களைப்பில்லாமல் "களை' எடுக்க கருவிகள்!
நெல் சாகுபடியில் விதைப்பு, நாற்று நடுதல், அறுவடை செய்தல், கதிரடித்தல் போன்ற பல வேலைகளை விவசாயிகள் இயந்திரங்களைக் கொண்டு
நெல் சாகுபடியில் விதைப்பு, நாற்று நடுதல், அறுவடை செய்தல், கதிரடித்தல் போன்ற பல வேலைகளை விவசாயிகள் இயந்திரங்களைக் கொண்டு தற்போது எளிதாகச் செய்கின்றனர்.
பொதுவாக, களை எடுப்பது மட்டும் மனித சக்தியின் மூலமாகவே நடைபெறுகிறது. ஆனால் மனிதனால் களை எடுத்தல் என்பது மிகவும் கடினமான வேலையாகவும் அதிக நேரம் ஆகக் கூடியதாகவும் உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு களை எடுத்தலை எளிமைப்படுத்தவும், விரைவுப்படுத்தவும் பல்வேறு விதமான களை எடுக்கும் கருவிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. குறைந்த நேரத்தில் குறைந்த செலவில் களை கட்டுப்படுத்தப்பட்டு விளைச்சல் அதிகரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
களை எடுக்கும் கருவியின் மூலம் நிலத்தில் இருந்து களைகள் அனைத்தும் வெளியேற்றப்படுவதால் அவைகள் நிலத்தில் இருந்து எடுத்த உரங்கள், ஊட்டச் சத்துகள் அனைத்தும் வெளியேற்றப்படுகின்றன. நெற்பயிரின் வேர்ப் பக்கத்திலுள்ள மண், களை எடுத்த பின்பும் இறுக்கமாகவே இருக்கும். மேலும் களை எடுப்பதும் மண்ணின் தன்மையைப் பொறுத்து கடினமாகிறது.
களைகளை கருவிகளைக் கொண்டு எடுப்பதால் பல்வேறு பயன்கள் உள்ளன. அதிக தூர்கள், குறைந்த வேலை ஆள்கள், களைகளை அவைகளின் இளம் பருவத்திலேயே மண்ணிலேயே அமுக்கி விடுவதால் உள்கொள்ளும் சத்துக்களின் அளவு குறைந்து பயிருக்கு சத்துக்கள் அதிக அளவில் கிடைக்க வாய்ப்பு, களைகள் கட்டுப்படுத்தப்பட்டு அவை வயலுக்கே இயற்கை உரமாகவும் மாற்றப்படுதல், உருளும் களைக்கருவி மண்ணை பிரட்டி விடுவதால் காற்றோட்டம் கிடைத்தல், மண்ணிலுள்ள நுண்ணுயிரிகள் ஊக்குவிக்கப்படுதல், மேலுரம் இடும் சமயத்தில் உரமிட்டபின் களை எடுக்கும் கருவியைப் பயன்படுத்த வாய்ப்புள்ளதால் உரங்கள் மண்ணில் கலந்து உபயோகத் திறன் அதிகரித்தல் ஆகிய பயன்கள் உள்ளன.
களை எடுக்கும் கருவிகளில் பல வகை இருக்கின்றன.
1. ஒரு வரிசை நட்சத்திர வடிவ உருளும் களை எடுக்கும் கருவி, 2. இரண்டு வரிசை உருளும் களை எடுக்கும் கருவி, 3. சாய்வு உருளை களை எடுக்கும் கருவி, 4. மேம்படுத்தப்பட்ட சாய்வு வடிவ உருளை களை எடுக்கும் கருவி, 5. மின் கலத்தினால் இயங்கும் சிறிய களை எடுக்கும் கருவி ஆகியன உள்ளன.
நட்சத்திர வடிவ உருளும் களை எடுக்கும் கருவி: இந்தக் களை எடுக்கும் கருவியானது களை எடுக்கும் உருளை, கைப்பிடி, நட்சத்திர வடிவ உருளை, மிதவை, உருளையை தாங்கும் சட்டம் ஆகியவற்றை கொண்டது. மிதவை களை எடுக்கும் உருளைக்கு முன்னால் பொருத்தப்பட்டு களை எடுத்தலை விரைவுபடுத்துகிறது. களை எடுக்கும் உருளையும் மிதவையும் பிரதான சட்டத்துடன் பொருத்தப்பட்டு முதன்மைக் கைப்பிடியுடன் இணைக்கப்பட்டுள்ளதால் களை எடுத்தல் எளிமையாகிறது.
சாய்வு உருளை களை எடுக்கும் கருவி: இந்தக் கருவியை வரிசையில் நடவு செய்யப்பட்ட வயல்களில் மட்டுமே பயன்படுத்த முடியும் இந்தக் கருவியை முன்னும் பின்னுமாக அசைத்து இயக்கும்போது உருளைப் பகுதியில் உள்வளைந்த கத்தி போன்ற அமைப்பு களையை வேருடன் பிடுங்கிப் போடுகிறது. கருவியை இயக்கி செல்பவர் அவற்றின் மீது நடந்து செல்லும்போது களைகள் மண்ணுக்குள் மிதிக்கப்பட்டு மக்கி அழுகுவதற்கு ஏதுவாகிறது.
மின் கலத்தினால் ஆன களை எடுக்கும் கருவி: களையெடுத்தலை துரிதப்படுத்தும் நோக்கத்துடனும் மின் கலத்தினால் இயங்கும் களை எடுக்கும் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவியைக் கொண்டு களை எடுப்பவருக்கு பெரிதாக களைப்பு ஏற்படுவதில்லை. இக்கருவியில் களை எடுக்கும் உருளை சுழன்று களைகளை வேரோடு பிடுங்கி எடுக்கிறது. மேலும் களைகள் மண்ணோடு சேர்க்கப்படுவதால் அவை நன்கு மக்கி உரமாகின்றன. இது மண்ணின் காற்றோட்டத்தையும் நுண்ணுயிரிகளின் செயல்பாட்டையும் அதிகப்படுத்தி அதிக மகசூலுக்கு வழிவகுக்கிறது.
இந்தக் கருவிகள் குறித்த மேலும் விவரம் தேவைப்படும் விவசாயிகள் அவர்களது பகுதிகளில் உள்ள வேளாண் அலுவலகங்களை அணுகலாம் என தமிழக அரசு வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.
"களை எடுத்தலை எளிமைப்படுத்தவும், விரைவுப்படுத்தவும் பல்வேறு விதமான களை எடுக்கும்
கருவிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. குறைந்த நேரத்தில் குறைந்த செலவில் களை கட்டுப்படுத்தப்பட்டு விளைச்சல் அதிகரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது."