
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 226 ரன்கள் குவித்துள்ளது.
நியூசிலாந்து-இங்கிலாந்து இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. மழையின் காரணமாக இரு அணிகளுக்கும் இடையிலான இப்போட்டியில் டாஸ் வீசுவதில் தாமதமானது. பின்னர், மழையின் காரணமாக ஆட்டம் 34 ஓவர்களாக குறைத்து நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இப்போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, இங்கிலாந்து முதலில் பேட் செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக ஜானி பேர்ஸ்டோ மற்றும் ஹாரி ப்ரூக் களமிறங்கினர். பேர்ஸ்டோ 6 ரன்களிலும், ஹாரி ப்ரூக் 2 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஜோ ரூட் ரன் ஏதும் எடுக்காமலும், பென் ஸ்டோக்ஸ் 1 ரன்னிலும் ஆட்டமிழந்ததது அந்த அணிக்கு பேரிடியாக விழுந்தது. கேப்டன் ஜோஸ் பட்லரும் 30 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற இங்கிலாந்து 55 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின், ஜோடி சேர்ந்த மொயின் அலி மற்றும் லியம் லிவிங்ஸ்டன் அணியை சரிவிலிருந்து ஓரளவுக்கு மீட்டனர். மொயின் அலி 32 பந்துகளில் 33 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.
அதன்பின், லிவிங்ஸ்டன் மற்றும் சாம் கரண் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சாம் கரண் 35 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய லியம் லிவிங்ஸ்டன் 78 பந்துகளில் 95 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட 34 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 226 ரன்கள் எடுத்தது.
நியூசிலாந்து தரப்பில் சிறப்பாக பந்துவீசிய டிரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். டிம் சௌதி 2 விக்கெட்டுகளையும், மாட் ஹென்றி மற்றும் மிட்செல் சாண்ட்னர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி களமிறங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.