ரஞ்சி கோப்பை: ஜடேஜா அணியை வீழ்த்திய தமிழ்நாடு!

ஜடேஜா 25 ரன்கள் எடுத்து அஜித் ராம் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
ரஞ்சி கோப்பை: ஜடேஜா அணியை வீழ்த்திய தமிழ்நாடு!

செளராஷ்டிர அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தமிழ்நாடு - செளராஷ்டிர அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செவ்வாயன்று தொடங்கியது. செளராஷ்டிர அணியின் கேப்டனாக ஜடேஜா செயல்பட்டார். 

தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் 142.4 ஓவர்களில் 324 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திரஜித் 66, விஜய் சங்கர் 53, ஷாருக் கான் 50 ரன்கள் எடுத்தார்கள். காயத்திலிருந்து மீண்டு வந்து முதல்தர கிரிக்கெட்டில் விளையாடும் ஜடேஜா, 24 ஓவர்கள் வீசி 48 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். யுவ்ராஜ்சிங் 4, டிஏ ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் எடுத்தார்கள். 

செளராஷ்டிர அணி முதல் இன்னிங்ஸில் 192 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 6-ம் நிலை வீரராகக் களமிறங்கிய ஜடேஜா, 15 ரன்களுக்கு அபரஜித் பந்தில் ஆட்டமிழந்தார். தமிழக அணியின் எம். சித்தார்த், அஜித் ராம் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். தமிழக அணி முதல் இன்னிங்ஸில் 132 ரன்கள் முன்னிலை பெற்றது. 

தமிழ்நாடு அணி 2-வது இன்னிங்ஸில் ஜடேஜாவின் சுழலில் 36.1 ஓவர்களில் 133 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சாய் சுதர்சன் அதிகபட்சமாக 37 ரன்கள் எடுத்தார். ஜடேஜா சிறப்பாகப் பந்துவீசி 171. ஓவர்களில் 53 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். டிஏ ஜடேஜா 3 விக்கெட்டுகளை எடுத்தார். 

ரஞ்சி கோப்பை ஆட்டத்தை வெற்றி பெற செளராஷ்டிர அணிக்கு 266 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணி, 3-ம் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 4 ரன்கள் எடுத்தது. கடைசி நாளில் வெற்றி பெற செளராஷ்டிர அணிக்கு 262 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஆட்டத்தின் முடிவை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்தார்கள்.

இந்நிலையில் கடைசி நாளில் செளராஷ்டிர அணி, 2-வது இன்னிங்ஸில் 68.2 ஓவர்களில் 206 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடக்க வீரர் ஹர்விக் தேசாய் 101 ரன்கள் எடுத்தார். ஜடேஜா 25 ரன்கள் எடுத்து அஜித் ராம் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அஜித் ராம் 6 விக்கெட்டுகளும் எம். சித்தார்த் 3 விக்கெட்டுகளும் எடுத்துத் தமிழக அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தார்கள். இந்த ஆட்டத்தின் சிறந்த வீரராக 9 விக்கெட்டுகள் எடுத்து அசத்திய 24 வயது அஜித் ராம் தேர்வானார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com