விவசாயம்

வறட்சி: 125 ஏக்கரில் கரும்பு பயிர்கள் காய்ந்தன: பயிர் காப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

தினமணி

காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் வட்டத்திலுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடும் வறட்சி காரணமாக கரும்புப் பயிர்கள் காய்ந்து விட்டதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். எனவே பயிர் காப்பீட்டுத் தொகையை அரசு வழங்கக் கோரி மாவட்ட நிர்வாகத்துக்கு மனு அளித்துள்ளனர்.
வரலாறு காணாத கோடை வெப்பத்தின் காரணமாக இந்த ஆண்டு கடும் வறட்சி நிலவுகிறது. பெரும்பாலான அணைகள், ஏரி, குளங்கள் போன்ற நீர் நிலைகள் வறண்டு போனதால், குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
செய்யூர் வட்டத்துக்கு உள்பட்ட மேல்பட்டு, செங்காட்டூர், மடையம்பாக்கம், திருவாத்தூர், பவுஞ்சூர், கீழச்சேரி உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் பணப் பயிரான கரும்பு பயிரிட்டுள்ளனர்.
இந்த ஆண்டு மழையின்றி, கோடை வெப்பம் வழக்கத்தைவிட அதிகமாக உள்ளதால் வறட்சியால் பாசன ஏரி, கிணறுகள் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு கட்டாந்தரையாகக் காட்சியளிக்கின்றன. இதனால் கரும்புகள் காய்ந்து கருகி வருகின்றன.
ஒரு ஏக்கர் கரும்பு பயிரிட ரூ.40 ஆயிரம் வரை செலவாகிறது. பல விவசாயிகள் கடன் வாங்கி பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் நீரின்றி கரும்பு பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் நஷ்டமடைந்து வேதனைக்குள்ளாகித் தவிக்கின்றனர்.
கீழ்பட்டு, மேல்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் தற்சமயம் வறட்சியால் சுமார் 125 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள கரும்புகள் காய்ந்து விட்டன. வறட்சி, வெள்ளப் பெருக்கு போன்ற இயற்கை இடர்பாடுகளால் விவசாயிகள் பாதிக்கப்படும்போது பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் ஒரு ஏக்கருக்கு சுமார் ரூ. 45,000 நஷ்டஈடாக அரசால் வழங்கப்படுவது வழக்கம்.
ஆனால் கடந்த 2015-இல் மழை வெள்ளத்தாலும், 2016- 2017இல் கோடை வறட்சி யாலும் பாதிக்கப்பட்ட பெரும்பாலான கரும்பு விவசாயிகளுக்கு இதுவரை பயிர் காப்பீட்டுத் தொகையை தமிழக அரசு வழங்கவில்லையென ஏற்கெனவே குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனைச் சுட்டிக்காட்டி மாவட்ட ஆட்சியர் பொன்னையாவுக்கு கரும்பு விவசாயிகள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கத் துணைத் தலைவர் மேல்பட்டு வெங்கடேசன் கூறியதாவது:
பெரும்பாலான விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்துள்ளனர். இருப்பினும், நஷ்டம் ஏற்பட்டால் காப்பீடு மூலம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுவதில்லை. செய்யூர் வட்டம் வறட்சி பாதிக்கப்பட்ட
பகுதியாகும்.
எனவே, மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு, பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீடு மூலம் இழப்பீட்டுத் தொகையை பெற்றுத் தர வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

மனைவியைக் கொலை செய்து கணவா் தற்கொலை முயற்சி

அகா்வால்ஸ் மருத்துவருக்கு சா்வதேச அங்கீகாரம்!

மேற்கு வங்கம்: குண்டுவெடிப்பில் பள்ளி மாணவா் உயிரிழப்பு

வட தமிழகத்தில் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT