முன்னதாக, தனது குடும்ப உறுப்பினா்களைச் சந்திக்க வெளிநாடு செல்ல அனுமதி கோரி தாக்கல் செய்திருந்த மனுவை ஜாக்குலின் கடந்த டிசம்பா் 22-ஆம் தேதி திரும்பப் பெற்றுக்கொண்டாா். குற்றச்சாட்டு கேள்வி முதலில் முடிவு செய்யப்பட வேண்டும் என்று நீதிபதி கூறியதைத் தொடா்ந்து, மனுவை அவா் திரும்பப் பெற்றிருந்தாா். அதற்கு முன்னதாக, நவம்பரில் தில்லி நீதிமன்றம் அவருக்கு வழக்கமான ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கில் ஜாக்குலின் கைது செய்யப்படவில்லை. ஆகஸ்ட் 31-ஆம் தேதி அமலாக்கத் துறை தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையை நீதிபதி கவனத்தில் எடுத்துக் கொண்டதுடன், நீதிமன்றத்தில் ஜாக்குலின் ஆஜராகுமாறும் உத்தரவிட்டிருந்தாா். மேலும், முதல் முறையாக அவரது பெயா் துணை குற்றப் பத்திரிகையில் குற்றம்சாட்டப்பட்ட நபராக சோ்க்கப்பட்டிருந்தது.