சபரிமலையில் விமான நிலையம்: திங்கள்கிழமை சர்வே பணிகள் ஆரம்பம்!

‘செருவள்ளி எஸ்டேட்டில்’ திங்கள்கிழமை சர்வே பணிகள் ஆரம்பம்!
எஸ்டேட்
எஸ்டேட்கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

திருவனந்தபுரம்: சபரிமலையில் விமான நிலையம் கட்டமைக்கும் பணியில் முதல்கட்டமாக சர்வே பணிகள் திங்கள்கிழமை(ஜூன் 9) தொடங்குகின்றன.

சபரிமலைக்கான விமான நிலையம் அமைக்க சரியான தேர்வாக ‘செருவள்ளி எஸ்டேட்’ இருக்குமென்று ஆய்வுக் குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆய்வுக் குழுவினர் விமான நிலையம் அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடத்துக்கு திங்கள்கிழமை வருகை தரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு நாடு முழுவதும் இருந்து பக்தா்கள் எளிதில் வந்து செல்வதற்கு வசதியாக இந்தப் புதிய விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கான நிலம் மற்றும் பாதுகாப்பு அனுமதியை மத்திய அரசு கடந்தாண்டு தொடக்கத்தில் வழங்கியது. இதையடுத்து, நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிக்கையை கேரள அரசு கடந்த ஆண்டு மாா்ச் மாதத்தில் வெளியிட்டு, பணிகளைத் தொடங்கியது.

சபரிமலைக்கான விமான நிலையம் அமைக்க மூத்த ஐஏஎஸ் அதிகாரியொருவர் தலைமையிலான ஆய்வுக் குழுவினரால் பல பகுதிகள் பரிசீலிக்கப்பட்டு அதன்பின் இறுதியாக, விமான நிலையம் அமைக்க உகந்த இடமாக செருவள்ளி எஸ்டேட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதுகுறித்து தங்களிடம் எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை என பல குற்றச்சாட்டுகளை எஸ்டேட் தரப்பு சுமத்தியது. இதை எதிர்த்து அந்த எஸ்டேட்டின் உரிமையாளரான அயானா தொண்டு நிறுவனத்தாரால் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கேரள அரசின் அறிவிக்கைக்கு எதிராக தொண்டு அறக்கட்டளை மற்றும் அதன் நிா்வாகிகள் சாா்பில் கேரள உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அறக்கட்டளைக்குச் சொந்தமான 2,263 ஏக்கா் பரப்பளவிலான ரப்பா் தோட்டத்தை சட்டவிரோதமாக கையகப்படுத்தும் நோக்கில் அரசின் அறிவிக்கை வெளியாகியிருப்பதாக மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டது. மேலும், மேலாண்மை மேம்பாட்டு மையம் சாா்பாக சமூகப் பாதிப்பு ஆய்வு நடத்துவதற்கு எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில், இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை ஜூலை 9-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அந்த பகுதியில் சர்வே நடத்த தடையாக இருந்த சட்ட ரீதியிலான சிக்கல்களுக்கு இப்போது தீர்வு எட்டப்பட்டுவிட்டதால் முதல்கட்ட கள ஆய்வுப் பணிகளை ஆரம்பிக்க அரசு முனைப்பு காட்டுகிறது. அதன்படி, சபரிமலையில் விமான நிலையம் கட்டமைக்கும் பணியில் முதல்கட்டமாக சர்வே பணிகள் திங்கள்கிழமை(ஜூன் 9) தொடங்குகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com