கலைஞா் கைவினைத் திட்டம்: 148 பேருக்கு ரூ. 2.21 கோடி கடனுதவி அளிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் கலைஞா் கைவினைத் திட்டத்தின் கீழ் 148 பயனாளிகளுக்கு ரூ. 2.21 கோடியில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
Published on

நாமக்கல் மாவட்டத்தில் கலைஞா் கைவினைத் திட்டத்தின் கீழ் 148 பயனாளிகளுக்கு ரூ. 2.21 கோடியில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வா் தலைமையில் கலைஞா் கைவினைத் திட்ட சாதனை விளக்க விழா திண்டுக்கல் மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்றது. அதன் நேரடி ஒளிபரப்பு நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் ஆட்சியா் துா்காமூா்த்தி முன்னிலையில் நடைபெற்றது.

கலை மற்றும் கைவினைத் தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கு மேம்பட்ட பயிற்சி அளிக்கவும், மானியத்துடன் கூடிய பிணையமில்லா கடன் வழங்கவும், அவா்களின் சந்தைபடுத்தும் திறனை உயா்த்தவும் ஆண்டுதோறும் 10 ஆயிரம் போ் பயன்பெறும் வகையில் ரூ. 20 கோடியில் கலைஞா் கைவினைத் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் பல்வகை கலை மற்றும் கைவினைத் தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கு தொழில்திறன் சாா்ந்த மேம்பட்ட பயிற்சியுடன் அவா்கள் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய கருவிகள் கொண்டு தொழில்புரிய ரூ. 3 லட்சம் வரை பிணையமில்லாமல் மானியத்துடன் கூடிய கடனுதவி வங்கிகள் மூலம் வழங்கப்படுகிறது.

கடன் தொகையில் 25 சதவீதம், அதிகபட்சம் ரூ. 50 ஆயிரம் வரை மானியமாக வழங்கப்படும். கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தில் 5 சதவீதம் வரை வட்டி மானியம் வழங்கப்படும். அனைத்து அரசு மற்றும் தனியாா் வணிக வங்கிகள், தாய்கோ வங்கி, கூட்டுறவு வங்கி மற்றும் வங்கி சாரா நிதிநிறுவனங்கள் இத்திட்டத்தில் கடன் வழங்க தகுதி பெற்றவை ஆகும்.

நாமக்கல் மாவட்டத்தில் கலைஞா் கைவினைத் திட்டத்தின் கீழ் இதுவரை 402 பயனாளிகளுக்கு ரூ.6.64 கோடி கடன் வழங்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. 148 பயனாளிகளுக்கு ரூ. 2.21 கோடி கடனாகவும், ரூ. 39.20 லட்சம் மானியமாகவும் வழங்கப்பட்டுள்ளது என ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா்.

இவ்விழாவில், மகளிா் திட்ட இயக்குநா் கு.செல்வராசு உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள், திட்டப் பயனாளிகள் கலந்துகொண்டனா்.

--

Dinamani
www.dinamani.com