தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட், காஜூ கத்லி வீட்ல செய்யலாம் வாங்க!

காஜூ என்றால் இந்தியில் முந்திரிப்பருப்பு என்று பொருள். வெறும் முந்திரிப் பருப்பு, சர்க்கரை மற்றும் நெய் கொண்டு தயாரிக்கப்படும் இனிப்பை காஜூ கத்லி என்கிறார்கள்.
தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட், காஜூ கத்லி வீட்ல செய்யலாம் வாங்க!

உங்களுக்கு காஜூ கத்லி பிடிக்குமா?

காஜூ என்றால் இந்தியில் முந்திரிப்பருப்பு என்று பொருள். வெறும் முந்திரிப் பருப்பு, சர்க்கரை மற்றும் நெய் கொண்டு தயாரிக்கப்படும் இனிப்பை காஜூ கத்லி என்கிறார்கள். இந்த இனிப்பின் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால்? இது எவ்வளவு சாப்பிட்டாலும் திகட்டவே திகட்டாது என்பது தான்.

எழுத்தாளர் சுஜாதா தனது 'கற்றதும், பெற்றதும்’ அனுபவப் பகிர்வில் எழுதி இருப்பார் இந்த இனிப்பின் மகிமை குறித்து. நல்ல காஜூ கத்லி வாங்க வேண்டுமென்றால் ‘ஸ்ரீ மிட்டாய்க் கடை’ க்குச் செல்லுங்கள் என்று சுஜாதாவே மெச்சிய ஸ்வீட் இது.

சரி அப்படியாகப்பட்ட காஜூ கத்லியைத்தான் இப்போது நாம் நமது வீட்டில் தயாரிக்கப்போகிறோம்.

தேவையான பொருட்கள்:

  • முந்திரிப்பருப்பு – 2 கப்
  • சர்க்கரை – 1 1/2 கப்
  • நெய் – 2 டேபிள் ஸ்பூன்
  • சுடு தண்ணீர் – 3/4 கப்
  • சில்வர் பேப்பர் – 6
  • குங்கமப்பூ – ஒரு சிட்டிகை

செய்முறை:

முந்திரிப்பருப்பை நன்கு அரைத்து பெளடர் செய்து கொள்ளவும். அரைக்கும் போது பிசிறு தட்டாமல் நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். அப்படி அரைத்த முந்திரிப்பருப்புத் தூளை ஒரு சுத்தமான காய்ந்த பாத்திரத்தில் எடுத்து வைத்து விட்டு. அடுப்பில் பாத்திரத்தை ஏற்றி 1 1/2 கப் சர்க்கரையை அதில் கொட்டி, சர்க்கரை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு பாகு காய்ச்ச வேண்டும். காய்ச்சிய பாகு நன்கு திக்கானதும். கையால் பதம் பார்த்துக் கொண்டு அதில் அரைத்து வைத்த முந்திரிப்பருப்புத் தூளைக் கொட்டி நன்கு கிளறவும்.  கிளறும் போது முந்திரிப்பருப்புத் தூளின் நிறம் மாறக்கூடாது. முந்திரிப்பருப்புத் தூள் சர்க்கரைப் பாகுடன் நன்கு கலந்து வெதுவெதுப்பான பதத்தில் இருக்கும் போது அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் நெய்யைச் சேர்த்து நன்கு கிளற வேண்டும்.  மாவின் பதம் சப்பாத்தி மாவு பதத்தைக் காட்டிலும் சற்று திக்காக இருக்கும் போது பாத்திரத்தைக் கீழே இறக்கி கை பொறுக்கும் சூட்டில் அதன் மீது ஃபாயில் பேப்பரை ஒட்டித் துண்டுகள் போடலாம்.

காஜூ கத்லியை டைமண்ட் வடிவில் துண்டுகளிட்டால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடுவார்கள். துண்டின் தடிமன் 2 செமீக்கு மிகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

முற்றிலும் முந்திரிப்பருப்பும், சர்க்கரையுஜ்ம் , நெய்யும் மட்டுமே கலந்து செய்வதால் இது மிகவும் சத்தானது மட்டுமல்ல சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு ஆபத்தானதும் கூட. எனவே நீரழிவு நோயால் அவதிப்படுபவர்கள் இந்தப் பக்கம் எட்டியும் பார்த்து விட வேண்டாம். ஆசைக்கு வேண்டுமானால் சும்மா ஒரு துளி பிட்டுப் போட்டுக்கொள்ளலாம். அவ்வளவு தான்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com