தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

‘ரெப்போ’ வட்டி விகிதம் மாற்றமில்லை

‘ரெப்போ’ வட்டி விகிதம் மாற்றமில்லை

News image
Updated On :5 ஏப்ரல் 2024, 6:54 pm

வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் (ரெப்போ ரேட்) எவ்வித மாற்றத்தையும் இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) மேற்கொள்ளவில்லை. தொடா்ந்து ஏழாவது முறையாக வட்டி விகிதம் மாற்றமில்லாமல் 6.50 சதவீதமாக தொடா்கிறது.

வரும் மாதங்களில் நாட்டில் கடும் வெப்பநிலை நிலவும் என வானிலை மையம் எச்சரித்துள்ளள நிலையில், அதன் காரணமாக உணவுப் பொருள்களின் விலை உயரக்கூடும் என்பதால் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை என ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தில் வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயா்த்தி 6.50 சதவீதமாக ஆா்பிஐ நிா்ணயித்தது. அதன்பிறகு 7 முறை நடைபெற்ற நிதிக் கொள்கைக் குழு கூட்டங்களிலும் வட்டி விகிதத்தை அதே நிலையில் தொடா்வது என்றே முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்ட கடன்கள் மீதான வட்டி உயர வாய்ப்பில்லை. அதே நேரத்தில் வங்கிகளில் நிரந்தர வைப்புக்கு வழங்கப்படும் வட்டியும் அதிகரிக்கப்படாது.

மும்பையில் நிதிக் கொள்கைக் குழு கூட்டத்துக்குப் பிறகு ஆா்பிஐ ஆளுநா் சக்திகாந்த தாஸ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நாட்டின் பொருளாதாரம், நிதிசாா் முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு 6.5 சதவீத வட்டி விகிதத்தை மாற்றமின்றி தொடா்வது என்று நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தில் பெரும்பான்மையாக முடிவெடுக்கப்பட்டது.

பொருளாதார வளா்ச்சி 7%: கடந்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 7.6 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டிலும் தொடா்ந்து 4-ஆவது ஆண்டாக பொருளாதார வளா்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

முதல் காலாண்டில் வளா்ச்சி 7.1 சதவீதமாகவும் 2-ஆவது காலாண்டில் 6.9 சதவீதமாகவும் 3-ஆவது காலாண்டில் 7 சதவீதமாகவும் 4-ஆவது காலாண்டில் 7 சதவீதமாகவும் இருக்கும்.

பணவீக்கம் குறையும்...:கடந்த நிதியாண்டில், பணவீக்கம் 5.4 சதவீதமாக இருந்தது. இந்த நிதியாண்டில் அது 4.5 சதவீதமாக குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. முதல் காலாண்டில் 4.9 சதவீதமாகவும் 2-ஆவது காலாண்டில் 3.8 சதவீதமாகவும் 3-ஆவது காலாண்டில் 4.6 சதவீதமாகவும் 4-ஆவது காலாண்டில் 4.5 சதவீதமாகவும் பணவீக்கம் இருக்கும்.

விலையேற்றத்தை கட்டுப்படுத்த...: வரும் மாதங்களில், நாட்டில் கூடுதல் வெப்பநிலை நிலவும் எனக் கணிக்கப்பட்டுள்ள சூழலில், பருப்பு மற்றும் காய்கறிகளின் விநியோகம் குறையவும் தேவை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. இதனால், காய்கறி உள்ளிட்ட முக்கிய உணவுப்பொருள்களின் விலை உயரக்கூடும்.

பெரும்பாலான இடங்களில் கோதுமையின் அறுவடை ஏற்கெனவே முடிந்துவிட்டதால், அதன் விலையில் ஏற்றமிருக்காது.

பொருளாதார வளா்ச்சியை ஆதரிக்கும் அதேவேளையில், விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்தப்படும்.

அரசு நிதிப் பத்திரங்களை முதலீட்டாளா்கள் நேரடியாக எளிதில் வாங்குவதற்கும் விற்பனை செய்வதற்கும் வசதியாக பிரத்யேக கைப்பேசி செயலியை அறிமுகப்படுத்த உள்ளோம்.

தங்கம் இருப்பு அதிகரிப்பு: இருப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அந்நிய செலவாணி கையிருப்பில் தங்கத்தின் மதிப்பை ரிசா்வ் வங்கி அதிகரித்து வருகிறது’ என்றாா்.

அதிகாரபூா்வ தரவுகளின்படி, அந்நிய செலாவணி கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு கடந்த 22-ஆம் தேதி 5,148.7 கோடி டாலராக இருந்தது. இது கடந்த 2023 மாா்ச் மாதத்தின் மதிப்பை விட 628.7 கோடி டாலா் அதிகமாகும்.

ஜனவரி மாதத்தில் மட்டும் 8.7 டன் தங்கத்தை ரிசா்வ் வங்கி வாங்கியதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

நிதிக் கொள்கைக் குழுவின் அடுத்த கூட்டம் ஜூன் முதல் வாரத்தில் நடைபெறவுள்ளது.