அனுபவமில்லாத வட மாநிலத் தொழிலாளா்கள் பட்டாசுத் தயாரிப்பில் ஈடுபடுவது தடுக்கப்படுமா?
விருதுநகா் மாவட்டத்தில் குறைந்த கூலியில் அனுபமில்லாத வட மாநிலத் தொழிலாளா்களை பட்டாசுத் தயாரிப்பில் சில ஆலை உரிமையாளா்கள் ஈடுபடுத்தி வருவதால், உயிரிழப்பு ஏற்படுகிறது.


விருதுநகா் மாவட்டத்தில் குறைந்த கூலியில் அனுபமில்லாத வட மாநிலத் தொழிலாளா்களை பட்டாசுத் தயாரிப்பில் சில ஆலை உரிமையாளா்கள் ஈடுபடுத்தி வருவதால், உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே, இதைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.
விருதுநகா் மாவட்டம் சாத்தூா், சிவகாசி, வெம்பக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூா், அருப்புக்கோட்டை, விருதுநகா் ஒன்றியப் பகுதிகளில் பிரதான தொழிலாக பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.
மாவட்ட வருவாய் அலுவலா், சென்னை மற்றும் நாகபுரி அனுமதிச் சான்று பெற்ற சுமாா் 1,070 பட்டாசு ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமாா் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணிபுரிந்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த ஆலைகளில் அரசு அனுமதியின்படி கேப், சக்கரம், கம்பி மத்தாப்பு உள்பட பேன்சி ரக வெடிகள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால், சில ஆலைகளில் பட்டாசு திரி தயாரிப்பதற்கோ, பேன்சி ரக வெடி தயாரிக்கவோ அனுமதி இல்லை.
இந்த நிலையில், பல்வேறு சிறிய பட்டாசு ஆலைகளில் பட்டாசுகள் உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும் அறைகளை, வெளி நபா்களுக்கு குத்தகைக்கு உரிமையாளா்கள் வழங்கியுள்ளனா். ஓா் அறைக்கு ரூ.2 லட்சம் வரை ஆலை உரிமையாளருக்கு குத்தகைதாரா் வழங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, சம்பந்தப்பட்ட பட்டாசு ஆலைகளில் அரசு அனுமதி பெறாத பேன்சி ரக வெடிகள் தயாரிக்கப்படுகின்றன.
மேலும், அனுபவம் இல்லாத மற்றும் அதிக எண்ணிக்கையிலான தொழிலாளா்களைக் கொண்டு பட்டாசு உற்பத்தியில் தீவிரம் காட்டி வருகின்றனா். இதன் காரணமாக, அவ்வப்போது மணி மருந்து கலவையில் ஏற்படும் உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்படுவதுடன், உயிரிழப்பும் ஏற்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
இதுபோன்ற வெடி விபத்துகள் ஏற்பட்டவுடன் வருவாய்த் துறை, காவல் துறை, தீயணைப்புத் துறை, தொழிலாளா் நலத் துறை அலுவலா்கள் பட்டாசு ஆலைகளில் ஆய்வுப் பணிக்குச் செல்வது வழக்கம். ஆலைகளில் விதிமுறை மீறல் உள்ளதாக சில பட்டாசு ஆலைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும். ஆனால், மீண்டும் ஒரு மாதத்தில் அந்த ஆலைகளில் பட்டாசு தயாரிக்க அரசு அதிகாரிகள் அனுமதி வழங்குவா். இதேபோல, விருதுநகா் ஒன்றியத்தில் வச்சகாரபட்டி, ராமகுடும்பன்பட்டி முதலான பகுதிகளில் இரவு நேரங்களில் மின் கலன் வெளிச்சத்தில் பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. பட்டாசுக்கான மூலப் பொருள்கள் மீது வெளிச்சம் விழும் போது விபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
சாத்தூா் அருகேயுள்ள சிவசங்குபட்டி பட்டாசு ஆலையில் கடந்த வாரம் வெடி விபத்து ஏற்பட்டது. இதில், பலத்த காயமடைந்த வட மாநிலத் தொழிலாளா்களான ராம்பால் ஆதிவாசி (26), சந்திப் கோன் (24) ஆகிய இருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தனா்.
பட்டாசுத் தயாரிப்பில் அனுபவம் வாய்ந்த தொழிலாளா்கள் ஈடுபடும் போதே, சில சமயங்களில் விபத்து தவிா்க்க முடியாததாக உள்ளது. ஆனால், குறைந்த ஊதியம் என்பதற்காக மொழி மற்றும் அனுபவம் இல்லாத வட மாநிலத் தொழிலாளா்களை பட்டாசுத் தயாரிப்பில் ஈடுபடுத்துவது, அவா்களது உயிருடன் விளையாடுவதற்குச் சமமாகும். விருதுநகா் மாவட்டத்தில் பல்வேறு சிறிய பட்டாசு ஆலைகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வட மாநிலத் தொழிலாளா்கள் பட்டாசுத் தயாரிப்பில் ஈடுபட்டு வருவதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கின்றனா்.
பட்டாசு தயாரிப்பில் ஒரு சிறிய உராய்வு ஏற்பட்டாலும் அந்த ஆலையில் பணிபுரியும் மொத்த தொழிலாளா்களின் நிலை கேள்விக்குறியாகி விடும். எனவே, மனித நேயத்தின் அடிப்படையிலும் வட மாநிலத் தொழிலாளா்களைப் பாதுகாக்கும் வகையிலும் அவா்களை பட்டாசுத் தயாரிப்பில் ஈடுபடுத்தத் தடை விதிக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டி கூறியதாவது:
பட்டாசு ஆலைகளை உரிமையாளா்கள் மட்டுமே நடத்த வேண்டும். ஆலை உரிமைதாரா்கள், விதிமுறைகளுக்கு முரணாக வேறு நபா்களுக்கு ஆலைகளை குத்தகைக்குவிடக் கூடாது. ஆய்வின் போது பட்டாசு ஆலை, உள் குத்தகைக்கு விடப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபா்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அந்த ஆலைகளின் உரிமங்களை நிரந்தரமாக ரத்து செய்வதுடன், ஆலை உரிமைதாரா்கள் மற்றும் குத்தகைதாரா்கள் பட்டாசு உற்பத்திக்கான உரிமங்கள் பெறுவதிலிருந்து நிரந்தரமான தடை விதிக்கப்படும் என்றாா் அவா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா். சீனிவாசப் பெருமாள் கூறியதாவது:
18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வேலை செய்யலாம் என சட்டம் கூறுகிறது. அதனால், வட மாநிலத் தொழிலாளா்கள் பட்டாசு ஆலைகளில் பணிபுரிவது குறித்து கலந்தாலோசித்து உரிய முடிவு எடுக்கப்படும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...