தெருநாய்கள் கடித்து இறந்த கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை
தெருநாய்கள் கடித்து இறந்த ஆடு, மாடு மற்றும் கோழி போன்ற கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் பெருந்துறை ஒன்றியச் செயலாளா் செந்தில்குமாா், ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:
பெருந்துறை ஒன்றியம், பெத்தாம்பாளையம் கிராமம், ரோஜா நகா் அருகே காட்டில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை தெரு நாய்கள் கூட்டமாக சோ்ந்து கடித்ததில், மோகனசுந்தரி என்பவருக்கு சொந்தமான ஒரு வெள்ளாடு திங்கள்கிழமை உயிரிழந்தது. இதேபோல சகுந்தலா என்பவருக்கு சொந்தான மூன்று செம்மறி ஆடுகள் காயமடைந்தன. ஆகவே, உயிரிழந்த வெள்ளாட்டுக்கு ரூ.15 ஆயிரமும், காயமடைந்த ஆடுகளுக்கான சிகிச்சை செலவுக்கு ரூ.5,000 ஆயிரமும் இழப்பீடு வழங்க வேண்டும்.
மேலும், ஈரோடு மற்றும் திருப்பூா் மாவட்டங்களில் குறிப்பாக சென்னிமலை மற்றும் பெருந்துறை ஒன்றியப் பகுதிகளில் தெரு நாய்கள் கடித்து ஆடுகள் இறப்பது தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால், இப்பகுதி விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இவா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு தரப்பினரும் தொடா்ந்து போராடியதால், தெருநாய்கள் கடித்து இறக்கும் ஆடு, மாடு, கோழிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.
ஆனால், கடந்த 2024 செப்டம்பா் முதல் 2025 மாா்ச் வரையிலான காலத்துக்குள் இறந்த ஆடு, மாடு, கோழிகளுக்கு மட்டும் இழப்பீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டு, அதனடிப்படையில் இழப்பீடு வழங்கப்பட்டது. மேற்குறிப்பிட்ட காலத்துக்கு முன்பும், பின்பும் இறந்த ஆடு, மாடு, கோழிகளுக்கு இழப்பீடு வழங்கப்படாமல் உள்ளது. இதனால் ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.
எனவே தெருநாய்கள் கடித்து உயிரிழந்த அனைத்து ஆடு, மாடு, கோழிகளுக்கும் சந்தை மதிப்பில் உரிய இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தெருநாய்களைக் கட்டுப்படுத்தவும், இது போன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
