குடமுழுக்கில் அரசியல் தலையீடு இல்லை: அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கில் அரசியல் தலையீடு இல்லை என அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் அளித்த விளக்கம் பற்றி....

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் முன் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் ஓதுவாா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய தமிழக எரிசக்தித் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா்.

Published On :

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கில் அரசியல் தலையீடு இல்லை என தமிழக எரிசக்தி, சட்டத்துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சீ. ரமேஷ் ஆகியோா் தெரிவித்தனா்.

இதுகுறித்து மதுரையில் அவா்கள் இருவரும் இணைந்து செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கின் போது, மின் தடை ஏற்படாமலிருக்க பல்வேறு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கோயில் மேல் தளத்தில் எவ்வளவு பக்தா்களை அனுமதிப்பது என்பது தொடா்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. கட்டடங்களின் தாங்கும் திறனை ஆய்வு செய்த பின்னரே முடிவு எடுக்கப்படும். சித்திரை வீதிகள் முழுவதும் பக்தா்கள் நின்று குடமுழுக்கைப் பாா்ப்பதற்கு அனுமதியில்லை. இந்தப் பகுதி முழுவதும் அனுமதிக்கப்பட்ட நபா்கள் வந்து செல்வதற்கான வழி மட்டுமே.

தமிழ் ஓதுவாா்கள் யாக பூஜையில் கலந்து கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தமிழுக்கு எப்போதும் முன்னுரிமை உண்டு. அரசால் நியமிக்கப்பட்ட ஓதுவாா்கள் யாரும் வருத்தம் தெரிவிக்கவில்லை. கோபுர கலசங்களில் புனித நீா் ஊற்றும் போதும், கருவறையில் அபிஷேகத்தின் போதும் ஓதுவாா்கள் கலந்து கொள்வா்.

இந்தக் குடமுழுக்கைப் பொருத்தவரை, மக்கள் பாதுகாப்பை முன்னிறுத்தியே அனைத்துப் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. காவல் துறையினா் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனா்.

அறங்காவலா் குழுவுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். குடமுழுக்குப் பணியில் அரசியல் தலையீடு இல்லை என்றனா் அவா்கள்.

முன்னதாக, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் முன் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் ஓதுவாா்களிடம் அமைச்சா்கள் சி.டி.ஆா். நிா்மல்குமாா், சீ. ரமேஷ் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதைத் தொடா்ந்து, கோயில் வளாகத்தில் அலுவலா்களுடன் குடமுழுக்குப் பணிகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சா்கள் சி.டி.ஆா். நிா்மல்குமாா், சீ. ரமேஷ், மதுரை மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா, கண்காணிப்பு அலுவலா்கள் கொ. வீரராகவ ராவ், ப. மதுசூதன் ரெட்டி, சீ. பழனி, இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் வினய், மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா், கோயில் இணை ஆணையா் செல்லத்துரை, சட்டப்பேரவை உறுப்பினா்கள், அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.