இந்தவாரம் கலாரசிகன் - Dinamani - Tamil Daily News

இந்தவாரம் கலாரசிகன்

First Published : 20 June 2010 02:00 AM IST


திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சென்றுவிட்டு சென்னை திரும்பும் வழியில் புதுவையில் தங்க நேர்ந்தது. அப்போது புதுவை "தினமணி' நிருபர் குப்பன் கையில் ஒரு சிற்றிதழ் வைத்திருந்தார். கடந்த கால் நூற்றாண்டு காலமாக நடத்தப்பட்டுவரும் "புதுவை பாரதி' என்கிற இதழை வாங்கிப் புரட்டியபோது, பல அரிய செய்திகள் அதில் காணப்பட்டன.

புதுவை தந்த இதழ்கள் என்கிற தலைப்பில் 1823 முதல் புதுவையில் இருந்து வெளிவந்த பல இதழ்கள் மற்றும் செய்தித்தாள்களின் பட்டியலை வெளியிட்டிருப்பதுடன் 1816-இல் முதன் முதலாக நிறுவப்பட்ட பிரெஞ்சு அரசின் அச்சகம் பற்றிய தகவல்களையும் அந்தக் கட்டுரை உள்ளடக்கி இருக்கிறது. 1840-இல் பொன்னர் என்கிற கத்தோலிக்கப் பாதிரியார் பிரெஞ்சு அரசிடம் அனுமதி பெற்று சன்மவிராக்கினி மாதாகோயில் அச்சுக்கூடம் என்கிற பெயரில் தொடங்கிய அச்சுக்

கூடம் இப்போதும் "மிஷன் அச்சகம்' என்கிற பெயரில் இயங்குகிறது என்கிற தகவல் பிரமிப்பை ஏற்படுத்தியது. இந்தத் தகவல்கள் அனைத்தும் பேராசிரியர் மு.சாயபு மரைக்காயரின் இல்ல நூலகத்திலிருந்து கிடைக்கப்பெற்ற கு.இராசேந்திரன் எழுதிய "புதுவை பேணும் தமிழ்' என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டது என்கிற அடிக்குறிப்பும் காணப்படுகிறது.

அது ஒருபுறமிருக்க, "புதுவை பாரதி' இதழின் ஆசிரியர் யார் என்று விசாரித்தபோது அவர் ஒரு பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றுபவர் என்பதும், அவரது பெயர் ஓவியர் பாரதிவாணர் சிவா என்பதும் தெரியவந்தது. அவரை நேரில் சந்தித்துப் பாராட்ட நேரமில்லாததால் தொலைபேசியில் வாழ்த்துகளை தெரிவித்தபோது, அவர் சொன்ன தகவல் அவரைப் பற்றிய மதிப்பை பல மடங்கு உயர்த்தியது.

""உங்கள் பத்திரிகையில் விளம்பரங்களே இல்லையே, ஏன்? எப்படி நீங்கள் இந்த இதழை வெளிக்கொணர முடிகிறது?'' என்கிற எனது கேள்விக்கு ஓவியர் பாரதிவாணர் சிவா தந்த பதில் என்ன தெரியுமா?

""நான் பதிப்பாளர் மட்டும் அல்லவே? ஆசிரியராகவும் இருப்பதால் யாரிடமும் போய் தலையைச் சொரிந்துகொண்டு நின்று விளம்பரப் பிச்சை கேட்க எனது பத்திரிகை தருமமும், எழுத்து கர்வமும், சுயமரியாதையும் இடம் கொடுக்கவில்லை. யாராவது வலிய அழைத்து விளம்பரம் கொடுத்தால் மட்டுமே ஏற்றுக்கொள்கிறேன். நான் ஒரு பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றுகிறேன். பாரதியின் பெயரில் ஓவியப் பயிற்சி மையம் ஒன்றை நடத்துகிறேன். இதிலிருந்து எனக்குக் கிடைக்கும் வருமானத்தையும், நன்கொடை மற்றும் சந்தாதாரர்கள் மூலம் கிடைக்கும் பணத்தையும் மட்டுமே நம்பி, கடந்த 25 ஆண்டுகளாக இந்தப் பத்திரிகையை நடத்தி வருகிறேன்''.

பதில் பிரமிக்க வைக்கவில்லை, பெருமிதப்படவைத்தது.

புதுவை மூலைக்குளம் பாரீசு நகரின் மூன்றாவது குறுக்குத் தெருவிலிருந்து கடந்த 25 ஆண்டுகளாக வெளிவரும் "புதுவை பாரதி' இதழ் 1985-இல் கையேட்டுப் பிரதியாகத் தொடங்கப்பட்டு, தட்டச்சு, நகலிதழ், லித்தோ, ஆப்செட் என படிப்படியாக வளர்ந்திருக்கிறது என்றால் அதற்குக் காரணம், உழைப்பு மட்டுமல்ல, சமுதாயச் சிந்தனை, லட்சிய வெறி, தமிழ்த்தாகம்.

பாரதி உயிரோடு இருந்திருந்தால் "சபாஷ் பாண்டியா' என்று தட்டிக்கொடுத்து பாராட்டி இருந்திருப்பார். அடுத்த முறை புதுவை சென்றால் இந்த அன்பரைச் சந்திக்காமல் இருந்துவிடக்கூடாது என்று எனது "டைரி'யில் குறிப்பெழுதி வைத்துவிட்டேன்.

******

பஞ்சமும் பசியும் மனித சமூகத்தின் சாபக்கேடு. பாண்டிய நாட்டில் சங்ககாலத்தை அடுத்து மிகப்பெரிய பஞ்சம் தாக்கியதாக இறையனார் களவியல் குறிப்பிடுகிறது ("பன்னீரியாண்டு வற்கடம் சென்றது. செல்லப்பசி கடுகியது').

தக்காண பீடபூமியைத் தாக்கிய பல கடும் பஞ்சங்களைப் பற்றிய குறிப்புகள் கிடைத்துள்ளன. கி.பி.1109 முதல் கி.பி. 1143 வரை ஒரிசாவில் ஏற்பட்ட பஞ்சமும், கி.பி.1336-இல் மராட்டியத்தில் ஏற்பட்ட பஞ்சமும், கி.பி. 1570-இல் நெல்லைப் பகுதியிலும், கி.பி. 1647-இல் கோவைப் பகுதியிலும் கி.பி. 1659-இல் திருச்சி, தஞ்சையிலும் கடும் பஞ்சம் தாக்கியதற்கான பல ஆதாரங்கள் காணப்படுகின்றன.

கி.பி.1709-இல் மதுரை, ராமநாதபுரம், நெல்லைப் பகுதிகளில் நிலவிய பஞ்சம் பற்றி கத்தோலிக்கப் பாதிரியார்கள் ரோமாபுரியில் உள்ள வத்திகானுக்கு எழுதிய கடிதத்தில், "கொடும் பஞ்சத்தில் பெற்றெடுத்த குழந்தையை தாய் விற்பதும், கணவர்கள் கட்டிய மனைவிமார்களை அடகுவைப்பதும் நடைபெறுகின்றன. பாதையோரத்தில் பட்டினிச் சாவால் செத்து விழுந்தவர்களுக்கு ஈமச்சடங்குகள் செய்யவோ, சவ அடக்கம் செய்யவோகூட வழியில்லை என்று எழுதிய குறிப்பு கிடைத்திருக்கிறது.

பஞ்சம், புயல், வெள்ளம் போன்ற இயற்கையின் சீற்றங்களை நேரில் கண்ட புலவர்கள் மக்கள் அடைந்த சொல்லொணா துயர்களைப் பாடலாகப் பாடியிருக்கிறார்கள். ஒருவகையில் அவை வரலாற்று ஆவணம் எனலாம். பஞ்சம் பற்றிய செய்திகளையும், கும்மிகளையும், இலக்கியங்களையும் தொகுத்து புலவர் செ.இராசு "பஞ்சக் கும்மிகள்' என்கிற நூலைப் படைத்திருக்கிறார்.

அரசர்குளம் சாமிநாதன், கள்ளப்புலியூர் மலைமருந்தன், வெண்ணந்தூர் குருசாமி ஆகியோர் தனித்தனியே படைத்திருக்கும் "தாது வருடப் பஞ்சக் கும்மி', வெண்ணந்தூர் அருணாசலம் எழுதிய "கர வருடப் பஞ்சக் கும்மி' மற்றும் "பரிதாபி வருடப் பஞ்சக் கும்மி' வெங்கம்பூர் சாமிநாதன் எழுதிய "காத்து நொண்டிச் சிந்து', ஜம்பை காசிம் புலவரின் படைப்பான "பெருவெள்ளச் சிந்து' ஆகியவை புலவர்கள் நேரில் அறிந்த, அனுபவித்த காட்சிகளைப் பதிவுசெய்திருக்கும் வரலாற்று ஆவணங்கள்.

பஞ்ச காலத்தில் கூட இலக்கியமா என்று ஆச்சரியப்படாதீர்கள். வறுமையிலும், வேதனையிலும்தான் அற்புதமான இதயத்தைத் தொடும் படைப்புகள் உருவாகி இருக்கின்றன. கள்ளப்புலியூர் மலைமருந்தன் இயற்றிய "தாது வருடப் பஞ்சக் கும்மி'யில் இருந்து சில வரிகளைப் படியுங்கள் புரியும்.

""வீட்டினில் தான்யமும் இல்லாமல் ஒன்றை

விற்கவும் கையில்இல் லாமல் கடன்

கேட்ட இடத்தில் கிடைக்கா மல்சிலர்

கெஞ்சி இரக்கிறார் பாருங்கடி

எறும்பு வலைகளை வெட்டி அதனில்

இருக்கும் தானியம்தான் எடுத்து

முறத்தால் கொழித்துக் குத்திச் சமைத்து

உண்ணுகி றார்சிலர் பாருங்கடி

குடிக்கத் தண்ணீரும் இல்லா மல்பணம்

கொண்டு திரிந்தாலும் கிட்டாமல்

இடிக்குப் பயந்த பாம்புகள் போலே

ஏங்குகி றார்சிலர் கேளுங்கடி''

******

சென்ற வாரம் கவிஞர் வேழவேந்தனின் கவிதையைப் படித்து ரசித்த கையோடு இந்தவாரம் அதேபோல இன்னொரு கவிதையைப் படிக்க நேர்ந்தது. "ஓம் சக்தி' மாத இதழின் ஆசிரியர் பெ.சிதம்பரநாதன் ஓர் அற்புதமான கவிஞரும் கூட. கவிஞர் மீரா தனது "அகரம்' பதிப்பகத்தின் மூலம் 20 ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் சிதம்பரநாதனின் "அரண்மனை திராட்சைகள்' என்கிற கவிதைத் தொகுப்பை முதன் முதலில் வெளியிட்டார். "பொய்கை' என்கிற கவிதைத் தொகுப்பும் "வைகறை' என்கிற கவிதைத் தொகுப்பும் கவிஞர் சிதம்பரநாதனின் பிற படைப்புகள்.

தற்செயலாகக் கவிஞரின் "வைகறை' கவிதைத் தொகுப்பைப் புரட்டிக்கொண்டிருந்தபோது சிறப்பு "ழ'கரம் என்கிற அவரது கவிதை ஈர்த்தது.

சிறப்பு "ழ'கரம்

தமிழுக்கே சிகரம்

பழம், குழல்

அழகு என

"ழ' கரங்களை

சொல்லிவந்த

வகுப்பாசிரியர்

மாணவனிடம்

"ழ'கரம் ஒன்று கேட்க

அவனோ

"ஊழல்' என்றான்

அதிர்ச்சியடைந்த ஆசிரியர்

""ஊழலுக்குச் சிறப்பு ழகரமா?

ஊழலில் ஊழல்'' என

உரக்கக் கத்தினார்.

வடக்கிருந்து(ம்)

வாழும்நட்பு!

மா. ஆறுமுககண்ணன்

குறிப்பு: வாசகர்கள் இந்த கமெண்ட் பாக்ஸ் மூலம் பதிவு செய்யும் கருத்துகள், அவரவரின் பேஸ்புக், கூகுள், டிவிட்டர், லிங்க்ட்இன் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு கணக்கு மூலம் நுழைந்து அவரவர் அடையாளத்துடன் தாமாகவே பதிவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த வித அடையாளக் கணக்குகளும் இன்றி, விருந்தினராக நுழைந்து வாசகர் பதிவு செய்யும் கருத்துகள், ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியாகும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு. இருப்பினும், நாகரீகமற்ற, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், கருத்து பதிவு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க தினமணிக்கு உரிமை உண்டு. அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும். எனவே நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம்.