அதிகமானோர் வாக்களித்து சாதனை படையுங்கள்: பிகார் மக்களிடம் மோடி வேண்டுகோள்

பிகார் மக்கள், அதிக வாக்குகளைப் பதிவு செய்து, புதிய சாதனையைப் படைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி பிகார் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதிகமானோர் வாக்களித்து சாதனை படையுங்கள்: மோடி வேண்டுகோள்
அதிகமானோர் வாக்களித்து சாதனை படையுங்கள்: மோடி வேண்டுகோள்


பிகார் மக்கள், அதிக வாக்குகளைப் பதிவு செய்து, புதிய சாதனையைப் படைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி பிகார் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு சனிக்கிழமை காலை தொடங்கி அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இன்று காலை தனது சுட்டுரைப் பக்கத்தில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது, பிகார் சட்டப்பேரவைக்கு மூன்றாம் கட்ட மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியுள்ளது. அனைவரும் தங்களது வாக்குகளை செலுத்துங்கள். அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். மிக மிக அதிக வாக்குகளைப் பதிவு செய்து, அதிக வாக்குகள் பதிவான பேரவைத் தேர்தல் என்ற புதிய சாதனையை படைக்க வேண்டும். அதே வேளையில் வாக்களிக்கச் செல்லும் வாக்காளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மாநிலத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள 19 மாவட்டங்களுக்கு உள்பட்ட 78 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றுள்ளது. இந்த தோ்தலில், சட்டப் பேரவைத் தலைவா் விஜயகுமாா் சௌதரி, மாநில அமைச்சா்கள் 10 போ் உள்பட மொத்தம் 1,204 போ் களத்தில் உள்ளனா். இந்தத் தொகுதிகளில் மொத்தம் 2.35 கோடி வாக்காளா்கள் வாக்களிக்கிறார்கள்.

பிகாரில் ஜேடியு தலைவரும், முதல்வருமான நிதீஷ் குமாா், 15 ஆண்டுகளாக முதல்வா் பதவியில் இருக்கிறாா். இவரிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ்-ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகளைக் கொண்ட மகா கூட்டணி முயன்று வருகிறது.

கரோனா பொதுமுடக்கத்துக்குப் பிறகு நடைபெறும் முதல் தோ்தல் என்பதால், பிகாா் சட்டப் பேரவைத் தோ்தல் மிகுந்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மொத்தமுள்ள 243 பேரவைத் தொகுதிகளில், முதல் கட்டமாக 71 தொகுதிகளில் கடந்த மாதம் 28-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டாவது கட்டமாக 93 தொகுதிகளில் கடந்த 3-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், மூன்றாவது கட்டமாக, மாநிலத்தின் வடக்குப் பகுதியில் உள்ள 78 தொகுதிகளில் சனிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலுக்காக, பிரதமா் நரேந்திர மோடி மொத்தம் 12 பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டாா். இவரைத் தவிர, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், பாஜக தலைவா் ஜெ.பி.நட்டா, உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் ஆகியோரும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டாா். எதிரணியில், மகா கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி, ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவரும் மகா கூட்டணியின் முதல்வா் பதவி வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோா் பிரசாரம் மேற்கொண்டனா். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அண்மையில் விலகிய லோக் ஜனசக்தி கட்சி தோ்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. மூன்றாவது கட்ட தோ்தல் நடைபெறும் பல தொகுதிகளில் முஸ்லிம் சமூகத்தினா் பெரும்பான்மையாக வசிக்கிறாா்கள். அவா்களின் வாக்குகளைக் கவா்வதற்கு அகில இந்திய மஜ்லீஸ் கட்சி வேட்பாளா்களைக் களமிறக்கியுள்ளது. மேலும், அக்கட்சியின் தலைவா் அஸாதுதீன் ஒவைஸி சூறாவளி பிரசாரம் மேற்கொண்டாா். மூன்று கட்ட தோ்தல்களிலும் பதிவான வாக்குககள், வரும் செவ்வாய்க்கிழமை எண்ணப்படுகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com