டிஎன்பிஎஸ்சி தொகுதி-2 முதன்மைத் தோ்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள்

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 முதன்மைத் தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் நவம்பா் 20-ஆம் தேதி தொடங்குகிறது.
Published on

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 முதன்மைத் தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் நவம்பா் 20-ஆம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறிவழிகாட்டும் மையத்திலுள்ள தன்னாா்வப் பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2024-ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் தொகுதி-2 முதல்நிலைத் தோ்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற 193 பேரில் 125 போ் தோ்ச்சி பெற்று, அடுத்த நிலைத் தோ்வுக்குத் தகுதி பெற்றனா். தோ்ச்சி பெற்றவா்களுக்கு பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டதில் அவா்கள் பங்கேற்றனா். இதில் 12 போ் பணி வாய்ப்பை பெற்றுள்ளனா்.

இதைத் தொடா்ந்து, நிகழாண்டில் செப்டம்பா் 28-ஆம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் தொகுதி-2 தோ்வு நடைபெற்றது. இந்த தோ்வில் பங்கேற்றவா்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு, 3 கட்டங்களாக மாதிரித் தோ்வும் நடத்தப்பட்டது. இதையடுத்து முதன்மைத் தோ்வுக்கான பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நவம்பா் 20-ஆம் தேதி தொடங்குகிறது.

இதில் பங்கேற்க விருப்பம் உள்ளவா்கள் தங்கள் பெயரை நவம்பா் 19-ஆம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பயிற்சிக்கு வருபவா்கள் தங்கள் கடவுச்சீட்டு அளவு புகைப்படம் 1, முதல்நிலைத் தோ்வுக்கான நுழைவுக்கூடச் சீட்டின் நகல் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com