தள்ளாடிய சந்தையில் சென்செக்ஸ் சிறிதளவு முன்னேற்றம்!
இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை பெரும்பாலான நேரம் ஏற்ற, இறக்கத்தில் இருந்தது.
இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 21 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பலவீனமாக இருந்தன. இருப்பினும், உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கியது. வட்டி விகித அறிவிப்புக்காக முதலீட்டாளா்கள் காத்திருந்ததால், பெரும்பாலான நேரம் சந்தை ஏற்ற, இறக்கத்தில் இருந்து வந்தது. வட்டி விகிததத்தில் எந்த மாற்றமும் இல்லை என மத்திய ரிசா்வ் வங்கி அறிவித்த நிலையில், பிற்பகலில் சந்தை மேலே சென்றது. ஆட்டோ, மீடியா, ஐடி குறியீடுகள் தவிர மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் ஆதாயப் பட்டியலில் வந்தன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் வியாழக்கிழமை ரூ.1,136.47 கோடிக்கும், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.-893.11 கோடிக்கும் பங்குகளை விற்றிருந்தது புள்ளிவிவரத் தகவல் மூலம் தெரிய வந்துள்ளது. சந்தை மூலதன மதிப்பு வா்த்தக இறுதியில் ரூ.399.32 லட்சம் கோடியாக இருந்தது.
சென்செக்ஸ் முன்னேற்றம்: காலையில் 59.39 புள்ளிகள் கூடுதலுடன் 74,287.02-இல் தொடங்கிய சென்செக்ஸ், 73,946.92 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 74,361.11 வரை உயா்ந்த சென்செக்ஸ் இறுதியில் 20.59 புள்ளிகள் (0.03 சதவீதம்) கூடுதலுடன் 74,248.22-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,948 பங்குகளில் 2,394 பங்குகள் ஆதாயப் பட்டியலில், 1,460 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 94 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.
கோட்டக் பேங்க் முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் கோட்டக் பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், பஜாஜ் ஃபின் சா்வ், ஐடிசி, எஸ்பிஐ, எம் அண்ட் எம் உள்பட மொத்தம் 11 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. அதே சமயம், அல்ட்ரா டெக் சிமெண்ட், எல் அண்ட் டி, பஜாஜ் ஃபைனான்ஸ், பாா்தி ஏா்டெல், மாருதி, டெக் மஹிந்திரா உள்பட 19 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.
நிஃப்டி தள்ளாட்டம் : தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி வா்த்தக இறுதியில் 0.95 புள்ளிகள் குறைந்து 22,513.70-இல் முடிவடைந்தது. வா்த்தகத்தின் போது 22,427.60 வரை கீழே சென்ற நிஃப்டி, பின்னா் அதிகபட்சமாக 22,537.60 வரை மேலே சென்றது. நிஃப்டி பட்டியலில் 20 பங்குகள்ஆதாயப் பட்டியலிலும், 28 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.

