அனைவருக்கும் மொழிப் பற்று அவசியம்: முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி
நாட்டுப் பற்றை போலவே அனைவருக்கும் மொழியின் மீதும் பற்று இருப்பது அவசியம் என முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி தெரிவித்தார்.
நாட்டுப் பற்றை போலவே அனைவருக்கும் மொழியின் மீதும் பற்று இருப்பது அவசியம் என முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி தெரிவித்தார்.
பெங்களூரில் செவ்வாய்க்கிழமை சொந்த குரலில் பாடிய மாநிலப்பண் குறுந்தகடை வெளியிட்டு அவர் பேசியது:
சர்வதேச அளவில் சிறந்து மொழிகளில் ஒன்றாக கன்னடம் விளங்குகிறது. எனக்கு சிறந்த குரல்வளம் இல்லை என்றாலும், மொழியின் மீது உள்ள ஆர்வத்தில் மாநிலப் பண்ணை எனது குரலில் பாடி பதிவு செய்துள்ளேன்.
எனக்கு இளம் வயதிலிருந்தே ராமாயணம், மகாபாரதத்தை மனப்பாடம் செய்து ஒப்பித்தல் போட்டியில் மாநில அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளேன். அந்த தாக்கத்தில் தற்போது மாநிலப் பண்ணை பதிவு செய்து வெளியிட்டுள்ளேன். நாட்டுப்பற்றை போலவே மாநில, மொழிப் பற்று அனைவருக்கும் இருக்க வேண்டும்.
மண்ணையும், மொழியையும் நான் மனதார நேசிக்கிறேன். அதேபோல மாநிலத்தில் வசிக்கும் அனைவரும் மாநில மொழியான கன்னடத்தை நேசிக்க வேண்டும். இளைஞர்களிடையே உத்வேகத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் மாநிலப்பண் குறுந்தகடை வெளியிட்டுள்ளோம்.
கன்னட மொழி வளர்ச்சிக்கான எனது பங்களிப்பை தொடர்ந்து வழங்குவேன். அரசியலும், திரைத் துறையும் எனது 2 கண்கள் போன்றது. எனவே இரண்டிலும் தொடர்ந்து நான் பயணிப்பேன். மாநிலத்தையும், மொழியையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதே எனது நோக்கம் என்றார். நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் கெளசிக் ஹர்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.