மொழி சமத்துவத்துக்கு தனிச் சட்டம் தேவை
தேசிய அளவில் மொழி சமத்துவம் மற்றும் உரிமைகளை நிலைநாட்ட மத்திய அரசு தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும் என்று மொழி சமத்துவம் மற்றும் உரிமைகள் பிரசார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
தேசிய அளவில் மொழி சமத்துவம் மற்றும் உரிமைகளை நிலைநாட்ட மத்திய அரசு தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும் என்று மொழி சமத்துவம் மற்றும் உரிமைகள் பிரசார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை மொழி சமத்துவம் மற்றும் உரிமைகள் பிரசார அமைப்புத் தலைவர் ஜோகாசிங், துணைத் தலைவர்கள் ஆனந்த், கர்கா சாட்டர்ஜி, செயலாளர் செந்தில்நாதன் ஆகியோர், செய்தியாளர்களிடம் கூறியது:
மொழி சமத்துவம் மற்றும் உரிமைகள் பிரசார அமைப்பு சார்பில் பெங்களூரில் கடந்த இரண்டு நாள்களாக நடந்த மொழி சமத்துவம் மற்றும் உரிமைகள் கருத்தரங்கில் ஒடியா, அங்கிகா, பஞ்சரா, பியாரி, பகேலி, தமிழ், குஜராத்தி, கொங்கனி, போஜ்புரி, மலையாளம், அஸ்சாமி, தெலுங்கு, கொடவா, படுகா, கொசலி, துளு, செளராஷ்டிரா, பூர்வாஞ்சல், வஜ்ஜிகா, மைதிலி, பஞ்சாபி, பாங்ளா, கன்னடம் ஆகிய மொழிகளின் சமத்துவம் மற்றும் உரிமைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மொழி செயல்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர். இதன் நிறைவாக 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நாடுமுழுவதும் அரசியலின் மையப்புள்ளியாக தாய்மொழி உரிமைகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் மாநிலமொழிகளின் உரிமைகளை காக்கும் பல்வேறு கொள்கைமுடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் ஆந்திரம், தெலங்கானா, கேரளம், கர்நாடகம், மேற்குவங்கம், குஜராத் மாநிலங்கள் சிபிஎஸ்இ உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் கட்டாயமாக்கி உத்தரவிட்டுள்ளன.
வெளியூர்களில் இருந்து வந்திருக்கும் மக்கள் கட்டாயம் மலையாளம் கற்க வேண்டுமென்ற பிரசாரத்தை கேரளம் முன்னெடுத்துள்ளது. அரசியல், குடிமக்கள், பண்பாட்டுத்தளங்களில் மொழி உரிமைகள் விவாதிக்கப்பட்டுவருகின்றன.
பிறமொழி திணிப்பில் இருந்து மாநிலமொழிகளை காக்கும் முன்னெடுப்புகளாகவே இவை அமைந்துள்ளன. இந்தியா என்பது பன்மொழி கூட்டாட்சி தத்துவத்தை ஏற்றுக்கொண்டால் மட்டுமே வேற்றுமையில் ஒற்றுமை என்பதை திறன்பட செயல்படுத்த இயலும்.
இந்தநோக்கத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவை வருமாறு: கோரிக்கை முன்வைக்கப்படும் அனைத்துமொழிகளையும் 8-ஆவது அட்டவணையில் சேர்க்க வேண்டும். 8-ஆவது அட்டவணையில் உள்ள அனைத்துமொழிகளையும் சம அளவில் தேசிய அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும்.
உள்ளூர் மொழிகளைஆரம்பப்பள்ளிகளின் பயிற்றுமொழியாக்க வேண்டும். கல்வியின் அனைத்து படிநிலைகளிலும் உள்ளூர்மொழிகளை கட்டாயப்பாடமாக்க வேண்டும். மத்திய அரசு கல்வி நிலையங்களில் சேர்க்கை பெற நடத்தப்படும் அனைத்து நுழைவுத்தேர்வுகள், நேர்காணல்களில் 8-ஆவது அட்டவணை மொழிகளில் நடத்தப்பட வேண்டும்.
அனைத்துமொழிகளையும் சமமாக ஊக்குவித்து, வளர்ச்சி நிதி ஒதுக்க வேண்டும். 8-ஆவது அட்டவணையில் இல்லாத மொழிகளை வளர்க்க ஊக்கம் அளிக்க் அளிக்கவேண்டும். மாநில அளவில் அனைத்து விவகாரங்களும் உள்ளூர்மொழியில் நடத்தப்படவேண்டும். மத்திய, மாநில அரசுகளின தகவல்கள் உள்ளூர்மொழிகளில் கிடைக்க ஆவனம் செய்ய வேண்டும்.
உள்ளூர்மொழிகளை உயர் நீதிமன்றங்களின் ஆட்சி மொழியாக்கவேண்டும். பன்னாட்டு மொழித்தரக் கொள்கையின்படி அறிவியல் ரீதியாக ஒருமொழியை மத்திய அரசு வரையறுக்கவேண்டும். எந்த எழுத்துருவில்(லிபி) எழுதுவது என்பதை மொழிசார்ந்தோர் மட்டுமே தீர்மானிக்க வேண்டும்.
உள்ளூர் மொழிகளின் நலனை பாதுகாக்க அனைத்து மாநில அரசுகளும் மொழி ஆணையங்களை உருவாக்க வேண்டும். அழிவை நோக்கியுள்ள மொழிகளை காக்க மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்க வேண்டும். மத்திய அரசு மற்றும் அதன் நிறுவனங்கள், கல்வியில் அனைத்து மொழிகளையும் சமமாக ஊக்குவிக்கவேண்டும். இவை அனைத்தையும் செயல்படுத்தவேண்டுமென்றால், இந்திய நாடாளுமன்றத்தில் மொழி சமத்துவம் மற்றும் உரிமைகள் சட்டத்தை கொண்டுவரவேண்டும் என்றனர்.