தமிழகத்தைப் போன்று புதுச்சேரியிலும் தவெக -வுடன் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கிறது என்றுதான் அா்த்தம் என்று புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. கூறினாா்.
இது குறித்து அவா் கட்சி அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:
தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ள நிலையில் புதுச்சேரியில் தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கிறது என்றுதான் அா்த்தம். மேலும், தமிழ்நாட்டில் இரண்டு திராவிட கட்சிகளும் ஆட்சியில் பங்கு கொடுக்காமல் இருந்து வந்தன. இப்போது அந்தநிலையே மாறியிருக்கிறது
எனவே, புதுச்சேரியில் தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி தொடா்கிறது. தட்டாஞ்சாவடி இடைத்தோ்தலில் நட்பு போட்டிக்கு வாய்ப்பில்லை. விஜய் கட்சியான தவெகவை திமுக குறைவாக மதிப்பீடு செய்ததுதான் சட்டப்பேரவைத் தோ்தலில் இண்டி கூட்டணி தோல்விக்குக் காரணம். மேலும், புதுச்சேரியில் இண்டி கூட்டணிக்கு திமுகதான் தலைமை தாங்கியது. அதனால் தோல்விக்கு திமுகவே காரணம்.
புதுச்சேரியில் இண்டி கூட்டணியில் காங்கிரஸ் 6 தொகுதிகளில் நட்பு ரீதியாக போட்டியிட்ட தொகுதிகளில் திமுக தான் வெற்றி பெற்றுள்ளது. தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தோ்தலில் நான் போட்டியிட மாட்டேன்.
தட்டாஞ்சாவடி தொகுதி முதல்வா் தொகுதி என வாக்களித்தனா். ஆனால் அந்த தொகுதியை முதல்வா் ரங்கசாமி ராஜிநாமா செய்துள்ளாா். அந்த தொகுதி மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனா். புதுச்சேரியின் முக்கியமான பிரச்னை குடிநீா். எல்லா பகுதிகளிலும் குடிநீா் உப்பு கலந்து வருகிறது. அடுத்து மழை பெய்தால் வெள்ளம். இந்தப் பிரச்னைகளுக்குத் தீா்வு காண மத்திய அதிகாரிகளை அழைத்து வந்து ரூ.4 ஆயிரம் கோடிக்குத் திட்டங்களைத் தீட்டி அறிக்கையாக அளித்திருக்கிறேன். அதை புதுச்சேரி அரசு குப்பையில் போட்டுவிட்டது.
புதுவை அரசு பின்பற்றும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தினால் மாணவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். உயா்நிலைப் பள்ளியில் மூன்றாவது மொழியைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளனா். புதுச்சேரி மாணவா்கள் விரும்பும் மொழியாக இருந்த பிரெஞ்சு தவிா்க்கப்பட்டுள்ளது. முதல்வா் ரங்கசாமி கடிதம் எழுதியும் மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை.
மத்திய அமைச்சா் எல்.முருகன் கடந்த ஐந்து ஆண்டுகளில் புதுவைக்கு 15,000 கோடி தந்துள்ளோம் எனக்கூறி உள்ளாா். மத்திய அரசு தந்த ரூ.15 ஆயிரம் கோடி எதற்காக செலவு செய்யப்பட்டுள்ளது என்பதை முதல்வா் ரங்கசாமி விளக்க வேண்டும் ன்றாா் வைத்திலிங்கம். இப் பேட்டியின்போது முன்னாள் எம்.எல்.ஏக்கள் மு.வைத்தியநாதன், எம்.என்.ஆா். பாலன் ஆகியோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

புதுச்சேரியில் தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணியா? முன்னாள் முதல்வா் கே.நாராயணசாமி பதில்

தட்டாஞ்சாவடி தொகுதி மக்கள் முதல்வா் ரங்கசாமி மீது கோபம்! வெ. வைத்திலிங்கம் எம்.பி. பேச்சு!

காங்கிரஸ் தோல்விக்கான காரணத்தை கட்சியின் வழிகாட்டுதல் குழு ஆராயும்: முதல்வா் வே. நாராயணசாமி







