியல், கோதுமை அரசியல், வெங்காய அரசியல், பாமாயில் அரசியல் பற்றியெல்லாம் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால், கேசரிப் பருப்பு அரசியல் புதுமையானது.
 கடந்த ஆண்டு நிகழ்ந்த பிகார் மாநிலப் பொதுத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஏற்பட்ட சரிவைப் பற்றி அலசியபோது "பருப்பு வகைகளின் விலையேற்றம்', குறிப்பாகக் கேசரிப் பருப்பின் பற்றாக்குறை விவாதத்திற்கு வந்தது.
 கேசரிப் பருப்பு சாகுபடியில் பிகார் ஒரு முன்னணி மாநிலம். சாதாரணமாக உளுந்து, துவரை, பாசிப் பயறு, கொண்டைக் கடலை வகைகளின் பருப்பு விலை ரூ.100 முதல் ரூ.150 என்று விற்கப்படும்போது கேசரிப் பருப்பு ரூ.30க்குக் கிட்டும். இது மிகவும் மலிவான பருப்பு. சாதாரணமாக கேசரிப் பருப்பு துவரம் பருப்பிலும், கடலைப் பருப்பிலும் கலப்படமாகும்.
 எனினும், 1960-ஆம் ஆண்டு கேசரிப் பருப்பில் நச்சுப் பொருள் உள்ளதைக் கருதி மத்திய அரசு கேசரிப் பருப்பின் விற்பனைக்கும், இருப்பு வைப்பதற்கும் தடை செய்து சட்டம் கொண்டு வந்தது. இதன் காரணமாக, இதன் சாகுபடி முக்கியத்துவம் குறைந்தது.
 1950-60 காலகட்டத்தில் கேசரிப் பருப்பு உற்பத்தி சராசரியாக 15 லட்சம் டன் என்ற நிலை, 2015-16 கால கட்டத்தில் 1 லட்சம் டன் என்ற அளவுக்குக் குறைந்து போனது. விற்பனைக்குத்தான் தடையே தவிர, விவசாயிகளின் சொந்த உபயோகத்திற்கு எந்தத் தடையும் இல்லை.
 ஆண்டுதோறும் இந்தியாவில் 40 முதல் 50 லட்சம் டன் வரை பருப்பு இறக்குமதி நிகழ்வதால், இந்தப் பாரத்தைக் குறைக்கும் நிமித்தமாக கேசரிப் பருப்பின் உற்பத்தியை உயர்த்தும் திட்டம் உருவானது.
 விலை மலிவு என்ற காரணத்திற்காக ஏழை, நடுத்தர மக்கள் சேகரிப் பருப்பை நாடி வருவதால், அங்காடித் தேவையும் உள்ளது. கேசரிப் பருப்பு விளையும் மாநிலங்களில் உள்ள ஏழை விவசாயிகள், குறிப்பாக பழங்குடியினர், பட்டியல் இனத்தவர்களுக்கு இது முக்கிய உணவு ஆகும்.
 இந்த ஆண்டு ஜனவரி 27-ஆம் நாள் முன்னிரவு நேரத்தில், பிரதமர் நரேந்திர மோடி விவசாயம் மற்றும் உழவர் மேம்பாடு அமைச்சரகச் செயலாளர்களையும், நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சரகச் செயலாளர்களையும் ஒருங்கே அழைத்து கேசரிப் பருப்பு சாகுபடி தொடர்பாக ஓர் ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார்.
 இந்த அவசரக் கூட்டம் முடிந்த கையோடு 50 ஆண்டுக் காலமாகப் போடப்பட்டிருந்த கேசரிப் பருப்பு விற்பனைக்குரிய தடைச் சட்டம் திரும்பப்பெற்றதாக ஓர் அவசரப் பிரகடனம் அறிவிக்கப்பட்டது.
 2017-இல் உத்தர பிரதேசம் உள்பட கேசரிப் பருப்பு விளையும் வட மாநிலங்களில் தேர்தல் நடக்கவுள்ளதால் கேசரிப் பருப்பு மீதிருந்த 50 ஆண்டுக் கால கட்டுப்பாடு விடுப்பு கடைநிலை மக்களின் ஓட்டுக்களைக் குறிவைத்தே செய்யப்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இருப்பினும், கேசரிப் பருப்பின் சரித்திரம் பற்றியும், இதன் விஷத்தன்மை பற்றியும் அறிந்து கொள்வது அவசியம்.
 இந்த கேசரிப் பருப்பின் தாவர இயல் பெயர் லதைரஸ் சத்தீவஸ் (Lathyrus Sativas). இந்தப் பருப்பின் சிறப்பு இதில் உள்ள அடர் புரதம். உளுந்து, துவரை, கொண்டைக் கடலை போன்ற பருப்புகளில் 20 முதல் 23 சதவீதம் புரதம் உண்டு. ஆனால், கேசரிப் பருப்பில் 33 சதவீதம் புரதப் பொருள் உள்ளது. குறைந்த செலவில் ஏழைகளுக்குக் கேசரிப் பருப்பு புரதம் வழங்கினாலும், இதில் நியூரோ டாக்சின் விஷம் உள்ளது. இதை Oxalyldiaminopropionic Acid என்பர்.
 கேசரிப் பருப்பில் உள்ள நியூரோடாக்சின் அளவு 0.075 P.P.M. (Percentage Per Million). பார்க்கப் போனால், பூச்சி மருந்து அடித்து விளையும் கத்தரிக்காய், வெண்டைக்காய், முட்டைக்கோஸ், பீட்ரூட்டில் உள்ள விஷ அளவுக்கு நிகர் என்று சொல்லலாம். எனினும், கேசரிப் பருப்பில் உள்ள நியூரோ டாக்சின் விஷம் பற்றி விஞ்ஞானிகளிடையே மாறுபட்ட கருத்துகள் உண்டு.
 1893-இல் ஜார்ஜ்வாட் என்ற வேளாண்மைப் பொருளியல் வித்தகர், ""இந்தியாவின் வாணிப விளைபொருள்கள்'' என்ற நூலில் கேசரிப் பருப்பில் உள்ள நியூரோ டாக்சின் விஷம் பற்றி குறிப்பிட்ட பிறகுதான், கேசரிப் பருப்பு விஷம் பற்றிப் பலரும் விவாதிக்கத் தொடங்கினர்.
 கேசரிப் பருப்பை முழு உணவாகப் பயன்படுத்தாமல் அளவுடன் உண்டால் பிரச்னை இருக்காது என்றும் கூறியுள்ளார். நன்கு கொதிக்க வைத்து நீரை வடித்து விட்டால் பிரச்னை இல்லை.
 வாட்ஸ் வாழ்ந்த காலத்தில் இந்தியாவில் சுமார் 20 லட்சம் ஹெக்டேரில் கேசரிப் பருப்பு சாகுபடியானது. காலம் காலமாக கிழக்கு உத்தரப் பிரதேசம், பிகார், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் கேசரிப் பருப்பை உண்டு வருகின்றனர்.
 விலை மலிவு என்ற காரணத்தால் ஏழை, நடுத்தர வர்க்கம் இப் பருப்பைப் பயன்படுத்தி வருகின்றனர். கேசரிப் பருப்பில் உள்ள விஷம் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு 1945-இல் பிரிட்டிஷ் இந்திய அரசு வெளியிட்டது. இந்த அறிவிப்பு உரிய கவனத்தைப் பெறவில்லை.
 1950-60களில் கான்பூரில் அமைந்துள்ள இந்தியப் பருப்பு சாகுபடி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் என்.பி. சிங் கேசரிப் பருப்பு சாகுபடியைப் பெரிதும் ஊக்குவித்தார். அவர் முயற்சியால் இந்தியாவில் அன்று 13 லட்சம் ஹெக்டேரில் கேசரிப் பருப்பு சாகுபடியானது. இது வெப்பம் தாங்கி வளரக் கூடிய கோடைப் பயிர். இருமுறை நீர் விட்டால் போதுமானது. வறட்சி மாவட்டங்களில் நன்கு விளையும்.
 துவரை, கடலை போன்ற இதரப் பயிர்கள் அறுவடையாக 5 மாதங்கள் பிடிக்கும் என்றால், 3 மாதங்களில் கேசரிப் பருப்பு அறுவடையாகும். இவ்வாறு, சிறப்பாக விளைந்து கொண்டிருந்த கேசரிப் பருப்புக்கு 1960-இல் சோதனை வந்தது.
 அப்போது, இந்தியாவில் உணவுப் பஞ்சம் உச்சத்தில் இருந்தது. கோதுமையும் அரிசியும் கொள்ளை விலைக்கு விற்கப்பட்டன. ஆகவே, ஏழை விவசாயிகள் மலிவாகக் கிடைத்த கேசரிப் பருப்பை முழு உணவாக உண்டனர்.
 ஆயிரக்கணக்கான பழங்குடி, ஏழை விவசாயிகள் முடக்குவாத நோயால் தள்ளாடினர். ஊடகங்களும் ஊதி ஊதிப் பெரிதுபடுத்தின. 1961-இல் கேசரிப் பருப்பு விற்பனைக்கும், இருப்பு வைப்பதற்கும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சொந்த உபயோகத்திற்கு சாகுபடி செய்வதற்குத் தடை இல்லை.
 இதன் காரணமாக கேசரிப் பருப்பு சாகுபடி நிலப்பரப்பு வெகுவாகக் குறைந்துவிட்டது. இருப்பினும், தடையை மீறி கேசரிப் பருப்பு துவரம் பருப்பில் கலக்கப்பட்டு கேரளம், தமிழ்நாட்டுக்கு வரத்தான் செய்கிறது. பல ஓட்டல்களில் கேசரிப் பருப்பு சாம்பார் பரிமாறப்படுகிறது. இதனால், யாருக்கும் முடக்குவாதம் வந்ததாகத் தகவல் இல்லை.
 எனினும், கேசரிப் பருப்பு விஷம் பற்றிப் பல பரிசோதனைகள் தொடர்ந்தன. இதை முழு உணவாகக் கொள்ளாமல் துணை உணவாக உட்கொண்டால் பாதிப்பு இல்லை என்ற முடிவு செய்யப்பட்டது.
 உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் உயிரி வேதியியல் துறை டீன் எஸ்.எல்.என். ராவ் (ஓய்வு) தன் உடலையே சோதனைக் களமாக வைத்து தினமும் உணவில் அளவுடன் கேசரிப் பருப்பைச் சேர்த்து வருவதாகவும், தனக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் கூறுகிறார்.
 பருப்பு விலை உயர்வைக் கட்டுப்படுத்த மகாராஷ்டிர அரசு 2008-இல் கேசரிப் பருப்பு மீதுள்ள தடையை நீக்கியுள்ளது.
 அண்மையில், ராய்ப்பூர் வேளாண்மைப் பல்கலைக்கழகம் பிரதீக், மகாதீரா, ரகன் என்ற பெயரில் மூன்று நஞ்சில்லா கேசரிப் பருப்பு ரகங்களை வெளியிட்டுள்ளது. கேசரிப் பருப்பு மீதுள்ள தடை நீக்கத்தாலும், புதிய ரக விதை வெளியீடுகளாலும் எந்த அளவுக்கு இதர வகைப் பருப்புகளின் விலை கட்டுப்படும் என்பது புரியாத புதிர்.
 ஏழை மக்கள் அதிக விலை கொடுத்து துவரம் பருப்பையும், கடலைப் பருப்பையும் வாங்காமல் குறைந்த விலையில் கேசரிப் பருப்பை வாங்க முன் வரலாம் என்பது பா.ஜ.க.வின் கணக்கு.
 இந்தக் கணக்கு தமிழ்நாட்டில் எடுபடாது!
 
 கட்டுரையாளர்:
 இயற்கை விஞ்ஞானி.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.