விபத்து, தீ தடுப்பில் திருச்சி டிஎஸ்பி!
திருச்சியில் முதலுதவி சிகிச்சை, தீ தடுப்பு, வாகன விபத்து தடுப்பு விழிப்புணர்வு உள்ளிட்ட சேவைகளை செய்துவரும் டி. சீனிவாச பிரசாத் பற்றி...

டி. சீனிவாச பிரசாத் - Dinamani
சித்த மருத்துவர், அக்குபஞ்சர் சிகிச்சை கற்றவர், ஓவியர், கைவினைக் கலைஞர், கர்நாடக இசை பயின்றவர், முதலுதவி சிகிச்சை அளிப்பவர், தீ தடுப்பு, வாகன விபத்து தடுப்பு விழிப்புணர்வு பிரசாரகர் என பன்முகம் கொண்டவர் டி. சீனிவாச பிரசாத் (66).
திருச்சி, திருவரங்கத்தைச் சேர்ந்த இவர், டிஎஸ்பி என தனது பெயரை ஆங்கிலத்தில் சுருக்கி பயன்படுத்துகிறார். 25 வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையை தொடங்கி, 41 ஆண்டுகளுக்கும் மேலாக இடைவிடாது இயங்கி வருகிறார்.
திருவரங்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு வரை பயின்று, இளம் வயதில் கிடைக்கின்ற வேலை செய்தவருக்கு, 1985-இல் ரயில்வே கலாசி பணி கிடைத்தது. பள்ளிப் பருவத்திலேயே என்சிசி, சாரணர் இயக்கத்தில் இருந்ததால், ரயில்வே வேலைக்கு வந்த பிறகு தனியே சாரணர் பிரிவை ஏற்படுத்தி, தன்னைப் போல் உள்ள ரயில்வே ஊழியர்களில் சிலரை இணைத்து கடற்படை சாரணர் இயக்கம் என்ற பெயரில் சேவையை தொடங்கினார். பள்ளிப் வருவத்தில் சாரணர் இயக்கத்தில் குரூப் லீடராக இருந்ததால், அதில் கிடைத்த முதலுவி பயிற்சிதான், இவருக்கு சமூக சேவைக்கான பெரிதும் உந்துதலாக அமைந்தது. தனியாக ஒரு பிரிவையும் அமைக்க முடிந்தது. மேலும், தான் பணிபுரியும் இடத்திலோ, செல்லும் இடத்திலோ, வீட்டுக்கு அருகிலோ யாருக்கேனும் வாகன விபத்து, மரத்திலிருந்து தவறி விழுதல், தீ விபத்து என சிறிய, சிறிய விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கத் தொடங்கினார். இதற்காகவே, மதுரையில் சித்த மருத்துவ குருகுல கல்வியில் சேர்ந்து பதிவு பெற்ற மருத்துவரானார். அதோடு நிற்காமல் அக்குபஞ்சர் மருத்துவமும் கற்று, வண்ணங்களால் சிகிச்சையளிகக்கும் முறையை கற்றார். மேலும், மூலிகைகளை கொண்டு ஆங்கில மருத்துவத்தில் காயங்களுக்கு முதலுதவி சிசிகிச்சை அளிக்கப் பயன்படுத்தும் மருந்துகளுக்கு நிகரான மூலிகை மருந்தை தானே தயாரித்து பயன்டுத்தத் தொடங்கினார்.

அடிபட்ட காயம், வெட்டுக் காயம், சிராய்ப்பு, சைலன்ஸர் சூடு, தீக் காயம் உள்ளிட்டவற்று இந்த மருந்து பெரிதும் பலனை அளிக்கிறது. இதேபோல, டிஞ்சர் அயோடினைப் போன்று செயலாற்றும் மூலிகை மருந்தையும் தயாரித்து பயன்படுத்துகிறார்.
1986இல் அலகாபாத் திரிவேணி சங்கமம் நெரிசலில் மீட்புப் பணியாற்றியவர். 1997இல் தஞ்சாவூர் பெரிய கோயில் தீ விபத்து மீட்புப் பணியிலும் பங்களித்தவர். இந்த விபத்துகளை நேரில் பார்வையிட்டதாலேயே உயிர் காக்கும் சேவையில் இடைவிடாது பணிபுரிந்து வருகிறார். இதற்காகவே மிதிவண்டி மற்றும் மொபட் என இரண்டு வாகனங்களை பயன்படுத்துகிறார். உள்ளூரில் இருந்தால் மிதிவண்டி மூலம் சாலைகளில் சுற்றி வந்து சிறிய, சிறிய விபத்துகளில் சிக்கி காயமடைந்தோருக்கு முதலுதவி செய்கிறார். வெளி மாவட்டங்களுக்கு சென்றால் மொபட்டில் செல்கிறார். தனது வாகனத்திலேயே தீயணைப்பான் கருவி, முதலுதவி பெட்டி, மருந்துகள், மருத்துவ உபகரணங்களை உடன் எடுத்துச் செல்கிறார். நாளொன்றுக்கு 40 கி.மீ. சாலையை சுற்றி வந்து சேவை அளிக்கிறார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் தீ விபத்து, பட்டாசு விபத்து தடுப்பு குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தையும் தனது நடமாடும் வாகனத்தில் ஒலி பெருக்கி மூலமாக மேற்கொள்வது வழக்கம்.
இதுமட்டுமல்லாது, பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு உரையாற்றுவது, அகில இந்திய வானொலி நிலையத்தின் திருச்சி பிரிவின் மூலம் விழிப்புணர்வு நிகழ்வு, சேவை சங்கங்கள் விழாவில் பங்கேற்று முதலுதவி, தீ தடுப்பு குறித்து உரையாற்றுவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளளார்.
திருச்சியிலிருந்து புதுச்சேரி வரை சென்று விழிப்புணர்வு ஏற்டுத்தியதற்காக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நேரில் அழைத்து பாராட்டி கெளரவித்துள்ளார். இதுமட்டுமல்லாது அரசின் பல்வேறு துறைகள், தொண்டு நிறுவனங்கள், அரிமா, ரோட்டரி சங்கங்கள், சமூக அமைப்புகள் பலவற்றின் விருதுகளையும், கேடயங்களையும் பெற்றுள்ளார். இந்த வரிசையில், சென்னையில் நடைபெற்ற அறக்கட்டளை விழாவில், பெற்ற நல் சமாரியன் என்ற விருதுதான் இவரது அடையாளமாக மாறிப் போனது. தனது மகன் 17 வயதிலேயே மரத்திலிருந்து விழுந்து உயிரிழக்க நேரிட்டாலும், இருவரை வளர்ப்பு மகளாக பெற்று திருமணம் செய்து கொடுத்துள்ளார். கோழி முட்டையில் துளையிட்டு அதனுள் ஓவியம் வரைதல், கொப்பரை தேங்காயை செதுக்கி ஓவியபம் வடிக்கும் திறனைக் கொண்டுள்ளார். கர்நாடக சங்கீதத்தை கற்று கடம், மேளம் வாசிக்கிறார். பன்முகத் திறன்களை தன்னகத்தே கொண்டிருந்தாலும் உயிர் காக்கும் சேவையை தனது உயிர்மூச்சாகக் கொண்டு 41 ஆண்டுகளாக இயங்கி வருகிறார்.

தன்னிகரில்லா தனது சேவை குறித்து சீனிவாச பிரசாத் கூறுகையில், "12ஆம் வகுப்புக்கு பிறகு கல்வியை தொடர விருப்பமின்றி கிடைத்த வேலையை செய்யத் தொடங்கினேன். ரயில்வே பணிக்கு வந்த பிறகுதான் பள்ளியில் நான் கற்ற சாரணர், என்சிசி பயிற்சியை அடிப்படையாகக் கொண்டு சிறிய குழுவை ஏற்டுத்தி அவசர காலங்களில் உதவிடும் பணியை தொடங்கினேன். அதுவே என்னுள் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி சித்த மருத்துவம் கற்று, நடமாடும் உயிர் காக்கும் முதலுதவி சிகிச்சையை தொடர்ந்து வருகிறேன்.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்றுவிட்டேன். புதுச்சேரி மாநிலத்திலும் சேவை அளித்துள்ளேன். வட மாநிலங்களுக்கும் சென்று சேவை புரிந்துள்ளேன். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, பேரிடர் மேலாண்மைத்துறை, காவல்துறை மூலம் ஆயிரக்கணக்கான விழிப்புணர்வு நிகழ்வுகளில் பங்கேற்று மாணவ சமுதாயத்திடமும், மக்களிடமும் தீ தடுப்பு, விபத்து தடுப்பு, முதலுதவி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளேன். 40 ஆண்டுகளில் விபத்தில் காயமடைந்த ஆயிரக்கணக்கான முதலுதவி சிகிச்சை அளித்துள்ளேன். சிறிய அளவிலான தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக எனது வாகனத்தில் உள்ள தீயணைப்பாணை கொண்டு அணைத்துவிடுவேன். அனைத்து வகை நெருப்புகளையும் அணைக்கும் வகையிலான 5 கிலோ எடையுடைய தீயணைப்பான் எப்போதும் இருக்கும்.
சித்த மருத்துவம், அக்குபஞ்சர் முறை மட்டும்லலாது வண்ணங்களால் சிகிச்சையும் அளிக்கவும் கற்று வருகிறேன். வண்ணங்களால் சிகிச்சை என்பது, வண்ணங்கள் மற்றும் ஒளியைப் பயன்படுத்தி உடல் மற்றும் மன நலப் பிரச்சனைகளுக்குச் சிகிச்சையளிக்கும் ஒரு மாற்று மருத்துவ முறையாகும், இது குரோமோதெரபி என்றும் அழைக்கப்படுகிறது. எந்த மருத்துவமாக இருந்தாலும் மக்களின் உயிர் காக்க வேண்டும் என்பதற்காக அனைத்தையும் கற்று நடமாடும் உயிர்க் காவலராக பணியாற்றி வருகிறேன். என்னிடம் முதலுதவி பெறும் நபரின் முகத்தில் எழும் புன்னகைதான் என்னை மேலும், மேலும் இயங்கச் செய்து வருகிறது. ரயில்வேதுறையில் கலாசி ஆக பணியை தொடங்கி முதுநிலை தொழில்நுட்பநராக ஓய்வு பெற்றேன். ஆனால், முதலுதவி சிகிச்சையில் ஓய்வின்றி என் இறுதி மூச்சு வரையும் சேவையாற்றுவேன்" என்கிறார் பெருமிதமாக.
Summary
Trichy D Srinivasa Prasad (DSP) takes charge of accident and fire prevention
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

