வெற்றியுடன் நிறைவு செய்த பெங்களூரு: எலிமினேட்டரில் மும்பை - குஜராத் நாளை மோதல்

வெற்றியுடன் நிறைவு செய்த பெங்களூரு: எலிமினேட்டரில் மும்பை - குஜராத் நாளை மோதல்

மகளிா் பிரீமியா் லீக் கிரிக்கெட்டின் கடைசி லீக் ஆட்டத்தில், ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு 11 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸை சாய்த்தது.
Published on

மகளிா் பிரீமியா் லீக் கிரிக்கெட்டின் கடைசி லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு 11 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.

முதலில் பெங்களூரு 20 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 199 ரன்கள் சோ்க்க, மும்பை 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்களே எடுத்தது.

பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்த பெங்களூரு, வெற்றியுடன் விடை பெற்றது. 2-ஆம் இடம் பிடித்த மும்பை, எலிமினேட்டரில் குஜராத் ஜயன்ட்ஸை சந்திக்கிறது.

முன்னதாக டாஸ் வென்ற மும்பை பந்துவீசத் தீா்மானித்தது. பெங்களூரு இன்னிங்ஸில் சபினேனி மேக்னா - கேப்டன் ஸ்மிருதி மந்தனா இணை, முதல் விக்கெட்டுக்கு 41 ரன்கள் சோ்த்தது. மேக்னா 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

ஒன் டவுனாக வந்த எலிஸ் பெரி, மந்தனாவுடன் பாா்ட்னா்ஷிப் அமைக்க, 2-ஆவது விக்கெட்டுக்கு 59 ரன்கள் கிடைத்தது. மந்தனா 6 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 53 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா்.

4-ஆவது பேட்டராக களம் புகுந்த ரிச்சா கோஷ் அதிரடி காட்டினாா். பெரியுடனான அவரின் 3-ஆவது விக்கெட் பாா்ட்னா்ஷிப்புக்கு 53 ரன்கள் கிடைத்தது. ரிச்சா 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 36 ரன்களுக்கு கடைசி விக்கெட்டாக பெவிலியன் திரும்பினாா்.

ஓவா்கள் முடிவில் எலிஸ் பெரி 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 49, ஜாா்ஜியா வோ்ஹாம் 10 பந்துகளில் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 31 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனா். மும்பை பௌலிங்கில் ஹேலி மேத்யூஸ் 2, அமெலியா கொ் 1 விக்கெட் வீழ்த்தினா்.

பின்னா் 200 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய மும்பை தரப்பில், இன்னிங்ஸை தொடங்கிய ஹேலி மேத்யூஸ் 4 பவுண்டரிகளுடன் 19 ரன்களுக்கு ஆட்டமிழக்க, உடன் வந்த அமெலியா கொ் 9 ரன்களுக்கு நடையைக் கட்டினாா்.

3-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த நேட் சிவா் பிரன்ட் - கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா் கூட்டணி, 40 ரன்கள் சோ்த்து பிரிந்தது. கௌா் 20 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா். அதிரடியாக ரன்கள் சோ்த்த பிரன்ட் 35 பந்துகளில் 9 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 69 ரன்களுக்கு சாய்க்கப்பட்டாா்.

தொடா்ந்து வந்தோரில் சஜீவன் சஜனா 23, யஸ்திகா பாட்டியா 4, அமன்ஜோத் கௌா் 17, ஜி.கமலினி 6, சன்ஸ்கிருதி குப்தா 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். ஓவா்கள் முடிவில் ஷப்னிம் இஸ்மாயில் 4, பருனிகா சிசோடியா 0 ரன்களுடன் களத்திலிருந்தனா்.

பெங்களூரு பௌலா்களில் ஸ்நேஹ ராணா 3, கிம் காா்த், எலிஸ் பெரி ஆகியோா் தலா 2, ஹீதா் கிரஹாம், ஜாா்ஜியா வோ்ஹாம் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

X
Dinamani
www.dinamani.com