முகப்பு
பெங்களூரு

சொத்துக் குவிப்பு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகத்தின் வழக்குச் செலவு ரூ.2.78 கோடி! தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விளக்கம்

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்பட நால்வர் மீது தொடுக்கப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்காக உச்ச நீதிமன்றத்தில் மட்டும் கர்நாடக அரசு ரூ.2.78 கோடி செலவழித்துள்ளதாக

Updated On : 4 ஏப்ரல், 2017 at 10:34 AM
பகிர்:

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்பட நால்வர் மீது தொடுக்கப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்காக உச்ச நீதிமன்றத்தில் மட்டும் கர்நாடக அரசு ரூ.2.78 கோடி செலவழித்துள்ளதாக தகவலறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்பட நால்வரும் குற்றமற்றவர் என தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மனுதாக்கல் செய்தது. இந்த நிலையில், சொத்துக் குவிப்பு வழக்குத் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் வாதிட்ட வழக்குரைஞர்களின் பெயர் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியம் குறித்து தகவலறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் சமூக ஆர்வலர் டி.நரசிம்மமூர்த்தி தகவல் கோரியிருந்தார்.

Advertisement

இதற்கு விளக்கமளித்த மாநில அரசு தலைமை வழக்குரைஞர் அலுவலகத்தின் நிர்வாக அதிகாரி குருசித்தையா, உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞர்கள் துஷ்யந்த்தாவே, பி.வி.ஆச்சார்யா, வழக்குரைஞர்கள் ஜோசப் அரிஸ்டாட்டல், சந்தேஷ்செüட்டா, அரசு தலைமை வழக்குரைஞர் மதுசூதன்நாயக் ஆகியோருக்கு ஊதியமாக ரூ.2.78,70,888 வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

துஷ்யந்த்தாவே 6 முறை ஆஜராகி வாதாடியதற்கு ரூ.95,16,500, பி.வி.ஆச்சார்யா 5 முறை ஆஜராகி வாதாடியதற்கு ரூ.1,06,86,018, ஜோசப் அரிஸ்டாட்டில் 3 முறை ஆஜராகி வாதாடியதற்காக ரூ.32,01,070, சந்தேஷ் செüட்டா 6 முறை ஆஜராகி வாதாடியதற்கு ரூ.42,23,643, மதுசூதன்நாயக் 4 முறை ஆஜராகி வாதாடியதற்காக ரூ,2,43,657 வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் டி.நரசிம்மமூர்த்தி கூறியது: மறைந்ததமிழக ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தமிழகத்தில் இருந்து கர்நாடகத்திற்கு மாற்றப்பட்டு 2004-ஆம் ஆண்டு முதல் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்துவந்தது.

இந்த வழக்கின் தீர்ப்பு 2014, செப்.27-ஆம் தேதி வழங்கப்பட்டது. இந்தவழக்கின் செலவுக்காக கர்நாடக அரசு ரூ.3,93,05,915 ஒதுக்கப்பட்டிருந்தது. 2014, மார்ச் 31-ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் தொலைபேசி கட்டணம், மொழிப்பெயர்ப்பு, எரிபொருள் கட்டணம், நூலகம், மரசாமான்கள், போக்குவரத்து, பயணப்படி, பணியிடமாற்றப்படி, இதர படிகள், நீதிபதிகள் ஊதியம், பஞ்சப்படி நிலுவைத்தொகை, ஆடம்பரப்படி, நீதிமன்ற ஒப்பந்த ஊழியர் ஊதியம், இதர செலவினங்கள் ஆகிய கணக்கு தலைப்புகளின்கீழ் ரூ.2,86,99,616 செலவழித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ஆனால், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடந்த விசாரணைக்காக செலவழிக்கப்பட்டது குறித்து தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கேட்டு 2015-ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு இன்னும் பதிலளிக்கவில்லை.

மக்கள் பணத்தை அக்கறையோடு செலவழிக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாகும் என்றார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.