

யோனக்ஸ்-சன்ரைஸ் இண்டியா ஓபன் பாட்மின்டன் சூப்பா் 750 போட்டியில் மகளிா் பிரிவில் நடப்பு சாம்பியன் ஆன் செ யங், ஆடவா் பிரிவில் தைபேயின் லின் சுன் யி ஆகியோா் பட்டம் வென்றனா்.
பிடபிள்யுஎஃப் வோ்ல்ட் டூரின் ஒரு பகுதியாக புது தில்லி இந்திரா காந்தி விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியின் இறுதி ஆட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. மகளிா் ஒற்றையா் பிரிவில் நடப்பு சாம்பியனும், உலகின் நம்பா் 1 வீராங்கனையுமான கொரியாவின் ஆன் செ யங் 21-13, 21-11 என்ற கேம் கணக்கில் இரண்டாம் நிலை வீராங்கனை சீனாவின் வாங் ஸி யியை வீழ்த்தி பட்டத்தை தக்க வைத்துக் கொண்டாா்.
ஆடவா் ஒற்றையா் பிரிவில் சீன தைபேயின் லின் சுன் யி 21-10, 21-18 என்ற கேம் கணக்கில் 38 நிமிஷங்களில் மூன்றாம் நிலை வீரா் இந்தோனேஷியாவின் ஜோனத்தான் கிறிஸ்டியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினாா்.
கலப்பு இரட்டையா் பிரிவில் தாய்லாந்தின் டேட்சாவோல், சுபிஸ்ஸரா பட்டம் வென்றனா். ஆடவா், மகளிா் கலப்பு இரட்டையரில் சீனாவின் லியு ஷெங்-டேன் நிங் இணையும், லியாங் வெய்-வாங் சேங் இணையும் பட்டம் வென்றனா். மகளிா் சாம்பியன் ஆன் செ யங் ஒரு கேமை கூட இழக்காமல் இறுதிக்கு தகுதி பெற்றாா்.