சுடச்சுட

  

  தமிழ்நாடு தமிழனுக்கே என்று ஆவேசமாகக் கதறிக் கொண்டிருப்பவர்களுக்கு...

  By RKV  |   Published on : 05th January 2019 05:47 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  thamizhanda

   

  தமிழ்நாட்டில் தமிழர் அல்லாதோர் 40% பேர் வாழ்கிறார்கள். வாழ்கிறார்கள் என்றால் சும்மா ‘வந்தேறிகள்’ என்று அவர்களை துச்சமாக நினைத்து விட முடியாது. அவர்களெல்லோரும் பல தலைமுறைகளாக இங்கே தமிழ் மக்களோடு மக்களாக இரண்டறக் கலந்து இன்றைக்கு தமிழர்களைக் காட்டிலும் மிக அட்சர சுத்தமாக தமிழைக் கற்றுக் கொண்டு தமிழில் சுவாசித்து தமிழில் உணவுண்டு தமிழில் கல்வி கற்று தமிழ் முறைப்படி (இந்த தலைமுறைத் தமிழர்கள் முறைப்படி) திருமணம் செய்து தமிழர்களாகவே வாழ்ந்து தமிழராகவே மறையக் கூடியவர்கள். ஆனால் இங்கென்ன வாழுகிறது என்றால்? சில வாரங்களுக்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் நீயா நானாவில் காட்சிப்படுத்திய விதத்தில் பார்த்தால் தமிழராகப் பிறந்து தமிழில் பேசுவது தரக்குறைவு என்று கருதுபவர்கள்  தான் அனேகம் பேர் இருக்கிறார்கள். அவர்களிலும் இளைய தலைமுறையினருக்கு தமிழ் வாசிக்கத் தெரியாது என்று சொல்லிக் கொள்வது ஒரு பெரிய ஃபேஷனாகிப் போய் விட்டது தற்போது. 

  இதை எதற்காகச் சொல்கிறேனென்றால்? 

  இங்கே ஒரு கூட்டம் அலைகிறது...

  ‘தமிழ்நாடு தமிழனுக்கே’ என்று மூச்சுக்கு மூச்சு ஆவேஷமாகக் கதறிக் கொண்டு...

  கதறலில் தவறில்லை. ஒருவகையில் அது சரியான வாதமே! ஆனால் கதறுபவர்களின் நோக்கம் தான் சரியானதாக இல்லை. இங்கே தமிழுக்காகவும், தமிழனுக்காகவும் கதறும் எல்லோருக்குமே நாற்காலி கனவும், அதிகாரக் கனவுகளும் தான் விஞ்சி நிற்கிறதே தவிர... தமிழனை முன்னேற்ற என்னவெல்லாம் செய்யவேண்டும் என்ற செயலூக்கம் கொஞ்சமும் இருப்பதாகத் தெரியவில்லை.

  இதற்கு நடுவே கதறுபவர்கள் அனைவரிடமும் கேட்டாக வேண்டிய ஒரு கேள்வி... உங்களுக்கு நிச்சயமாகத் தெரியுமா? நீங்கள் சுத்தமான தமிழர் தானா என்று?

  உங்களது குருதியில் பிறமொழிகளின், பிற கலாச்சாரங்களின், பிற இனங்களின் கலப்பு என்பதே அறவே இல்லையா? உங்களால் அதை அறிவியல்பூர்வமாக நிரூபிக்க முடியுமா? நிச்சயமாக நம்மில் எவராலும் அது முடியாத காரியம். காரணம் மனித நாகரீகம் என்பதே இனக்கலப்பில் தான் அஸ்திவாரமிடப்பட்டிருக்கிறது. இதில் தமிழரென்றும், தெலுங்கரென்றும், மலையாளிகளென்றும், கன்னடரென்றும், வட நாட்டாரென்றும் எங்கே, எப்போது நாம் அறியப்பட வேண்டும் தெரியுமா?

  அதைத்தான் நாமக்கல் கவிஞர் அன்றே தெளிவாகச் சொல்லிச் சென்றிருக்கிறாரே!

  ‘தமிழன் என்றோர் இனமுண்டு
  தனியே அவற்கொரு குணமுண்டு
  அமிழ்தம் அவனுடை மொழியாகும்
  அன்பே அவனுடை வழியாகும்

  அறிவின் கடலைக் கடைந்தவனாம்
  அமிர்தத் திருக்குறள் அடைந்தவனாம்
  பொறியின் ஆசையைக் குறைத்திடவே
  பொருந்திய நூல்கள் உரைத்திடுவான்

  கலைகள் யாவினும் வல்லவனாம்
  கற்றவர் எவர்க்கும் நல்லவனாம்
  நிலைகொள் பற்பல அடையாளம்
  நின்றன இன்னும் உடையோனாம்

  சிற்பம் சித்திரம் சங்கீதம்
  சிறந்தவர் அவனினும் எங்கே சொல்
  வெற்பின் கருங்கல் களிமண்போல்
  வேலைத் திறத்தால் ஒளிபண்ணும்

  மானம் பெரிதென உயிர்விடுவான்
  மற்றவர்க் காகத் துயர்படுவான்
  தானம் வாங்கிடக் கூசிடுவான்
  தருவது மேல் எனப் பேசிடுவான்’

  தமிழன் என்றால் இந்தக் குணங்கள் எல்லாம் இருக்க வேண்டும். இவற்றில் எதுவொன்றும் இல்லாத மற்றவர்களின் வெற்றுக்கூச்சல் இங்கிருக்கும் மாற்றுமொழி பேசுவோரால் வெறும் வெற்றுக்கூச்சலாகவே கருதப்படலாம்.

  நமக்கு நம்முடைய நாமக்கல் கவிஞர் இப்படிச் சொல்லிச் சென்றதைப் போலவே அனைத்து மொழிகளிலும் சான்றோர் பலர் இருந்து இம்மாதிரியான மேலான கருத்துக்களை விதைத்துத் தான் சென்றிருப்பார்கள். அவற்றையெல்லாம் மதிக்கக் கூடியவர்கள் இப்படி மொழி சார்ந்து மக்களை பேதம் பிரிக்க நினைக்கமாட்டார்கள். 

  கடந்த வருடம் கீழடி அகழ்வாராய்ச்சி நிகழுமிடம் சென்றிருந்தோம். அங்கிருந்த அதிகாரியொருவரிடம் ‘இங்கே கிடைத்த ஆவணங்களை வைத்துப் பார்த்தால் நம் பண்டைத் தமிழகம் தான் நனி சிறந்த நாகரீகம் கொண்ட பிரதேசமாக இருந்திருக்கக் கூடும் என்கிறார்களே! வடக்கில் உள்ளோர் தங்கத்தைப் பற்றி அறிந்திராத காலத்திலேயே நம்மூர் பெருவணிகப் பெருஞ்செல்வந்தர் வீட்டுப் பெண்டிர் தங்களது பெயர் பொரித்த தங்க நாணயங்களைப் புழங்கி இருக்கிறார்களாமே? அப்படியானால் இந்தியாவில் தமிழ்மொழி தான் உயர்ந்தது இல்லையா? என்று பேசிக்கொண்டிருந்த போது அவர் சொன்ன தகவல்... அப்படிச் சொல்வதில் தவறேதும் இல்லை. ஆனால், இதே விதமாக இந்தியாவில் இருக்கும் அத்தனை மாநிலத்தவர்களும் தங்களுடைய பண்பாடு தான் உயர்ந்தது, தங்களது மொழி தான் செறிவானது, செவ்வியல் தன்மை கொண்டது என்று அவரவர் ஆதாரங்களை முன் வைப்பார்கள். இதெல்லாம் எதற்கு? அவரவர்க்கு அவரவர் மொழியும், பண்பாடும், கலாச்சாரமும் உயர்ந்ததாக இருந்து விட்டுப் போகட்டும். இதில் மற்றவருக்கு என்ன நஷ்டம்? ஒவ்வொருவரும் தங்களது பண்பாடு தான் மற்றவர்களைக் காட்டிலும் சிறந்ததாக இருக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு சண்டைக்கும், தர்க்கத்துக்கும் புறப்படும் போது தான் தேவையற்ற கலவரங்கள் நேர்கின்றன என்றார்.

  எங்களுக்கு பதில் சொன்னவர் தமிழரே!

  அவர் சொல்வதில் தவறேதும் காண முடியுமா?

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai