Enable Javscript for better performance
110. உறவறுக்கும் நேரம்- Dinamani

சுடச்சுட

  

   

  ‘தயவுசெய்து அண்ணாவை கேலி செய்து பேசாதே’ என்று வினோத் என்னிடம் சொன்னான். உண்மையில் என் நோக்கம் அதுவல்ல என்றாலும், வினோத்துக்கு அவன் மீதிருந்த லயிப்பும் சிலிர்ப்பும் நிச்சயமாக எனக்கு இல்லை என்பதை அவனுக்குத் தெரியப்படுத்திவிட விரும்பினேன். ஆனால், ஒவ்வொரு முறை நான் அதைச் சொல்ல ஆரம்பிக்கும்போதும் அவன் அண்ணாவைப் பற்றி என்னவாவது ஒரு கதையை எடுத்து விரித்துவிடத் தயாராக இருந்தான்.

  ஒரு சமயம் அவன் தங்கியிருந்த மாயாபூர் கோயிலையும் அதனை ஒட்டிய இஸ்கான் கட்டடங்களையும் விஸ்தரிக்கும் பணி நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஆரம்பத்தில் எல்லாம் முன்புற ஓலைச் சரிவு போடப்பட்ட எளிய கட்டடங்களாகத்தான் இருந்தன என்று வினோத் சொன்னான். பிறகு பக்தர்கள் பெருகத் தொடங்கினார்கள். வெளிநாட்டு பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது. அதனை ஒட்டிப் பணவரவும் அதிகரித்தது. கிருஷ்ணரையும் பலராமரையும் ராதையையும் இன்னும் சற்று வசதியாக வாழவைக்கலாமே. கட்டுமான வேலைகள் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தபோது ஓர் இளம் சன்னியாசியாக வினோத் தனது சக கிருஷ்ண பக்த சன்னியாசிகளோடு சேர்ந்து அதனை மேற்பார்வை பார்த்துக்கொண்டிருந்திருக்கிறான். பகல் முழுதும் வெயிலில் நின்றுவிட்டு களைத்துப் போய் மதியம் மூன்று மணி சுமாருக்கு ஒரு மரத்தடியில் வந்து அமர்ந்தான். அது ஒரு அரச மரம். ஆனால், அவன் அம்மரத்தடியில் அமர்ந்தவுடன் மரத்தின் மீதிருந்து ஒரு மாம்பழம் விழுந்ததாக வினோத் சொன்னான்.

  திடுக்கிட்டு அவன் மேலே பார்த்தபோது அங்கு யாரும் இல்லை. அரச மரத்தில் மாம்பழம் பழுக்கவும் வாய்ப்பில்லை. என்றால் பழம் எங்கிருந்து வந்திருக்கும்? அதிக நேரம் யோசித்துக்கொண்டிருக்கப் பசி இடம் தராததால், அவன் பழத்தை எடுத்துச் சாப்பிட ஆரம்பித்தான். சாப்பிட்டு முடிக்கும்வரை அவனுக்கு அந்த வியப்புத் தீரவில்லை. அது கிருஷ்ணரே அளித்த உணவு என்றுதான் நினைத்தான். ஆனால் உண்டு முடித்தபின் அவனை நோக்கி ஒரு காகித அம்பு பறந்து வந்து விழுந்திருக்கிறது. எடுத்துப் பார்த்தால் அது ஒரு ஒற்றை வரிக் கடிதம்.

  ‘நீ பசித்திருக்கிறாய். ஆனால் ஆசிரமத்தில் உணவு தீர்ந்துவிட்டது. அதனால்தான் பழத்தை அனுப்பிவைத்தேன். இரவு உனக்குரிய சப்பாத்திகள் கிடைக்கும்போது மறக்காமல் அதில் இரண்டை வீதியில் காத்திருக்கும் பிச்சைக்காரனுக்குப் போட்டுவிடு’ என்று எழுதியிருக்கிறது.

  ‘அந்தக் கணம் அந்தக் கடிதத்தை எழுதியது அண்ணாதான் என்று என் மனத்துக்குள் தீர்மானமாகத் தெரிந்துவிட்டது’ என்று வினோத் சொன்னான்.

  ‘இது என்ன அநியாயம்? அது ஏன் கிருஷ்ண பரமாத்வாவாகவே இருக்கக் கூடாது?’

  ‘இல்லை. என் மனத்தில் எப்போதாவது இப்படி ஒன்று தோன்றும். அது சரியாக இருக்கும். திருமணத்துக்கு முதல் நாள் உறக்கத்தில் கிருஷ்ணனைப் பார்த்தேன் என்றேனே, அதுவும் இப்படித்தான்’.

  ‘எப்படி?’

  ‘உறக்கத்தில் ஒரு பெரிய ஒளிக்கோளம் எனக்குத் தென்பட்டது’ என்று அவன் ஆரம்பித்ததுமே, ‘அது ஏன் சிவனாக இருக்கக் கூடாது?’ என்று வினய் கேட்டான்.

  ‘இல்லை. அதைத்தான் சொல்ல வருகிறேன். அந்த ஒளிக்கோளம் என் கண்ணில் தென்பட்டதுமே அது கிருஷ்ணன் என்று என் மனத்தில் ஒரு குறிப்பு உண்டாகிவிட்டது. எனவே அதை நான் கிருஷ்ணனாக மட்டுமே பார்த்தேன்’.

  ‘அவன் கையில் குழல் இருந்ததா? தலையில் மயிலிறகு சொருகியிருந்தானா? உண்மையிலேயே அவன் நீலமாகத்தான் இருந்தானா?’

  ‘எதுவுமே இல்லை. வெறும் ஒளி. ஒளிப்பந்து. அவ்வளவுதான். இறைவனுக்கு நாம் எப்படி உருவம் தர இயலும்? நாம் தரும் உருவத்தை மனிதப் பிறவியல்லாத இன்னொரு உயிரினம் எப்படிக் கொடுக்கும்?’

  ‘நியாயம். அதனால்தான் அவன் பன்றிகளுக்கு வராகமாகவும் நாய்களுக்கு பைரவராகவும் காட்டு மிருகங்களுக்கு நரசிம்மமாகவும் கடல்வாழ் உயிரினங்களுக்கு மச்சமாகவும் ரெடிமேட் அவதாரங்கள் எடுத்து வைத்திருக்கிறான்’.

  ‘கிண்டல் வேண்டாம்’ என்று வினோத் மீண்டும் சொன்னான்.

  ‘ஆனால் உங்கள் இயக்கத்தில் உருவ வழிபாடுதானே நடக்கிறது? எனக்கென்னவோ வடக்கத்தி உருவச் சிலைகளைக் கண்டால் பக்தியே வருவதில்லை’ என்று வினய் சொன்னான்.

  ‘உணர்ந்தவனுக்கு உருவம் அநாவசியம். உணரும் வரை எல்லாமே அவசியம்’ என்று வினோத் சொன்னான்.

  வேறொரு சமயம் அவன் கல்கத்தாவில் ஹூப்ளி நதிக்கரை ஓரம் நடந்துகொண்டிருந்தபோது இளம் துறவி ஒருவரைச் சந்தித்திருக்கிறான். மிஞ்சினால் பத்தொன்பது அல்லது இருபது வயதுக்கு மேல் அவருக்கு இராது. கரையோரம் அமர்ந்துகொண்டிருந்த அந்த இளம் துறவி, சட்டென்று எழுந்து நதிப்பரப்பின் மீது நடந்துசெல்ல ஆரம்பித்ததும் வினோத் திகைத்துவிட்டான். அதற்கு மேல் அவனால் நடக்க முடியவில்லை. நீரின் மீது நடந்துசெல்லும் துறவியையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு நின்றிருக்கிறான். அவரும் நடைப்பயிற்சிக்காகத்தான் வந்திருக்க வேண்டும். ஒரு மாறுதலுக்குத் தண்ணீரின் மீது நடந்துவிட்டு அரை மணியில் கரை திரும்பிவிட்டார்.

  ஆர்வம் தாங்கமாட்டாமல் வினோத் அவரிடம் ஓடிச் சென்று, ‘சுவாமி..’ என்று அழைத்தான்.

  திரும்பிப் பார்த்துப் புன்னகை செய்த அந்த இளம் துறவி, ‘நீங்கள் யதுநந்தன தாஸ் அல்லவா? வாருங்கள். உங்களுக்காகத்தான் காத்திருக்கிறேன்’ என்று சொன்னார். வினோத்தால் நம்பவே முடியவில்லை. ‘எனக்காகவா? என்னை எப்படி நீங்கள் அறிவீர்கள்?’

  ‘உங்கள் அண்ணா சொல்லியிருக்கிறார்’ என்று அவர் சொன்னார்.

  ‘அண்ணாவை உங்களுக்குத் தெரியுமா?’

  ‘நான் அவரது மாணவன்’.

  ‘அப்படியா? நீங்கள் நீரின் மீது நடப்பதைக் கண்டேன்’.

  அவர் புன்னகை செய்தார். ‘இது சில மூச்சுப் பயிற்சிகளின் மூலம் சாத்தியமாவது. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் அனைத்தையும் மூச்சுக் காற்றின் மூலம் கட்டி ஆளலாம். ஆனால், யோகம் என்பது அதைத் தாண்டி நெடுந்தூரம் செல்ல வேண்டியது. நான் வெறும் பாலகன்’.

  ‘அண்ணா எப்படி இருக்கிறான்? அவன் எங்கே இருக்கிறான் என்று தெரியுமா? என்னை அழைத்துச் செல்வீர்களா?’

  ‘மன்னியுங்கள். எனக்கு அதற்கு அனுமதியில்லை. ஆனால் உங்கள் அண்ணா உங்களை ஒருவாரம் திட உணவு எதையும் உட்கொள்ள வேண்டாம் என்று சொல்லச் சொன்னார்’,

  வினோத்துக்கு வியப்பாகிவிட்டது. ‘ஏன்?’ என்று கேட்டான்.

  ‘உங்களுக்கு ஒரு விஷக்காய்ச்சல் வரவிருக்கிறது. மருந்து சாப்பிட்டு, ஓய்வெடுத்து குணப்படுத்தப் பார்த்தால், ஒரு மாத காலத்துக்கு அது இருந்துவிட்டுப் போகும். மாற்று வழியாக நாளை முதல் ஒரு வார காலத்துக்கு துளசி தீர்த்தம் மட்டும் குடித்து வந்தால், எட்டாம் நாள் அது சரியாகிவிடும் என்று அவர் சொல்லச் சொன்னார்’.

  ‘அப்படியா? வெறும் நீர் அருந்தி என்னால் பிழைத்திருக்க முடியுமா? அதுவும் ஒருவாரம்’.

  ‘முடியும். உங்களுக்கு மட்டுமல்ல. உங்களுடைய இன்னொரு சகோதரருக்கும் நாளை முதல் அதே காய்ச்சல் தாக்கும்’ என்று அந்த இளம் துறவி சொன்னதாக வினோத் சொன்னபோது, வினய், ‘டேய் அது நாந்தான்’ என்று கத்தினான்.

  நான் சிரித்துவிட்டேன்.

  ‘வினய், என்ன ஒரு ஓரவஞ்சனை பார். அவனுக்கு வைத்தியம் சொன்னவன் உன்னை அம்போவென்று விட்டுவிட்டான்’.

  ‘உண்மையாகவா? உனக்கும் விஷக்காய்ச்சல் வந்ததா?’ என்று வினோத் கேட்டான்.

  ‘ஆம். ஒரு மாதம். சரியாக ஒரு மாதம். கிட்டத்தட்ட இறந்து மீண்டேன்’ என்று வினய் சொன்னான்.

  ‘ஆனால் நான் அண்ணா சொன்ன துளசி தீர்த்தத்தை மட்டுமே ஒரு வாரம் அருந்தி வந்தேன். எட்டாம் நாள் காய்ச்சல் போய்விட்டது’ என்று சொன்னான்.

  ‘அந்த இளம் துறவியை நீ மீண்டும் சந்தித்தாயா? அண்ணாவிடம் உன்னைக் கூட்டிச் சென்றானா?’ என்று கேட்டேன்.

  ‘இல்லை. அப்போது அது நடக்கவில்லை. ஆனால் நான் அண்ணாவை வேறொரு சந்தர்ப்பத்தில் சந்தித்தேன்’.

  ‘எங்கே? எப்போது?’

  ‘கயாவில் அவன் அப்பாவுக்கு சிராத்தம் செய்ய வந்திருந்தான்’.

  எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அப்பாவுக்கு சிராத்தம் செய்திருக்கிறான். தம்பிகளை எந்நேரமும் கண்காணித்துக்கொண்டிருந்திருக்கிறான். என்னை மட்டும் கண்டுகொள்ளவில்லை என்றாலும் மற்ற அனைவரையும் அவன் பொருட்படுத்தாமல் இல்லை. யார் கண்டது? கேசவன் மாமாவுக்குக்கூட அவன் ஏதேனும் செய்திருக்கலாம். அம்மாவுக்கும்கூட.

  ‘வினோத், இப்போதும் சொல்கிறேன். எனக்கென்னவோ அவன் யோகியாகித் தவம் செய்யப் போனவனாகத் தோன்றுவதே இல்லை. அரபு தேசத்தில் வேலை கிடைத்துப் போய் அங்கிருந்து பணம் அனுப்பும் ஒரு நல்ல மூத்த மகனாகத்தான் தோற்றமளிக்கிறான். கல்யாணம் மட்டும்தான் பண்ணிக்கொள்ளவில்லை. மற்றபடி நம் அப்பா அம்மாவைவிட அவன் பெரிய குடும்பி என்றுதான் தோன்றுகிறது’.

  ‘இல்லை விமல். நீ நினைப்பது தவறு. அவன் பெரிய யோகி. மிகப்பெரிய மகான். முக்காலமும் அறிந்தவன். ஒன்று தெரியுமா? அம்மாவின் மரணத்தை அவன் எனக்குப் பத்து வருடங்களுக்கு முன்னதாகத் தெரிவித்திருக்கிறான். தேதி, நாள், கிழமை, நேரம் உள்பட’.

  ‘அப்படியா? அம்மா எப்போது இறப்பாள்?’

  ‘இன்று செவ்வாய் அல்லவா? வியாழன் இரவு பதினொன்று இருபத்தெட்டுக்கு அவள் காலமாவாள். வெள்ளி காலை ஏழு மணிக்குத் தகனம் நடக்கும்’.

  நானும் வினய்யும் பேச்சற்றுப் போனோம். வினய்தான் முதலில் சுதாரித்து, மெல்லக் கேட்டான், ‘அவன் வருவானல்லவா?’

  ‘நிச்சயமாக வருவான். அவளுக்குக் கொள்ளி வைப்பதோடு குடும்ப உறுப்பினர்களுடனான தொடர்பு முடிந்துவிடும் என்று சொல்லியிருக்கிறான்’.

  (தொடரும்)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai