ஐபிஎல் ஏலப்பட்டியலில் ஆர்ச்சர்: அணிகள் குழப்பம்!

ஆர்ச்சரால் 2022 ஐபிஎல் போட்டியில் பங்கேற்பது சந்தேகம்...
ஐபிஎல் ஏலப்பட்டியலில் ஆர்ச்சர்: அணிகள் குழப்பம்!

ஐபிஎல் ஏலப்பட்டியலில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஜோப்ஃரா ஆர்ச்சர் இடம்பிடித்தாலும் இந்த வருடம் விளையாட மாட்டார் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடத் தொடக்கத்தில் இந்தியாவுக்கு எதிரான இரு டெஸ்ட், 5 டி20 ஆட்டங்களில் விளையாடிய ஜோப்ரா ஆா்ச்சா், வலது முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக நாடு திரும்பினார். பிறகு ஐபிஎல் 2021 போட்டியிலிருந்தும் விலகினார். காயத்திலிருந்து மீண்டு வந்த ஆர்ச்சர், சஸ்ஸெக்ஸ் அணிக்காக விளையாடினார். பிறகு, முழங்கை காயத்தில் மீண்டும் வலி ஏற்பட்டதால் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகினார். கடந்த மே மாதம் முழங்கை காயத்துக்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இதனால் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர், டி20 உலகக் கோப்பை, ஆஷஸ் தொடர் ஆகிய முக்கியமான போட்டிகளிலிருந்து அவர் விலகினார். 

முழங்கை காயத்துக்கு மற்றொரு அறுவை சிகிச்சை மேற்கொண்டார் ஆர்ச்சர். இதையடுத்து ஜனவரி - மார்ச் மாதங்களில் இங்கிலாந்து அணியின் மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணத்திலும் ஆர்ச்சர் இடம்பெற மாட்டார் என அறிவிக்கப்பட்டது. டிசம்பர் 11 அன்று லண்டனில் ஆர்ச்சருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. கடந்த மாதம் பார்படாஸில் உள்ள தனது குடும்பத்தினருடன் தங்கினார் ஆர்ச்சர். பார்படாஸின் தலைநகர் பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்ட இங்கிலாந்து அணியினருடன் இணைந்து பயிற்சிகளை மேற்கொண்டார். 

ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி ஆர்ச்சரைத் தக்கவைக்கவில்லை. 2-வது அறுவை சிகிச்சை காரணமாக ஐபிஎல் 2022 போட்டியில் ஆர்ச்சர் பங்குபெறுவாரா என்கிற சந்தேகம் இருந்தது.

இந்நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள ஏலப்பட்டியலில் ஆர்ச்சரின் பெயர் இடம்பெற்றுள்ளது.

ஐபிஎல் 2022 போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் பிப்ரவரி 12, 13 தேதிகளில் நடைபெறவுள்ளது.  இந்த வருடம் ஐபிஎல் போட்டியில் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. ஐபிஎல் ஏலத்தில் கலந்துகொள்ள 1214 வீரர்கள் விருப்பம் தெரிவித்தார்கள். 10 அணிகளின் விருப்பத்தின் அடிப்படையில் ஏலத்தில் இடம்பெறும் வீரர்களின் இறுதிப் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ஐபிஎல் 2022 ஏலத்தில் 590 வீரர்கள் இடம்பெறுகிறார்கள். ஏலப் பட்டியலில் உள்ள 590 வீரர்களில் 228 சர்வதேச வீரர்களும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத  355 வீரர்களும் இடம்பெற்றுள்ளார்கள். ஏலப் பட்டியலில் 370 இந்திய வீரர்களும் 220 வெளிநாட்டு வீரர்களும் உள்ளார்கள்.

இந்நிலையில் ஏலப்பட்டியலில் ஆர்ச்சரின் பெயர் இடம்பெற்றிருப்பது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. தற்போதைய காயத்தால் ஆர்ச்சரால் 2022 ஐபிஎல் போட்டியில் பங்கேற்பது சந்தேகம். ஆனால் 2023, 2024 போட்டிகளில் அவரால் பங்கேற்க முடியும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. ஐபிஎல் ஏலத்தில் எந்த அணி ஆர்ச்சரைத் தேர்வு செய்தாலும் அவர் விளையாடாவிட்டால் மாற்று வீரரைத் தேர்வு செய்யமுடியாது. ஆனால் அடுத்த இரு வருடங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தக் குழப்பமான நிலையில் ஆர்ச்சரை எந்த அணி தேர்வு செய்யும் என்பது ரசிகர்களுக்கு ஆச்சர்யமாகவே உள்ளது.

ஆர்ச்சரைப் பெரிய தொகைக்குத் தேர்வு செய்தாலும் இந்த வருடம் அவர் விளையாட மாட்டார். அவரைத் தேர்வு செய்தால் கைவசமுள்ள பணமும் குறைந்து விடும். பிறகு நினைத்த வீரர்களை ஏலத்தில் தேர்வு செய்ய முடியாது. ஒருவேளை அடுத்த வருடமும் ஆர்ச்சரால் ஐபிஎல்-லில் விளையாட முடியாமல் போனால் இந்த வருடம் காத்திருந்தது வீணாகிவிடும். இந்த நிலையில் ஆர்ச்சரைத் தேர்வு செய்ய அணிகள் எந்தளவுக்குத் தயாராக இருக்கும் எனத் தெரியவில்லை. ஐபிஎல் ஏலத்தில் நமக்கு ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com