அரையிறுதிக்கு மிக அருகில் நியூசிலாந்து: அயர்லாந்து தோல்வி!
அரையிறுதிக்குத் தகுதி பெறுவதைக் கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது நியூசிலாந்து அணி.


அயர்லாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை ஆட்டத்தை 35 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அரையிறுதிக்குத் தகுதி பெறுவதைக் கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது நியூசிலாந்து அணி.
அடிலெய்டில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. ஆரம்பம் முதல் வேகமாக ரன்கள் குவித்தார்கள் நியூசி. பேட்டர்கள். 6 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 52 ரன்களும் 10 ஓவர்களின் முடிவில் 75/1 ரன்களும் கிடைத்தன. இதற்குப் பிறகு இன்னும் வேகமாக ரன்கள் எடுக்க ஆரம்பித்தார்கள். கடந்த ஆட்டத்தில் நிதானமாக விளையாடியதால் விமர்சனத்துக்கு ஆளான நியூசி. கேப்டன் கேன் வில்லியம்சன் இந்தமுறை அதிரடியாக விளையாடினார். 32பந்துகளில் அரை சதமெடுத்தார். 19-வது ஓவரில் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் லிட்டில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். முதலில் வில்லியம்சனை 61 ரன்களில் வீழ்த்திய லிட்டில் அடுத்த இரு பந்துகளில் புதிய பேட்டர்களான நீஷம், சான்ட்னர் ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்து சாதனை படைத்தார். டி20 கிரிக்கெட்டில் ஹாட்ரிக் எடுத்த 2-வது அயர்லாந்து வீரர் என்கிற பெருமையை அடைந்தார்.
நியூசிலாந்து அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது.
அயர்லாந்துக்கு அருமையான தொடக்கம் கிடைத்தது. பால் ஸ்டிர்லிங்கும் கேப்டன் ஆண்டி பால்பிர்னியும் நன்கு விளையாடி 8 ஓவர்கள் வரை நிலைத்து நின்று 68 ரன்கள் சேர்த்தார்கள். சுழற்பந்து வீச்சாளர்களான சான்ட்னரும் சோதியும் முதல் ஓவர்களைச் சரியாக வீசாமல் போனாலும் அதன்பிறகு நிலைமையைக் கட்டுப்படுத்தினார்கள். இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அயர்லாந்தின் முயற்சியை முறியடித்தார்கள். 20 ஓவர்களின் முடிவில் அயர்லாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஃபெர்குசன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதிக ரன்ரேட்டைக் கொண்டிருக்கும் நியூசி. அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதால் அரையிறுதிக்குத் தகுதி பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. 5 ஆட்டங்களில் விளையாடி சூப்பர் 12 சுற்றை முடித்துள்ள நியூசிலாந்து அணி 3 வெற்றிகளுடன் 7 புள்ளிகளைப் பெற்றுள்ளது. அடுத்த ஆட்டங்களில் இங்கிலாந்தும் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றாலும் ரன்ரேட் அடிப்படையில் நியூசிலாந்தைப் பின்னுக்குத் தள்ளுவதற்கான வாய்ப்புகள் குறைவு. அதற்கு ஆஸ்திரேலியா 185 ரன்கள் வித்தியாசத்திலும் இங்கிலாந்து 128 ரன்கள் வித்தியாசத்திலும் தங்களுடைய கடைசி ஆட்டங்களை வெல்ல வேண்டும். இதனால் குரூப் 1 பிரிவில் நியூசிலாந்து அணி முதலிடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...