இந்திய ‘மகாராஜா’க்களுக்குப் பாடம் கற்றுக் கொடுத்த ஸ்வீடன் மகாராஜா!

சாமானிய மக்களே ராஜாக்களைப் போல நடந்து கொள்ளத் தலைப்படும் போது... நிஜமான ராஜாக்கள் சாமானியர்களைப் போல் பதவிசாக நடந்து கொண்டால் மக்கள் அவர்களை ஆச்சர்யமாகப் பார்க்கத் தொடங்கி விடுகிறார்கள்.
ஸ்வீடன் அரசரும், அரசியும்
ஸ்வீடன் அரசரும், அரசியும்

சாமானிய மக்களே ராஜாக்களைப் போல நடந்து கொள்ளத் தலைப்படும் போது... நிஜமான ராஜாக்கள் சாமானியர்களைப் போல் பதவிசாக நடந்து கொண்டால் மக்கள் அவர்களை ஆச்சர்யமாகப் பார்க்கத் தொடங்கி விடுகிறார்கள். 

நம்மூரில் தான் மன்னராட்சி இல்லையே! என்று தோன்றலாம். மன்னராட்சி இல்லையே தவிர மகாராஜாக்களின் தோரணைகள் ஒழிந்து விட்டன என்று சொல்ல முடியாது. இந்தியாவில் இன்றும்  முடிசூடிக் கொண்ட ராஜாக்களைப் பார்க்க முடியவில்லையே தவிர முடிசூடாமலே தங்களை ராஜாக்கள் போல கற்பனை செய்து கொண்டு படாடோபமான அதிகார மிடுக்குடன் வலம் வருபவர்களை அடிக்கடி பார்க்க வாய்க்கிறது தானே! அப்படிப்பட்டவர்களை அடிக்கடி கண்டு கண்கள் சோர்ந்திருப்பவர்களுக்கு இந்தச் செய்தி புத்துணர்ச்சி அளிக்கலாம்.

ஸ்வீடன் ராஜாவும், ராணியும் நேற்று அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்தார்கள். அவர்கள் பயணித்திருக்க வேண்டிய ஸ்வீடன் அரசின் தனி விமானம் புறப்படும் நேரத்தில் பழுதுபடவே, வாழ்நாள் முழுமையும் நேரம் தவறாமையைக் கடைபிடிக்க வேண்டும் என்று பயிற்றுவிக்கப்பட்டவர்களான ஸ்வீடன் ராஜாவும், ராணியும் குறித்த நேரத்தில் இந்தியா வந்தடைய வேறு விமானங்கள் ஏதேனும் உண்டா என்று தேடப் பணித்தார்கள். சரியான நேரத்தில் அவர்களுக்கு விமானம் கிடைத்தது. 

இந்திய விமான நிறுவனமான மகாராஜா ஏர் இந்தியாவின் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் டெல்லியில் இருந்து ஸ்டாக்ஹோமுக்கு நாளொன்றுக்கு மூன்று முறை இயக்கப்படுகிறது.

கடந்த ஞாயிறு அன்று ஏர் இந்தியா ட்ரீம்லைனர் விமானம் அதன் அட்டவணை நேரப்படி ஸ்டாக்ஹோமில் இருந்து பறக்க யத்தனிப்பதற்கு 6 மணி நேரங்களுக்கு முன்பு ஸ்வீடன் அரண்மனையிலிருந்து ஏர் இந்தியா அலுவலகத்துக்கு ஒரு அழைப்பு வந்தது. தங்களுக்கு ஏர் இந்தியா ட்ரீம்லைனர் விமானத்தில் 14 இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டனர். அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க 4 பிசினெஸ் கிளாஸ் இருக்கைகளும், 10 எகானமி கிளாஸ் இருக்கைகளும் முன்பதிவு செய்யப்பட்டன. பிசினஸ் கிளாஸ் இருக்கைகள் நான்கிலும் ராஜாவும், ராணியும் அவர்களது தனி உதவியாளர்களும் அமர்ந்து கொண்டனர். பதிவு செய்யப்பட்ட  எகானமி இருக்கைகளில் ராஜாவுடன் வந்த ஸ்வீடன் அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த பிறர் அமர்ந்து கொண்டதும் எஞ்சிய பிற பயணிகளுடன் ஏர் இந்தியா ட்ரீம்லைனர் விமானத்தின் (18 பிசினஸ் கிளாஸ் இருக்கைகள் + 238 எகானமி கிளாஸ் இருக்கைகள்) மொத்த இருக்கைகளும் நிறைந்தன.

அன்று தங்களது விசேஷ விருந்தினர்களை ஏற்றிக் கொண்டு மகாராஜா ஏர் இந்தியாவின் ட்ரீம்லைனர் பறக்கத் தொடங்கியது.  அரச குடும்பத்தினருடனான அந்த பயண நேரம் மொத்தமும் உடன் பயணித்த சக பயணிகளுக்கு மறக்க முடியாத அனுபவங்களில் ஒன்றாகி விட்டது.

இந்தப்பயணத்தில் ஏர் இந்தியா பெருமை கொள்ளத்தக்க விஷயங்கள் என்றால்,  மதிப்பிற்குரிய அரச குடும்பத்தினரை தங்களது விமானமொன்றின் மூலமாக இந்தியா கொண்டு வந்து சேர்த்தோம் என்பது மட்டுமல்ல;

ஏர் இந்தியா விமான நிறுவனம் தொடங்கப்பட்டது முதல் இன்று வரை பல்லாயிரக்கணக்கான பிரபலங்களை அது கண்டிருக்கலாம். அதில், இந்தியா மற்றும் அயல்நாடுகளைச் சேர்ந்த அரச குடும்பத்தினரும் கூட அடங்கலாம். அவர்களில் தாங்களும்  சாதாரண விமானப் பயணிகளில் ஒருவர் தான், தங்களுக்கென கொம்புகள் எதுவும் முளைத்திருக்கவில்லை, என்று இயல்பாக நடந்து கொண்டவர்கள் வெகு சொற்பமானவர்களே இருக்கக் கூடும். ஸ்வீடன் ராஜாவும், ராணியும் கூட அப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் இன்று அவர்களை இன்று ஏர் இந்தியா மட்டுமல்ல இந்தியாவின் அனைத்து செய்தி ஊடகங்களும் கூட புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்கின்றன.

விமானத்தினுள் பயண நேரத்தில் உள்ளிருக்கும் விமான நிலையப் பணியாளர்களுக்கு அனாவசியத் தொந்திரவு அளிப்பது, விமானத்தில் இருந்து இறங்கும் நேரத்தில் தங்களது லக்கேஜுகளை எடுத்துக் கொள்ளாமல் கை வீசிக் கொண்டு வெளியேறி விமான நிறுவன ஊழியர்களைச் சங்கடங்களுக்கு உள்ளாக்குவது. தாங்கள் அதிகார வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற ஹோதாவில் விமான ஊழியர்கள் மற்றும் சக பயணிகளை அலட்சியமாக நடத்துவது போன்ற எந்த விதமான வறட்டு மிடுக்குகளும் இன்றி ஸ்வீடன்  கிங் கார்ல் XVI குஸ்டஃப் மற்றும் அவரது மனைவியும் ஸ்வீடன் குயினுமான சில்வியா ரெனாட்டே சோமர்லாத் இருவரும் மிக சாமானியப் பயணிகள் போல ஏர் இந்தியாவில் தங்கள் பயண நேரத்தைக் கழித்தார்கள்.

- என்பது ஏர் இந்தியாவின் பெருமைக்குரிய நினைவுகூரலாக அமைந்து விட்டது. 

கூடுதலாக, கிங் கார்ல், தமது பயண நேரத்தில் இந்திய உணவு வகைகளை மிக ரசித்து உண்டார் என்பது உபரித் தகவல். அதுமட்டுமல்ல, ராஜாவும், ராணியும் தங்களது பயண நேரத்தில் விமான நிலைய ஊழியர்கள் மற்றும் அலுவலர்களின் சேவையை மெச்சவும் தயங்கவில்லை எனத் தெரிகிறது.

ஸ்வீடன் அரசரையும், அரசியையும் தாங்கிய ஏர் இந்தியா விமானம் டெல்லியை நெருங்கியதும், திட்டமிட்டவாறு வி.வி.ஐ.பிக்களைச் சுமந்து வரும் விமானம் எனும் அடையாளத்துடன் விரைவான தரையிறக்கத்திற்கான முன்னுரிமையைப் பெற்றது. அதன்படி  காலை 7.15 மணிக்கு (உள்ளூர் நேரம்) விமானம் டெல்லியில் தரையிறங்கியது. பின்னர், அங்கிருந்து ஒரு ஜீப் மூலமாக அரச தம்பதியினர் டி 3 க்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு பயணிகள் அனைவரும் ஏரோபிரிட்ஜ் வழியாக இறங்கிச் செல்ல வேண்டும். அப்போதும் சக பயணிகளுடன் பயணிகளாக சாதாரணர்கள் போல தங்கள் பைகளை தாங்களே சுமந்து கொண்டு நடந்து வந்து கொண்டிருந்த கிங் கார்ல் XVI குஸ்டாப்பின் மற்றும் குயினின் இயல்பான நடவடிக்கைகள் அங்கிருந்தவர்களை மிகவும் ஆச்சர்யப்படுத்தியது.

விமானம் டெல்லியில் தரையிறங்கியதும் ஏர் இந்தியா நிறுவனத்தின் ஸ்வீடன் மேலாளர் சங்கீதா சன்யால், ஏர் இந்தியாவின் அதிகாரப்பூர்வமான டிவிட்டர் தளத்தில்,

‘பாரம்பர்யப் பெருமை கொண்ட ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் விமானமொன்றில் மாட்சிமை பொருந்திய ஸ்வீடன் அரச குடும்பத்தினர் ஸ்டாக்ஹோம் முதல் டெல்லி வரை பயணித்தது தங்களது நிறுவனத்திற்கான பெருமைக்குரிய தருணங்களில் ஒன்று’

- என்று வாழ்த்தி வரவேற்றார். 

ஸ்வீடன் அரசர் மற்றும் அரசியின் அரசுமுறை இந்தியப் பயணம் நிறைவுற்றதும் பழுது நீங்கி தற்போது டெல்லி வந்தடைந்துள்ள ஸ்வீடன் அரசுக்குச் சொந்தமான விமானத்தில் அவர்கள் மீண்டும் ஸ்வீடன் சென்றடைவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியாவில் ஸ்வீடன் அரசரின் இந்தியப் பயணம் குறித்துப் பேசுகையில், விமான நிலைய ஊழியர் ஒருவர்; 

‘நமது இந்திய வி ஐ பிக்கள் ஸ்வீடன் அரசர் மற்றும் அரசியிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் அனேகம் உண்டு என்றார். எங்களது நிறுவன விமானங்களில் பயணிக்கையில் தாங்கள் அதிகார வர்க்கத்தினர் என்கிற மமதையில் இங்கிருப்பவர்கள் பலவிதமாக இங்கிதமில்லாமல் நடந்து கொள்வதுண்டு. அப்படிப்பட்டவர்களே அதிகமும் பார்க்க வாய்த்த ஏர் இந்தியா விமான நிலைய ஊழியர்களுக்கு ஸ்வீடன் அரசர் மற்றும் அரசியின் செருக்கற்ற இயல்பான நடத்தைகள் வரவேற்கத்தக்க மாற்றங்களாக இருந்தன’ 

- என்று குறிப்பிட்டிருந்தார்.

அவர் சொன்னதில் பிழையேதும் இருப்பதாகத் தெரியவில்லை.

ஏர் இந்தியா ஊழியர்களைப் பொருத்தவரை இந்திய அரசியல்வாதிகள் விமான நிலைய ஊழியர்களிடம் நடந்து கொள்ளும் முறை இப்படியாகத்தான் இருந்து வந்திருக்கிறது.

அதனால் தான் ஸ்வீடன் அரசர் மற்றும் அரசியின் இயல்பான குணங்களும், நடத்தைகளும் கூட அவர்களுக்கு மிகப்பெரிய ஆச்சர்யத்தை அளித்திருக்கின்றன என்று சொன்னால் மிகையில்லை.

இந்த நிகழ்வைப் பொருத்தவரையில்;

  • அரச குடும்பத்தினரின் நேரம் தவறாமை
  • அரச குடும்பத்தினராகவே இருந்த போதும் சக மனிதர்கள் மற்றும் விமான நிலைய ஊழியர்களிடம் அவர்களது எளிமையான பழகு தன்மை.
  • தமது உடமைகளைத் தாமே சுமந்து செல்வதால் அந்தஸ்துக்கு எவ்வித பங்கமும் வந்து விடாது எனும் இயல்பான மனப்பான்மை

இந்த மூன்று விஷயங்களும் இந்திய அரசியல்வாதிகள், அதிகார வர்க்கத்தினர், பிரபலங்கள், பணம்படைத்தவர்கள் எனும்  ‘மகா, மகா’ ராஜாக்கள் மட்டுமல்ல, சாமானிய மக்களான நாமும் கூட கற்றுக் கொள்ள வேண்டியவையே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com