காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாட்டுக்கு காவிரி நீரைத் திறக்க கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை கா்நாடக அரசு முற்றிலும் புறக்கணித்து அவற்றைச் செயல்படுத்தத் தவறியுள்ளதாக குற்றஞ்சாட்டி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அமா்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை கர்நாடக அரசு பின்பற்றவில்லை. இன்று காலை நிலவரப்படி, கர்நாடக அணையில் 76% பயன்பாட்டுக்குரிய நீர் இருப்பு உள்ளது. தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி கிடைக்க வேண்டிய 64 டிஎம்சி தண்ணீருக்குப் பதிலாக, தமிழ்நாடு 14 டிஎம்சி நீரை மட்டுமே பெற்றுள்ளது. விகிதாச்சார அடிப்படையில் தமிழ்நாடு 55.29% நீரைப் பெற்றிருக்க வேண்டும். இதனால் சுமார் 20 டிஎம்சி நீர் நிலுவையில் இருக்கிறது” என்று வாதத்தை முன்வைத்தார்.
கர்நாடகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், உத்தரவுகளை அமல்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டை மறுத்ததுடன், காவிரிப் படுகைப் பகுதியில் மாநிலம் ”மிகக் கடுமையான நெருக்கடியை" எதிர்கொண்டு வருவதாகக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழ்நாட்டு தண்ணீர் திறக்காதது ஏன்? இயற்கை கொடுத்த மழை நீரை முழுமையாக தேக்க முடியவில்லை என்ற காரணத்தால் திறந்துவிடப்பட்டதா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், இந்த விவகாரம் மறுஆய்வு செய்யப்பட வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள் ஒருவார காலத்துக்கு அடுத்த திங்கள்கிழமை (ஆக. 24) ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
இதற்கிடைபட்ட காலத்தில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறப்பதை கர்நாடக அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் முந்தைய உத்தரவுகளின்படி, கர்நாடக அரசு திறந்துவிடாத மீதமுள்ள 21.357 டிஎம்சி தண்ணீரையும் விடுவிக்குமாறு உத்தரவிடக் கோரிய கோரிக்கையை உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
Summary
Supreme Court orders Karnataka to release Cauvery water to Tamil Nadu!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








