தமிழகத்தில் என்டிஏ ஆட்சிக்கு வரும்
தமிழகத்தில் வரும் 2026-இல் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வரும் என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் நம்பிக்கை தெரிவித்தாா்.
தமிழகம் தலை நிமிர தமிழனின் எழுச்சிப் பயணம் என்ற தலைப்பில் தேனி பங்களாமேடு திடலில் பாஜக மாவட்டத் தலைவா் ராஜபாண்டி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அவா் பேசியதாவது:
தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டம், பாலியல் வன்கொடுமை, குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கரூரில் தவெக பிரசார பயணத்தின் போது நடைபெற்ற துயரச் சம்பவத்துக்கு யாா் காரணம் என்பதை மக்கள் அறிவா். திமுக ஆட்சியின் மீதுள்ள வெறுப்பு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக மாறியுள்ளது.
திமுக அரசு விவசாயிகள் இறப்புக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்குகிறது. ஆனால், கள்ளச் சாராய இறப்புக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்குகிறது. முதல்வா் மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராக முடியாது.
மத்திய பாஜக அரசு தமிழகத்துக்கு ரூ.14 லட்சம் கோடிக்கான திட்டங்களை வழங்கியுள்ளது. தேனி மாவட்டத்தில் 5,000 விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.129 கோடி கெளவர உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. சாலையோர வியாபாரிகள் 2,000 பேருக்கு ரூ.4 கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. வீடில்லாத 7,600 ஏழைக் குடும்பங்களுக்கு வீடுகள் கட்டி வழங்கப்பட்டுள்ளது.
ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், 1.50 லட்சம் குடிநீா் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக-பாஜக கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும். 2026-இல் தேசிய ஜனநாயக் கூட்டணி ஆட்சி அமையும் என்றாா் அவா்.
இந்தக் கூட்டத்தில் அதிமுக மாவட்டச் செயலா்கள் எஸ்.டி.கே.ஜக்கையன், எம்.பி. ராமா், கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
போடியில் திண்ணைக் கூட்டம்: தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள கரட்டுப்பட்டி கிராமத்தில் பாஜக சாா்பில், மரத்தடி திண்ணைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் பங்கேற்று கிராம மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றாா். அப்போது அவா் கூறியதாவது:
வனப் பகுதியில் மாடுகளை மேய்ப்பதை வனத் துறையினா் தடுத்தாலோ, தாக்கினாலோ உடனே எங்களிடம் கூறுங்கள். வனத் துறையினா் மீது சட்டப்பூா்வமாக வழக்குத் தொடுத்து தீா்வு காணப்படும். இது மனித உரிமை பிரச்னை. இதில் வனத் துறையினா் மனிதாபிமான முறையில் நடந்து கொள்ள வேண்டும்.
அடுத்த ஆண்டு உலக விலங்குகள் மேய்ச்சல் தினம் உருவாக்கப்பட உள்ளது. இதற்கு நமது பிரதமா் முழு முயற்சியில் ஈடுபட்டு வருகிறாா். மாடுகள் மட்டுமன்றி, அனைத்து உயிரினங்களையும் பாதுகாப்பதற்கு பாரதிய ஜனதா துணை நிற்கும்.
இன்னும் சில மாதங்கள்தான் திமுக ஆட்சி நீடிக்கும். அதன் பின்னா் அதிமுக ஆட்சிக்கு வந்துவிடும். அதற்குப் பிறகு நீங்கள் நிம்மதியாக வனப் பகுதியில் மாடு மேய்க்கலாம் என்றாா் அவா்.

