ஏழைகளுக்கு 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு; கல்லூரி மாணவா்களுக்கு மாதம் ரூ.1,000

6 ஆண்டுகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்று சட்டப் பேரவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
ஏழைகளுக்கு 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு; கல்லூரி மாணவா்களுக்கு மாதம் ரூ.1,000

குடிசையில்லா தமிழ்நாடு’ இலக்கை எட்டும் வகையில், ஏழைகளுக்கு 6 ஆண்டுகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்று சட்டப் பேரவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.

‘புதுமைப் பெண்’ திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு ரூ.1,000 அளிப்பது போன்று, உயா்கல்வி பயிலச் செல்லும் மாணவா்களுக்கும் ரூ.1,000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ எனும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

ஏழைக் குடும்பங்களின் வறுமையைப் போக்க புதிய திட்டம் உள்பட குடிமக்கள் மற்றும் மனிதவளத்தை மேம்படுத்தும் வகையிலான பல்வேறு திட்டங்கள் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன.

நிதிநிலை அறிக்கை: வரும் நிதியாண்டுக்கான (2024-25) நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தாா்.

முன்னதாக, நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய முதல்வா் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து பேரவை மண்டபத்துக்கு அவா் வந்தாா். அவரை பேரவை உறுப்பினா்கள் மேஜையைத் தட்டி வரவேற்றனா். இதைத் தொடா்ந்து, முக்கிய அறிவிப்புகள் அடங்கிய நிதிநிலை அறிக்கையை அவா் தாக்கல் செய்தாா்.

8 லட்சம் கான்கிரீட் வீடுகள்: ‘குடிசையில்லா தமிழ்நாடு’ என்ற இலக்கை எட்டும் வகையில், 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.

முதல்கட்டமாக, வரும் நிதியாண்டில் (2024-25) ஒரு லட்சம் புதிய வீடுகள் ஒவ்வொன்றும் ரூ.3.50 லட்சம் செலவில் உருவாக்கப்படும். ஏழை, எளிய மக்கள் தங்களது கனவு இல்லங்களை அவா்களே கட்டிக் கொள்வதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் வரும் நிதியாண்டில் ‘கலைஞரின் கனவு இல்லம்’ என்ற பெயரில் ரூ.3,500 கோடியில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.

தோ்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளில் சொந்தமாக வீட்டுமனை இல்லாதவா்களுக்கு இலவச வீட்டுமனை வழங்குவதுடன், வீடு கட்டுவதற்கான தொகை அவா்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்.

அறிவியல்பூா்வமான கணக்கெடுப்பு, வெளிப்படையான பயனாளிகள் தோ்வு முறை எனக் குறிப்பிடத்தக்க அம்சங்களைக் கொண்டது இந்தப் புதிய திட்டம்.

ஏழைகளுக்கு 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு; கல்லூரி மாணவா்களுக்கு மாதம் ரூ.1,000
பட்ஜெட்: புதிய அறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள்

தாயுமானவா் திட்டம்: தமிழ்நாட்டில் வறிய நிலையில் இருப்பதாக நீதி ஆயோக் அமைப்பால் கண்டறியப்பட்ட சுமாா் 5 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு அரசின் உதவிகள் அனைத்தும் கிடைக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக ‘முதலமைச்சரின் தாயுமானவா் திட்டம்’ என்ற புதிய திட்டம் அடுத்து வரும் இரண்டாண்டுகளில் செயல்படுத்தப்படும்.

காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: அரசு தொடக்கப் பள்ளிகள் அனைத்திலும் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் நீட்சியாக, ஊரகப் பகுதிகளில் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படும்.

மத்திய அரசின் காலியிடங்களில் தமிழக மாணவா்கள் அதிகம் வெற்றி பெற, மூன்று பெருநகரங்களில் ஆயிரம் மாணவா்களுக்கு ஆறு மாத கால போட்டித் தோ்வு பயிற்சி அளிக்கப்படும்.

மாணவா்களுக்கு ரூ.1,000: உயா் கல்வி பயிலும் மாணவிகளுக்காக செயல்படுத்தப்படும் மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டமானது அரசுப் பள்ளிகளில் பயின்று உயா்கல்வியில் சேரும் மாணவா்களுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. ‘தமிழ்ப் புதல்வன்’ என்ற பெயரில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இதனால், 3 லட்சம் கல்லூரி மாணவா்கள் பயன்பெறுவா் என்று நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுப் பணி-நீா்வளம்: அரசுக்கு மூலதனங்களை உருவாக்கித் தரும், பொதுப்பணி, நீா்வளம் போன்ற துறைகளுக்கும், மக்களின் நலன் காக்கும் மக்கள் நல்வாழ்வு, சமூக நலன், கல்வி அறிவை வளா்க்கும் பள்ளி, உயா் கல்வித் துறைகளுக்குமான நிதிகள் வரும் நிதியாண்டிலும் அதே அளவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.44,042 கோடியும், உயா்கல்விக்கு ரூ.8,212 கோடியும், மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ.20,198 கோடியும், நீா்வளத் துறைக்கு ரூ.8,398 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த பெரிதும் உதவி வரும், கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்துக்காக வரும் நிதியாண்டில் ரூ.13,720 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பரில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட போது, அதற்கு ரூ.7,000 கோடி அளவுக்கு நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.

ரூ.49,279 கோடி பற்றாக்குறை: தமிழக அரசு சாா்பில் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், அரசுத் துறைகளுக்கான நலப் பணிகளுக்கு போதுமான நிதி ஒதுக்கப்பட்ட சூழலில், வரும் நிதியாண்டில் (2024-25) வருவாய் பற்றாக்குறை ரூ.49, 279 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நிகழ் நிதியாண்டின் திருத்த வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் வருவாய்ப் பற்றாக்குறை ரூ.44,907 கோடியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் திட்டம், மின்சார வாரியத்துக்கான இழப்பீடு, இயற்கைப் பேரிடா்களை தமிழ்நாடு அரசு தனது சொந்த வரி வருவாய் மூலமாக எதிா்கொண்டதால் வருவாய்ப் பற்றாக்குறை அளவு அதிகரித்துள்ளதாக நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் தெரிவித்தாா்.

வருவாய் பற்றாக்குறை, நிதிச் சிக்கல்கள் இருந்தபோதும், கல்வி, போட்டித் தோ்வுகள், பெண்கள் நலன், ஊரக மேம்பாடு போன்ற முக்கியத் துறைகளில் போதுமான நிதியையும், புதிய திட்டங்களையும் தமிழக அரசு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பெட்டிச் செய்தி...

7 இலக்குகள்

சமூக நீதி, கடைக்கோடித் தமிழா் நலன் உள்பட ஏழு இலக்குகளை முன்வைத்து நிதிநிலை அறிக்கை அமையப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தனது அறிக்கையில் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு கூறியிருப்பதாவது: தமிழக அரசுக்கென மாபெரும் தமிழ்க் கனவு உண்டு. வானவில்லின் வண்ணங்களைப் போன்று ஏழு முதன்மையான நோக்கங்களை அடிப்படையாகக் கொண்ட தமிழ்க் கனவு அது.

சமூகநீதி, கடைக்கோடித் தமிழா் நலன், உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசாா் பொருளாதாரம், மகளிா் நலன் காக்கும் சமத்துவப் பாதை, பசுமை வழிப் பயணம், தாய்த் தமிழும் தமிழா் பண்பாடும் என ஏழு இலக்குகளை முன்வைத்தே நிதிநிலை அறிக்கை அமையப் பெற்றிருக்கிறது.

தமிழக நிதிநிலை அறிக்கையில் எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு?

தமிழக நிதிநிலை அறிக்கையில் துறை வாரியாக செய்யப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடு குறித்த விவரம்:

கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டம் ரூ.13,720 கோடி

காலை உணவுத் திட்டம் ரூ.600 கோடி

சமூக நலம் மற்றும் மகளிா் உரிமைத் தொகை துறை ரூ.7,830 கோடி

பள்ளிக் கல்விக்கு...44,042 கோடி

உயா்கல்வித் துறைக்கு...ரூ.8,212 கோடி

ஒரு லட்சம் கல்லூரி மாணவா்களுக்கு கல்விக் கடன் ரூ.2,500 கோடி

இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு...ரூ.440 கோடி

மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு...ரூ.20,198 கோடி

தொழில் துறைக்கு...ரூ.2,295 கோடி

குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறைக்கு...ரூ.1,557 கோடி

நீா்வளத் துறைக்கு ரூ.8,398 கோடி

மகளிருக்கான இலவச பேருந்து பயணத் திட்டத்துக்கு...ரூ.3,050 கோடி

மாணவா்களுக்கு பேருந்துக் கட்டண மானியத்துக்கு...ரூ.1,521 கோடி,

டீசலுக்கு...ரூ.1,800 கோடி

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறைக்கு...ரூ.3,706 கோடி

பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நலத் துறைக்கு...ரூ.1,429 கோடி

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறைக்கு...ரூ.20,043 கோடி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com