தாமரை நல்லூர் ஒன்றியம் அன்புடன் வரவேற்கிறது என்ற போர்டு அருகில் பிரேக் போட்ட காரிலிருந்து இருவர் இறங்கினர். ஒருவர் வேட்டியும் சட்டையுமாய் பாந்தமாய் இருந்தார். ஆஜானுபாகுவான உடம்பும் ஆழ்ந்த சிந்தனையுமான முகமுமாக இருந்தார். பேண்ட் சட்டை போட்ட அடுத்தவன் கையில் சில ஃபைல்கள் இருந்தன.
""ஃபைலை கார்ல வெச்சுடுங்க. நடந்தே போகலாம்'' வேட்டி அணிந்தவர் சொல்ல ஃபைல்களைக் காரில் வைத்துவிட்டு டிரைவரிடம் சொல்லிவிட்டுத் திரும்பிவந்தான் பேண்ட் அணிந்தவன்.
வேட்டிச் சட்டைக்குச் சொந்தக்காரர் தொழில் அமைச்சர் தங்கப்பாண்டியன். பேண்ட் அணிந்தவர் கலெக்டர் மாதவன். முப்பத்திச் சொச்சம் வயதுக்காரர். அமைச்சரும் கலெக்டரும் வந்திருப்பது ரகசிய விசிட். இங்கே வந்திருப்பது யாருக்கும் தெரியாது.
ஊர்மக்களுக்கு அடையாளம் தெரியாது என்ற நம்பிக்கை. முதல்வர், அவர்களிடம் முக்கியமான அசைன்மென்ட் கொடுத்திருந்தார்.
பெரிய தொழிற்சாலை ஒன்றை ஆரம்பிக்க தாமரை நல்லூர் சரிபடுமா என்று பார்த்துவர பணித்திருந்தார். எப்படியும் ஆயிரம் ஏக்கர் தேவைப்படும். அமைச்சருக்கு இந்த ஊரில் தொழிற்சாலை ஆரம்பிக்க வேண்டும் என்பது திடமான முடிவு. தன்னுடைய மாவட்டத்தில் நெல்லு விளையற இடத்தில் இரும்பு முளைக்கணுமா என்பது மாதவன் எதிர்ப்பு.
முதல்வர் எதிரிலேயே இருவரது எண்ணங்களும் உரசிக் கொள்ள முதல்வர் சிரித்துவிட்டார். இருவரையும் சமாதானப்படுத்தி இடத்தைப் பார்த்துவிட்டுவர அனுப்பியிருந்தார்.
அமைச்சர் என்றாலும் தங்கப் பாண்டியனுக்கு ஆதிக்கம் கிடையாது. மாதவனுக்குக் கலெக்டர் ஈகோ கிடையாது. சேர்ந்து வருவதில் சிக்கல் இல்லாததால் ஒன்றாக வந்துவிட்டார்கள்.
வரவேற்பே வறட்சியாய் இருந்தது. பயிர் ஏதும் இல்லாததால் எங்கு பார்த்தாலும் நிலங்கள் காய்ந்து பாளம் பாளமாய் பிளந்து இருந்தன.
""மாதவ்..! பார்த்தீங்களா? விவசாய நிலம், விவசாய நிலம்னு அடிச்சுக்கிட்டீங்களே.. விவசாயம் என்னத்தை வாழுது? எல்லாமே காய்ஞ்சி கெடக்குது. இங்க தொழிற்சாலை கட்டுறதுல என்ன தப்பு?'' என்று தன் வாதத்தை முன் வைத்தார் அமைச்சர்.
எப்படியாவது கலெக்டரை கன்வின்ஸ் செய்து தொழிற்சாலை ஆரம்பிச்சிடணும் என்பது அவருடைய எண்ணம். முடியாவிட்டால் இறுதியில் உத்தரவுதான்.
""வாஸ்தவம்தான் சார்.. இந்த ஊரை மையமாக வெச்சி பத்தாயிரம் பேர் இருக்காங்க. இந்த வாட்டி மழை இல்லாம போயிடுச்சு. அடுத்தமுறை மழை பெய்ஞ்சதும் நிலமைய கொஞ்சம் சரிபண்ணிக்குவாங்க. அதுக்காக ஒரேயடியா நிலத்தைப் பிடிங்கிட்டா எங்க சார் போவாங்க?''
""உம்.. தொழிற்சாலை ஆரம்பிச்சா நிரந்தரமா பத்தாயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். மறைமுகமா நிறைய பிழைப்பு நடக்கும்'' அமைச்சர் முணுமுணுத்தார்.
தான் சொன்ன சமாதானம் அவரிடம் எடுபடவில்லை என்பதால் மாதவன் விட்டுவிட்டார்.
மண்பாட்டை, ஏரிக்கரை, கண்மாய் ஓரம், கால்வாய் வரப்பு என நோட்டம்விட்டபடி இருவரும் வெகுதூரம் நடந்துவிட்டனர்.
""அடடே.. ரொம்பதூரம் வந்துவிட்டோம். தண்ணீர் எடுத்து வரவில்லையே'' அமைச்சர் அங்கலாய்க்க, மாதவன் உதட்டைக் கடித்துச் சிரித்தான்.
வரப்பின் அடுத்த முடிவில் பனை ஓலை வேய்ந்த பம்புஷெட் தெரிந்தது.
ஷெட்டுக்குப் பக்கத்தில் இரண்டு தென்னை மரம், ஒரு மாமரம். ஏழுமலையான் குடையாய் விரிந்த மாமர நிழலில் ஒரு வயோதிக மனிதர், அருகில் வயதான அவருடைய மனைவி. அந்த அம்மாள் வெயிலில் நடந்து வந்து கொண்டிருந்தவர்களை கைகாட்டி அழைத்தாள்.
அருகில் சென்று ""என்னம்மா?'' என்றார் அமைச்சர்.
""இந்த வேகாத வெயில்ல களைச்சு போயி வர்றீங்களே.. யாருன்னு பார்த்தேன். பள்ளிக்கூட வாத்தியாருங்களா?''
மாதவன் ஏதோ சொல்ல வாயெடுக்க, அவனைப் பேசவிடாமல் கையை அழுத்திய அமைச்சர், தன்னையும் கலெக்டரையும் அறிமுகப்படுத்திக் கொள்ளாமல் மறைத்துக் கொண்டார்.
""வெளியூரம்மா... கார்ல போயிக்கிட்டிருந்தோம்.. அப்படியே சுத்திப் பாக்லாம்னு...''
""அட மகராஜாங்களா.. ஊர்ல அப்படி என்ன இருக்குதுன்னு சுத்திப் பாக்க வந்துட்டீங்க..? சரி... சரி வரவே வந்தீங்க.. வாங்க ஒரு கை சாப்பிட்டுட்டுப் போவீங்க. பழைய சோறும் மிளகாயும்தான் இருக்குது..''
கள்ளங்கபடு இல்லாமல் அவர் வாஞ்சையுடன் அழைத்தது இருவருக்கும் வியப்பாக இருந்தது.
ஏதோ ஒரு ஊரில்.. யாரோ ஒரு மூதாட்டி. முன்பின் தெரியாத யாரோ இருவரை சாப்பிட அழைக்கிறாள். இதுதான் விருந்தோம்பல்.. இதுதான் பண்பாடு. இதுதான் கிராமத்து வாசனை.
""சாப்பிடறதைப் பத்தி ஒண்ணுமில்லம்மா.. திடீர்னு ரெண்டுபேர் வந்துட்டா சாப்பாடு இருக்குமா?'' பாட்டியம்மாவின் அழைப்பை மாதவன் தட்டிக் கழிக்க நினைத்தார்.
""என்னங்க அப்படி கேட்டுட்டீங்க. இது கிராமமுங்க. எத்தனை பேர் வந்தாலும் சாப்பிட சாப்பாடு உண்டு. இருக்கிறதை ஆளுக்கு ரெண்டு கை சாப்பிட்டா போவுது..''
பெரியவரும் அழைக்க, அமைச்சருக்கு என்ன தோன்றியதோ டக்கென்று உட்கார்ந்துவிட்டார்.
மாதவனுக்குத் திகைப்பு.
மாண்புமிகு அமைச்சர் ஒரு கை சோற்றுக்குத் தரையில் உட்கார்ந்துவிட்டார். அதுவும் வெட்டவெளியில்.
""அட உக்காருப்பா. பெரியவங்ககிட்ட ஊரைப்பத்திப் பேசிட்டுப் போகலாம்''
மாதவன் மனதை மந்திரி வாசிக்க, மாதவனுக்கு வேறுவழியில்லை. அவனும் பேன்டை மேலே தூக்கி, இடுப்பைத் தளர்த்தி காலை மடக்கி கஷ்டப்பட்டு உட்கார்ந்தான். அந்தப் பெண்மணி எவர் சில்வர் தூக்கிலிருந்த பழையச் சோற்றில் கொஞ்சம் தயிரைவிட்டுப் பிசைந்து அப்படியே மாரியாத்தா உருண்டை உருட்டி, அமைச்சர் கையில் ஒரு உருண்டையும் மாதவன் கையில் ஒரு உருண்டையும் வைத்து, அதன் தலையில் வறுத்த ஊறுகாய் மிளகாயைச் சொறுகினாள்.
கோப்பை நிறைய பூலோக உருண்டையாக ஐஸ்கிரீமும் அதன் தலையில் சிவப்பு செர்ரிப் பழமும் இருப்பது போல பாவித்து அமைச்சர் சாதத்தை உறிஞ்சினார்.
அவரைப் பார்த்து மாதவனும் கையிலிருந்த உருண்டையை வாயில் வைத்து பயந்தபடி மிளகாயை ஒரு கடி கடித்தான். அடேங்கப்பா.. காரம் சுர்ரென்று தலைக்கு ஏறியது.
மண்டையைப் பிளந்த வெயிலுக்கு இதமாக இருந்தது. கலெக்டராக இருந்து இப்படி ஒரு சாப்பாட்டைச் சாப்பிடவில்லையே.. மனதை மயக்கும் வாசனை. புளிப்பு.. தோதாக மிளகாய் காரம்... ஏகாந்த ருசி.
அடுத்த உருண்டைக்கு கையேந்தும் அமைச்சரைப் பார்த்து அவனும் கை நீட்டினான்.
சுட்டெரிக்கும் வெயிலுக்கு தாளிப்பு செய்யாத ஏடுமேயும் தயிர்சாதம் தேவாமிர்தமாய் இருக்க இருவரும் உறிஞ்சி சாப்பிட்டார்கள். சாப்பிட்டு முடித்து கை கழுவும்போது வயிறு திம்மென்றிருந்தது. உண்ட மயக்கம். நடக்க முடியாத அமைச்சர் சற்று ஓய்வு எடுக்க மறுபடியும் தரையில் சரிந்தபடி கேட்டார்.
ஏதாவது பேசணுமே?.. ""பெரியம்மா ஊர்ல விவசாயம் எப்படி?''
""பொன்னு விளையற பூமி ராசா.. மழைதான் வெளயாட்டு காட்டுது. வருஷத்துக்கு ஒத்தை போகம்தான். கவர்மென்டு தண்ணிக்கு வசதி செஞ்சு கொடுத்தா மூணுபோகம் வெளையும்..''
பலிகேட்கும் ஆசாமியிடம் ஆடு சாகாவரம் கேட்குதே. மாதவன் அமைச்சரைப் பார்த்து சிரித்தான். அவரோ முறைத்தார்.
""அது இல்லை பெரியம்மா... ஒரு போகம்தான் விளையுதுன்னா வருஷம்பூரா சாப்பாட்டுக்கு என்ன செய்வீங்க?''
""அதுக்கு என்னங்க செய்யறது? ஒரு போகத்துல வருஷத்துக்கு வேண்டிய நெல்லு கிடைச்சிடும். வயித்துக்கு அரிசி கெடைச்சுட்டா, கொழம்புக்குக் கெடைக்கிறதா பெரிய கஷ்டம்.. கை கால் எதுக்கு இருக்கு?''
அந்தம்மாளின் பதில் அமைச்சரை ஊமையாக்கியது.
பதிலுக்கு மாதவன் கேட்டான்.
""ஆமாம்மா.. இந்த ஊர்ல என்னவோ கம்பெனி கட்டப் போறாங்களாமே?''
""அதுதாங்க பயமா இருக்குது. சோறுபோடற நெலத்தைக் கூறுபோட்டு கம்பெனி கட்டப் போறாங்களாம்... சோத்துக்கு என்ன செய்வாங்களோ தெரியலை''
சொல்லும்போதே அந்த அம்மாளின் கண்கள் கலங்கி விட்டன. பாம்பு கடித்தது போல நடுக்கத்தில் நாக்கு குழறியது.
""பெரியம்மா உங்களுக்குத் தெரியலை.. புதுசு புதுசா கம்பெனி வந்தா உங்க பொண்ணு புள்ளைங்களுக்கு வேலை கிடைச்சி நல்ல பணம் கிடைக்கும்'' என அமைச்சர் ஆறுதல் சொல்ல அந்தம்மாள் ஆவேசமாகிவிட்டாள்.
""என்னங்க பணம்.. அந்தப் பணமா சோறுபோடும். உங்க பாக்கெட்டுல இல்லாத பணமா.. அந்தப் பணத்தையா இப்ப சாப்பிட்டீங்க?'' யாரிடம் பேசுகிறோம் என்று தெரியாமல் நிலம் கையைவிட்டுப் போகிற ஆதங்கத்தில் அமைச்சரிடம் வெடவெடத்தாள் அந்தம்மாள்.
""இரு பாக்கியம். எதுக்கு ஆவேசப்படுறே'' நடுங்கும் மனைவியின் கையைப் பிடித்துக் கொண்ட பெரியவர், ""ஐயா உங்களுக்குத் தெரியாதுங்க. கம்பெனி கட்றோம்னு ஊருக்குச் சோறுபோடுற நிலத்துல கம்பெனி ஆரம்பிப்பாங்க. ஆயிரம்பேருக்கு வேலைதர்றதா சொல்லுவாங்க. கொஞ்ச நாள்ல நஷ்டம் ஆகிப் போச்சுனு கம்பெனிய மூடுவாங்க. கம்பெனிக்குக் கம்பெனி போச்சு.. நெலத்துக்கு நெலமும் போச்சு.'' அனுபவத்தில் விளக்க ஆரம்பித்தார்.
அமைச்சருக்குப் பயிர் செய்த நிலத்தைப் பிடுங்கி கம்பெனி கட்டி நான்கைந்து வருஷத்தில் மூடிவிட்ட கதைகள் எல்லாம் நினைவுக்கு வந்தன. இந்திய வளர்ச்சிக்குப் பொருந்தாத பொருள்கள்.. அதைத் தயாரிக்க கம்பெனிகள். குளிர்பான கம்பெனி, சாராய கம்பெனி, குளிர்ப்பெட்டி தொழிற்சாலை...
""சரிங்க நாங்க கிளம்பறோம்'' அமைச்சர் எழுந்தார். கூடவே கலெக்டரும் எழுந்தார்.
""மகராசனா போயிட்டு வாங்க'' இருவரும் எழுந்துவந்து வழியனுப்பி வைத்தனர். காரை நெருங்கும்போது கலெக்டர் கேட்டார்.
""என்ன சார் முடிவு செஞ்சீங்க?''
""அதான் ஒண்ணும் புரியலை. முதல்வர் மினிஸ்டர் வேலாயுதம் கிட்டயும் தொழிற்சாலைக்கான இடம் தேர்வு செய்ய சொல்லியிருக்காரு. ஒருவேளை அது சரிபட்டு வருமான்னு பார்க்கணும்.''
""எனக்கும் இந்த இடத்தை தேர்வு செய்றது சரியா படலை சார்''
காரில் ஏறி அமர்ந்தனர்.
""வேலாயுதம் பார்க்கப் போகிற இடம் எதுனு தெரியுமா?'' விசாரித்தார் அமைச்சர்.
விரல் நுனியில் தகவல் வைத்திருந்தார் கலெக்டர். ""கும்பகோணம் போகிற வழியில அணைக்கரைப் பக்கம்..''
கார் கிளம்பியது. ஏசி முழுவீச்சில் காரை ஆக்ரமித்தது.
""மிஸ்டர் மாதவன்... எனக்கென்னவோ ஃபேக்டரி கட்றதுக்கு இந்த இடம்தான் சரியா வரும்னு தோணுது. ஒரு போகம் விளையற இடத்தை வெச்சுக்கிட்டு என்ன செய்யச் சொல்றீங்க..? மக்களுக்கு மொதல்ல கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். அப்புறம் சரியாகிடும்'' என்றார் தீர்மானமாய்.
அமைச்சரின் திடீர் முடிவுக்குக் காரணம் புரியாமல் விழித்தார் கலெக்டர். தூரத்தில் கைச்சோறு சாப்பிட்ட பம்பு ஷெட்டில் முதியவர்கள் புள்ளியாகத் தெரிந்தனர். கை ஈரம் காய்வதற்குள் அமைச்சர் இப்படி முடிவு எடுத்துவிட்டாரே என்று அதிர்ச்சியாக இருந்தது.
அணைக்கரை பக்கம் அமைச்சருக்கு ஆயிரத்துச் சொச்சம் ஏக்கர் நிலம் பினாமி பெயரில் இருப்பது கலெக்டருக்குத் தெரியாது. தெரிந்திருந்தால் அந்த அதிர்ச்சிக்கு அவசியமிருந்திருக்காது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










