
போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், காஸாவுடன் குருதியிலா போருக்கு இஸ்ரேல் தயாராகி வருவதாக சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் கூறுகின்றன.
இஸ்ரேல் - காஸா நாடுகளுக்கிடையேயான ஆறுவார கால போர் நிறுத்தம் ஒப்பந்தம் ஜனவரி 19 ஆம் தேதிமுதல் அமலானது. இந்த காலகட்டத்தில் இரு தரப்பினரும் பணயக் கைதிகளை மாற்றிக் கொண்டனர். முதல் போர் நிறுத்த ஒப்பந்தக் காலத்திலேயே இரண்டாம் போர் நிறுத்தம் ஒப்பந்தமும் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரையில் அதுபோன்று எதுவும் நடைபெறவில்லை.
அதுமட்டுமின்றி, அமெரிக்கா முன்மொழிந்த போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒத்துழைக்க வேண்டும் என்று இஸ்ரேல் வலியுறுத்துகிறது.
அமெரிக்காவின் முன்மொழிவில் கூறியதாவது: ஹமாஸின் பணயக் கைதிகளில் (50-க்கும் மேற்பட்டோர்) பாதி பேரை முதல் நாளில் விடுவிக்க வேண்டும்; ஆனால், அதற்கு பதிலாக இஸ்ரேல் யாரையும் விடுவிக்காது. நிரந்தர போர்நிறுத்த ஒப்பந்தத்தின்போது மீதமுள்ள பணயக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று கூறியது.
இதன்மூலம், பணயக் கைதிகள் குறைவதால், முதல் விடுவிப்பிலேயே ஹமாஸ் பலவீனப்பட்டு விடும். இதனைத் தொடர்ந்து, ஹமாஸை வெற்றி கொள்ளலாம் என்பதே இஸ்ரேலின் எண்ணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அமெரிக்காவின் முன்மொழிவை ஏற்ற இஸ்ரேலுக்கு காஸா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இதனிடையே, காஸாவுக்கு செல்லும் உணவு, தண்ணீர், மருத்துவ உதவிகள் முதலான அத்தியாவசிய தேவைகளுக்கு இஸ்ரேல் அனுமதி வழங்காமல் பாலஸ்தீன மக்களைப் பசியால் வாட்டி வருகிறது. காஸா மீதான பட்டினிப் போரை அரபு நாடுகள் பலரும் எதிர்த்து வருகின்றனர்.