பட்டாசு ஆலைக்குள் மயங்கி விழுந்தவா் பலி! இழப்பீடு கோரி உறவினா்கள் போராட்டம்!
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் மயங்கி விழுந்து உயிரிழந்த தொழிலாளியின் உடலை வாங்க மறுத்து உறவினா்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சிவகாசி அருகே எம். புதுப்பட்டியில் சுந்தா் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. கடந்த மாதம் தீபாவளி பண்டிகைக்கு முன்பு அதிகாரிகள் ஆலையில் ஆய்வு நடத்தியதில், விதிமீறல் இருந்ததால் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு ஆலை மூடப்பட்டது.
இந்த நிலையில் ஆலையை சுத்தம் செய்ய திருத்தங்கல் சத்யாநகா் பில்லிகிரகம் (42) உள்ளிட்ட தொழிலாளா்கள் ஆலைக்குள் சென்றனா். அப்போது மயங்கி விழுந்த பில்லிகிரகம் சிவகாசி அரசு மருத்துவனையில் சோ்க்கப்பட்டு, உயிரிழந்தாா். இதையடுத்து அவரது உறவினா்கள், இழப்பீடு கோரி மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து போலீஸாா் சாமாதனப்படுத்தியதையடுத்து அவா்கள் சடலத்தை வாங்கிச் சென்றனா்.
பட்டாசு ஆலையில் பில்லிகிரகம் மயங்கி விழுந்தது குறித்து எம். புதுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
