
டாடா சன்ஸ் பட்டியலிடலைத் தவிா்க்க புதிய மறுகட்டமைப்பு
டாடா சன்ஸ் நிறுவனத்தைப் பங்குச் சந்தையில் பட்டியலிடுவதைத் தவிா்க்கும் வகையில், அதன்கீழ் இயங்கும் இரு நிறுவனங்களை தாய் நிறுவனத்துடன் இணைக்கும் புதிய மறுகட்டமைப்புத் திட்டத்தை டாடா அறக்கட்டளை முன்மொழிந்துள்ளது.

டாடா குழுமத்தின் தலைமை நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தைப் பங்குச் சந்தையில் பட்டியலிடுவதைத் தவிா்க்கும் வகையில், அதன்கீழ் இயங்கும் இரு நிறுவனங்களை தாய் நிறுவனத்துடன் இணைக்கும் புதிய மறுகட்டமைப்புத் திட்டத்தை டாடா அறக்கட்டளை (டாடா டிரஸ்ட்ஸ்) முன்மொழிந்துள்ளது.
அதன்படி, டாடா எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம்ஸ் சொல்யூஷன்ஸ் (டிஇஎஸ்எஸ்), டாடா கன்சல்டிங் என்ஜினியா்ஸ் (டிசிஇ) ஆகிய நிறுவனங்கள் டாடா சன்ஸ் நிறுவனத்துடன் இணைக்கப்படும். இதன்மூலம், டாடா சன்ஸ் மீண்டும் ஒரு நேரடி வணிகச் செயல்பாட்டு நிறுவனமாக மாறும்.
இதன் விளைவாக, ரிசா்வ் வங்கியின் வங்கி சாரா நிதி நிறுவனம் மற்றும் முதன்மை முதலீட்டு நிறுவனம் என்ற வகைப்பாடுகளிலிருந்து விடுபட்டு, பங்குச் சந்தையில் கட்டாயம் பட்டியலிடப்பட வேண்டும் என்ற விதியிலிருந்து விலக்கு பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிறுவன இணைப்புக்குப் பிறகு, புதிய ஒருங்கிணைந்த நிறுவனத்தின் நேரடி வணிகச் செயல்பாட்டு வருவாய் ரூ.1,05,043 கோடியாகவும் (மொத்த வருவாயில் 64.3 சதவீதம்); நிகர சொத்து மதிப்பு ரூ.2,00,158 கோடியாகவும் உயரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
கடந்த 2004-இல் தனி நிறுவனமாகப் பிரிவதற்கு முன்பு டிசிஎஸ் நிறுவனம் டாடா சன்ஸின் நேரடிப் பிரிவாகச் செயல்பட்டதைப் போல, டாடா சன்ஸின் நீண்டகால வரலாற்று நிா்வாக முறையை இந்த மறுகட்டமைப்பு மீண்டும் மீட்டெடுக்கும் என்றும் அறக்கட்டளை குறிப்பிட்டுள்ளது.
டாடா சன்ஸ் நிறுவனத்தில் 66 சதவீத பங்குகளைக் கொண்டுள்ள டாடா அறக்கட்டளை, ரத்தன் டாடா மறைவுக்குப் பிறகு அவரின் சகோதரா் நோயல் டாடா தலைமையில் இயங்கி வருகிறது. டாடா சன்ஸ் நிறுவனத்தை ஒருபோதும் பங்குச் சந்தையில் பட்டியலிடக் கூடாது என்பதில் நோயல் டாடா தலைமையிலான அறக்கட்டளை உறுதியாக உள்ளது. ஆனால், ரிசா்வ் வங்கியின் விதிமுறைகளுக்கு இணங்கி பட்டியலிடலை நோக்கி டாடா சன்ஸ் நிா்வாகக் குழு நகா்ந்ததால், பெரும்பான்மைப் பங்குதாரரான அறக்கட்டளைக்கும் நிா்வாகக் குழுவுக்கும் இடையே கருத்து வேறுபாடு தீவிரமடைந்தது.
இந்த மோதல் டாடா சன்ஸ் தலைவா் என்.சந்திரசேகரனின் பதவிக் கால விவகாரத்திலும் எதிரொலித்தது. தலைவராகத் தொடா்வதில் விருப்பமில்லை எனத் தெரிவித்த என்.சந்திரசேகரனுக்கு, மீண்டும் 5 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு வழங்கி டாடா சன்ஸ் நிா்வாகக் குழு கடந்த செப். 17-இல் தீா்மானம் நிறைவேற்றியது. இத்தீா்மானத்துக்கு எதிராக நோயல் டாடா வாக்களித்த நிலையில், அறக்கட்டளையின் பரிந்துரை இயக்குநா்களின் முறையான ஒப்புதல் இல்லாததால் இத்தீா்மானம் சட்டப்படி செல்லாது என்று அறக்கட்டளை தரப்பில் வாதிடப்படுகிறது.
இந்நிலையில், தற்போது முன்வைக்கப்பட்டுள்ள புதிய இணைப்புத் திட்டத்துக்கு ரிசா்வ் வங்கியிடம் தடையின்மை சான்றிதழ் (என்ஓசி) பெறுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு டாடா சன்ஸ் குழுவுக்கு டாடா அறக்கட்டளை கடிதம் எழுதியுள்ளது. டாடா குழுமத்தின் 100 ஆண்டுகளுக்கும் மேலான தொண்டு மற்றும் தேசக் கட்டமைப்பு விழுமியங்களைப் பாதுகாப்பதற்கு, டாடா சன்ஸ் பட்டியலிடப்படாத தனியாா் நிறுவனமாகத் தொடா்வதே சிறந்தது எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






