தாமரைப் பூத்த தடாகங்கள்!

தமிழிசை மேதை தண்டபாணி தேசிகர் பாடிய 'தாமரைப் பூத்த தடாகமடி' என்கிற பாட்டு காலத்தால் அழியாதது. 'மலர்களிலே அவள் மல்லிகை' என்று மல்லிகைப் பூவைத் தூக்கி நிறுத்திப் பாடிய கண்ணதாசன், ஒரு மன்மதக் கவிஞன். ஆனால், தாமரையைத் தூக்கி நிறுத்தித் துதி பாடியவன் பாரதி. ஏனெனில், பாரதி ஒரு தெய்வீகக் கவிஞன்.
தாமரைப் பூத்த தடாகங்கள்!
Published on
Updated on
4 min read

தமிழிசை மேதை தண்டபாணி தேசிகர் பாடிய "தாமரைப் பூத்த தடாகமடி' என்கிற பாட்டு காலத்தால் அழியாதது. "மலர்களிலே அவள் மல்லிகை' என்று மல்லிகைப் பூவைத் தூக்கி நிறுத்திப் பாடிய கண்ணதாசன், ஒரு மன்மதக் கவிஞன். ஆனால், தாமரையைத் தூக்கி நிறுத்தித் துதி பாடியவன் பாரதி. ஏனெனில், பாரதி ஒரு தெய்வீகக் கவிஞன்.

தாமரையே ஒரு தெய்வீக மலர். தாமரையைப் பெண்கள் தலையில் சூடுவது இல்லை. தாமரையை பாரதி சரஸ்வதியாகப் பார்க்கிறார். "வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்' என்று பாரதி பாடினான். அவன் ஒரு வேதாந்தி.

உலகம் உருவான தோற்றக்கதை கூறும் உபநிடதம், முதலில் உலகம் நீரால் சூழப்பட்டிருந்தது. பின்னர் சூரியன் தோன்றி உதித்தது. சூரிய ஒளி பாய்ந்து மெதுவாகத் தாமரை மலர்ந்து தலைதூக்கியது. அதுவே உலகைத் தாங்கி நின்றது என்கிறது.

உலகத்தாயாகிய புவனேஸ்வரி தாமரை மீது அமர்ந்துள்ளாள். அந்த புவனேஸ்வரியை பாரதி சரஸ்வதியாக தரிசிக்கிறான். எனினும், புராணமரபின்படி பூமாதேவி செந்தாமரையில் அமர்ந்தபடி உலகைத்தாங்கி மனிதர்களை வாழவைக்கிறாள், கிரேக்க புராணத்தில் வரும் அட்லஸ் தெய்வம் போல். ஆகவேதான், தேசங்களின் வரைபடத் தொகுப்பை அட்லஸ் என்கிறோம்.

இந்திய பூமித்தாய் கிரேக்கத்தில் அட்லசாகத் தெரிகிறாள். தாமரை பூத்த தடாகமானது உலகையே வாழவைக்கும் புவிசக்தி என்ற உண்மையைப் புரிந்து கொண்டால் தாமரை பூத்த தடாகங்களை விரிவுபடுத்தும் சிந்தனை வரும். தாமரையை "பங்கஜம்', "கமலம்', "பத்மம்', "அரவிந்தம்' என்று பற்பல பெயர்களில் அழைப்பார்கள்.

தாமரைக்கும் விவசாயத்திற்கும் தொடர்பு உண்டு. முடிமன்னர் ஆண்ட காலத்தில் விவசாயமே நாட்டின் செல்வம். அப்படிப்பட்ட செல்வம் பெருகத் தாமரைத் தடாகங்கள் வேண்டும். எப்படி? இதைப்பற்றிய குறிப்பு பண்டைய தோட்டக்கலை நூலான "விருட்சாயுர் வேதம்' என்ற நூலில் உள்ளது. அதனைப் புரட்டிப் பார்த்தால் உண்மை புலனாகும்.

தாமரையின் தண்டு, மலர் ஆகியவை "பத்மினி' எனப்படும். தாமரையின் சூலகம் "கர்ணீகரம்' எனப்படும். தாமரை மிகுந்துள்ள தடாகம் "புஷ்கரம்' எனப்படும். புஷ்கரநீர் பழ மரங்கள், காய்கறிச் செடிகள் ஆகியவற்றைச் சிறப்புடன் வளரச் செய்து நல்ல மகசூல் தர உதவும்.

அதனால்தான் விவசாயிகள் அவரவர் தோட்டங்களில் புஷ்கரம் அமைத்துப் புஷ்கர நீரைப் பயிர்களுக்குப் பாய்ச்ச வேண்டும் என்று "விருட்சாயுர் வேதம்' எழுதிய சுரபாலரும், சுரபாலருக்கு முன் "உபவன வினோதம்' என்ற சுவடி எழுதிய சாரங்கதாவும், "பிரஹத் சம்ஹிதை'யை எழுதிய வராஹமிஹ்ரரும் கூறியுள்ளனர். புஷ்கரத்தின் (தாமரைத் தடாகம்) பயன்களையும், பிணிதீர்க்கும் மருந்தாகத் தாமரையையும் வர்ணித்துள்ளனர்.

தாமரை மலரில் உள்ள மது கண்நோய்க்கு அருமருந்து. தாமரை பூத்த தடாகத்தின் தண்ணீரைப் பயிர்களுக்கு விட்டால் பயிர்களை நோய் தாக்காது. பெரிய அளவுள்ள காய்களையும் பழங்களையும் விளைவிக்க முடியும்.

தாமரை, அல்லி போன்றவை நீர்வாழ் தாவரங்கள்.

அல்லிக்குள நீரும் பயிருக்கு ஏற்றதுவே என்று "விருட்சாயுர் வேதம்' கூறுகிறது. இப்படிப்பட்ட நீர்வாழ் தாவரங்களைப் பற்றிய ஆய்வுகளை தாவரவியல், உயிரியல், வேளாண்மை - தோட்டக்கலை விஞ்ஞானிகள் மேற்கொள்ள வேண்டும். இதற்கு மாறாக நாம் தாமரைக் குளங்களை அழித்து வருகிறோம்.

தாமரைக்குளநீர் விவசாயத்திற்கு ஏற்றது என்பதுடன் தாமரையின் வணிக முக்கியத்துவம் பற்றியும் அறிதல் நலம். தாமரை இலை வாழை இலையின் மாற்று. தாமரை இலைமீது உணவு பரிமாறலாம். கோவில்கள் உள்ள திருக்குளங்களில் மட்டுமே தாமரை வளர்க்கப்பட்டு, கடவுளின் மலர் அலங்காரத்திற்குப் பயனாகிறது. இலைப்பயன் ஏலத்திற்கு விடப்படலாம்.

உலர்த்தப்பட்ட தாமரையின் தண்டு, மலர், சூலகம், கிழங்கு, ஆகியவை நாட்டுமருந்துச் சரக்காகப் பயன்படுகின்றன. தாமரை விதைகளுக்கு (தாமிரங்கொட்டை) ஏற்றுமதிச் சந்தை உள்ளது. வடக்கே பற்றற்று வாழும் சாமியார்கள் ருத்ராட்சம் அணிவது போல் தமிழ்ச்சித்தர்கள், ஆதீன பக்தர்கள் தாமிரங்கொட்டையை மாலையாக அணிவர். கோயில் குருக்கள்களும் அணிவதுண்டு.

இச்சையைக் கட்டுப்படுத்தி குண்டலினி சக்தியை உருவாக்கும் சக்தி தாமிரங்கொட்டைக்கு உண்டு என்பது நம்பிக்கை. இவ்வளவு பயனுடைய தாமரையைத் திருக்குளம் மட்டுமின்றி எல்லாக் குளங்களிலும் வளர்க்க திட்டமிட வேண்டும்.

நூறு நாள் குளத்து வேலைத்திட்டம் தொடங்குவதற்கு முன், திருக்கோவில் சாராத பல குளங்களில் தாமரை, அல்லி வளர்க்கப்படுவதுண்டு. அப்படிப்பட்ட குளங்களில் பல இன்று பசுமை இழந்து மண் திடலாயுள்ளன. எப்படி? குளத்து வேலையில் ஈடுபடும் பெண்கள் செய்யும் முதல் வேலை கூடிப்பேச இடம் தயாரிப்பதுதான்.

குளத்தருகில் எதுவும் மரம் இருந்தால் மரத்தைச் சுற்றி சுத்தம் செய்து மண்ணை கெட்டிப்படுத்தி திடலாக்குவார்கள். தூங்குவதற்கும், அரட்டை அடிப்பதற்கும், பேன் பார்க்கவும் அது ஏதுவாகும். குளத்தின் படுகை மீது தினம் 100 தடவை மிதித்து மிதித்து ஏற்படும் வெப்பத்தால் நீர்வாழ்த் தாவர விதைகள் கருகிவிடுகின்றன.

தூர்படியாவிட்டாலும்கூட தேவைக்குமேல் சுரண்டிக் கரையில் போடுகின்றனர். புல் பூண்டு விதைகள்கூட செத்து விடுகின்றன. ஒரு குளத்தை எப்படிப் பசுமையாக்கி அதில் மழைநீரை சேமிக்கவேண்டும் என்ற அடிப்படைப் புரிதல்கூட குளத்து வேலைத்திட்டத்தைச் செயல்படுத்தும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கு இல்லாதது பெருங்குறை.

அதே சமயம், தமிழ்நாட்டை விடவும் கடும் வறட்சியால் பாதிப்புற்ற மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள ஐந்து கிராமங்களில் நிகழ்ந்துள்ள அதிசயத்தை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.

தமிழ்நாட்டு கிராமங்களில் தூங்கி வழியும் அதே நூறு நாள் குளத்து வேலைத்திட்டத்தால் பசுமை செழித்து, வறட்சியில் வளம்பெற்ற விவசாயிகளின் வெற்றிக் கதைகள் ஏராளம்.

அந்த மாநிலங்களில் உள்ள சில மாவட்டங்களின் கடுமையான கோடை வறட்சி பற்றிய செய்திகள் மே - ஜூன் மாதங்களில் வெளிவந்தன. மகாராஷ்டிர மாநில வறட்சியில், குறிப்பாக, குடிநீர்ப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி மும்பையில் நிகழவிருந்த டி-20, ஐ.சி.சி. கிரிக்கெட் விளையாட்டு கொல்கத்தாவுக்கு இடம் மாறியது.

மராத்வாடா மாவட்டத்தில் உள்ள ஜலானா நகரில் தண்ணீரே இல்லை. ஆனால் கட்வாஞ்சி கிராமத்தில் தண்ணீருக்குப் பஞ்சமே இல்லை. கட்வாஞ்சி கிராம மக்களின் வருமானம் கடந்த 20 ஆண்டு வறட்சிகளை சமாளித்து 700 சதவீதம் உயர்ந்துள்ளது.

அப்துல் கலாமின் இந்திய வல்லரசுக் கனவு மட்டும் அல்ல. பாரதப் பிரதமரின் "மேக் இந்தியா' கனவும் ஒரு சேர நிறைவேறியுள்ளது.

கட்வாஞ்சி கிராமத்தில் 1996-இல் நீர் நிலை மேம்பாட்டுத்திட்டம் (ரஅபஉதநஏஉஈ டதஞஎஅஙஙஉ) தொடங்கியபோது எல்லா விவசாயிகளும் மழையில்லாமல் பயிர் கருகிய கதைகளை விவரித்துள்ளனர். 2013- இல் 23 சதவீத மக்கள் மட்டுமே சாகுபடி நஷ்டமானதாகக் கூறினர். இவ்வளவுக்கும் அந்தப் பகுதியில் ஆண்டு சராசரி மழைப்பொழிவு 730 மி.மீ.

இந்த கிராமத்தில் நீர்நிலை மேம்பாட்டுத் திட்டம் செயல்பட்ட முறை மிகச்சிறப்பு. அந்தத் திட்ட அலுவலர்கள் 2002 வரை ஐந்தாண்டுகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி 1.2 கோடி ரூபாயைக் கொண்டு பழைய குளங்களின் கரைகளை உயர்த்தினர்.

அது மட்டுமல்ல, நீர் வரத்துக்கால்வாய்களைச் செப்பனிட்டனர். புதிய குளம் - குட்டைகளையும் வெட்டினர். மிக முக்கியமாக, நீர்ப்பிடிப்பு, கரைப் பகுதிகளில் வரிசையாக மரங்களை நட்டு வளர்த்தனர்.

இப்படி மரங்களை நட்டால் குளத்தில் நீர்வரத்து இருக்காது என்று அம்மக்கள் முதலில் அஞ்சினர். மரங்கள் வளர்ந்ததும் கெட்டிப்பட்ட நிலம் மிருதுவானது. புற்கள் மண்டின. சுற்றிலும் பசுமை தோன்றியதும் மழைநீர் மண்ணுள் ஈர்க்கப்பட்டு நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது. கிணறுகள் வற்றவில்லை. குளங்கள் படிப்படியாகப் பெருகின. கோடையில் மேல் மட்ட நீர் ஆவியாகாமல் தடுக்கப்பட்டது.

2015-இல் அந்த கிராமத்தில் மட்டும் 357 கசிவுநீர்க் குட்டைகள் உருவாயின. விவசாயிகள் திராட்சை சாகுபடி செய்தனர். கால்நடை உள்ளவர்கள் தீவனப்புல் சாகுபடி செய்தனர். ஜலானாவில் உள்ள கிருஷி விஞ்ஞான் கேந்திரா கசிவுநீர்க் குட்டை அமைக்கவும், திராட்சை சாகுபடிக்கும் உகந்த பயிற்சிகளை வழங்கியது.

டிசம்பர் 2014 தேசிய மாதிரி ஆய்வு அறிக்கையின்படி கட்வாஞ்சி விவசாயிகளின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.72,000. இது தேசிய சராசரியை விட நான்கு மடங்கு அதிகம்.

ஜலானாவில் கட்வாஞ்சியின் கதை வித்தியாசமானது. மத்தியப்பிரதேசத்தில் சத்ரப்பூர் மாவட்டத்தில் பல கிராமங்களில் குறிப்பாக, கரோந்தியா கிராமத்தில் முழுமையான இயற்கை விவசாயம் நிகழ்ந்துள்ளது. மிகவும் திறமையான நீர் நிர்வாகமும் மாற்றுப்பயிர்த் திட்ட அடிப்படையில் நீர்ச்சிக்கன நடவடிக்கையும் கரோந்தியாவின் சிறப்பு.

கர்நாடகாவில் ஹீலாசே காட்டே, ஆந்திராவில் கிருஷ்ணாபுரம், ராஜஸ்தானில் சாப்பாரியா கிராமம் என்று உதாரணங்களை எடுத்துரைக்கலாம். மேற்படி மாநிலங்களில் ஐந்தைத் தொடர்ந்து மேலும் பல கிராமங்களில் ஆங்காங்கே கசிவுநீர்க் குளங்களை வெட்டிப் புதிய நீராதாரங்களினால் விவசாய வருமானம் உயர்ந்து வெற்றி பெற்றுள்ளனர்.

புதிய புதிய தடாகங்கள் வெட்டி தாமரைச் செல்வங்கள் அங்கே கொழிக்கின்றன. ஆனால், இங்கோ குளத்து வேலைத்திட்டம் என்றால் தோண்டிய ஒரே குளத்தையே தோண்டிப் பசுமையை இழக்கச் செய்து, பெய்யும் மழையை மண்ணுக்குள் இறக்காமல் சூரியனுக்குத் தீனியாக வழங்கி, ஆவியாக்குவதைப் பார்க்கிறோம்.

கிராமத்தில் பல நூற்றுக்கு மேலான கசிவுநீர்க் குட்டைகளை வெட்டி தாமரை பூக்கும் தடாகங்களாக உருமாற்றி விட்டால் தரிசு நிலசுநிலங்கள் மேம்பாடு அடையும். கோடைக்காலங்களில் ஏற்படும் குடிநீர்ப் பிரச்னைக்கும் விடைகிட்டும். வேளாண்மையும் செழிக்கும்.

என்ன செய்வது? தமிழ்நாட்டில் நீர்நிலை மேம்பாட்டுத்திட்டம் முடக்கப்பட்டு, நூறு நாள் வேலைத்திட்டம் என்ற பெயரில் பலகோடி ரூபாய் விரயமாகிக் குளங்களில் உள்ள பசுமைகளை அகற்றி அது நூறு நாள் வெப்பத் திட்டமாகச் செயலாற்றினால், தாமரை பூத்த தடாகங்களை நாம் எப்படிக் காணமுடியும்?

கட்டுரையாளர்:

இயற்கை விஞ்ஞானி.

ஆர்.எஸ். நாராயணன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com