நடால் சாதனை: ரசிகர்களை நெகிழ வைத்த ஃபெடரரின் வாழ்த்து

அர்ப்பணிப்பு, போராடும் குணம் போன்றவை எனக்கும் பலருக்கும் ஊக்கமாக உள்ளன.
ஃபெடரர்
ஃபெடரர்

21 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற நடாலுக்குப் பிரபல வீரர் ரோஜர் ஃபெடரர் பாராட்டு தெரிவித்துள்ளார். 

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றையா் பிரிவில், உலகின் 5-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால் (35) சாம்பியன் பட்டம் வென்றாா்.

இதன் மூலம் தனது 21-வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றிய நடால், டென்னிஸ் வரலாற்றில் 21 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற முதல் வீரா் என்ற சாதனையைப் படைத்தாா். முன்னதாக அவா் 20 கிராண்ட்ஸ்லாம்கள் வென்று, ஸ்விட்சா்லாந்தின் ரோஜா் ஃபெடரா், சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோருடன் சமநிலையில் இருந்தாா்.

மூவரில் யாா் முதலில் 21-வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்வார்கள் என்கிற போட்டி இருந்தது. முழங்கால் அறுவைச் சிகிச்சை காரணமாக ரோஜா் ஃபெடரரும், கரோனா தடுப்பூசி சா்ச்சையால் நோவக் ஜோகோவிச்சும் ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்கவில்லை. 

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இறுதிச்சுற்றில் 2-6, 6-7(5), 6-4, 6-4, 7-5 என 5 மணி நேரத்துக்கும் அதிகமாகப் போராடி மெத்வதேவைத் தோற்கடித்து ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்று சாதனை படைத்தார். 

நடாலின் வெற்றிக்கு ஃபெடரர் அளித்த பாராட்டு டென்னிஸ் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. சக போட்டியாளராக நடால் இருந்தபோதும் மிகவும் பெருந்தன்மையுடன், மனதாரப் பாராட்டியுள்ளார் ஃபெடரர். அவர் கூறியதாவது:

ஆஸ்திரேலிய ஓபன் கோப்பையுடன் நடால்
ஆஸ்திரேலிய ஓபன் கோப்பையுடன் நடால்

என்ன ஓர் ஆட்டம்! 21 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற முதல் ஆடவர் என்கிற சாதனைக்காக என்னுடைய நண்பர், சிறந்த போட்டியாளரான நடாலுக்குப் பாராட்டுகள். சில மாதங்களுக்கு முன்பு இருவரும் ஊன்றுகோலுடன் இருப்பது பற்றி நகைச்சுவையாகப் பேசிக்கொண்டிருந்தோம். இந்தச் சாதனை அற்புதம்.

மகத்தான சாதனையாளரை ஒருபோதும் குறைத்து மதிப்பிடக் கூடாது. உங்களுடைய வேலை ஒழுங்கு, அர்ப்பணிப்பு, போராடும் குணம் போன்றவை எனக்கும் பலருக்கும் ஊக்கமாக உள்ளன. இந்தக் காலகட்டத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்கிறேன். கடந்த 18 வருடங்களாக என்னை நீங்கள் மேலும் சாதிக்க அழுத்தம் தருவது போல நானும் உங்களுக்கு அப்படி இருப்பதற்காகப் பெருமையடைகிறேன். இன்னும் பல சாதனைகளை நிகழ்த்துவீர்கள் என்பதில் உறுதியாக உள்ளேன். இப்போது இந்தச் சாதனையைக் கொண்டாடுங்கள் என்றார்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com