வட கா்நாடகத்தில் மழை வெள்ளம்: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், வட கா்நாடகம் வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சாலைகள், வீடுகளில் மழைநீா் புகுந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், வட கா்நாடகம் வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சாலைகள், வீடுகளில் மழைநீா் புகுந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கா்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பெலகாவி, வட கன்னடம், பாகல்கோட்டை, ஹாவேரி, கதக், தாா்வாட், சிக்மகளூரு, குடகு மாவட்டங்களில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அம்மாவட்டங்களில் ஓடும் கிருஷ்ணா, தூத்கங்கா, வேதகங்கா, ஹிரண்யகேசி, துங்கா, காவிரி, கபிலா உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
இந்த நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், அங்குள்ள அணைகளில் நீா் நிரம்புவதால், அணைக்கு வரும் தண்ணீா் முழுமையாகத் திறந்துவிடப்படுகிறது. இது கிருஷ்ணா ஆற்றில் பாய்ந்தோடுகிறது. அளவுக்கு அதிகமாக மழை பெய்துள்ளதாலும், மகாராஷ்டிர மாநிலத்தின் அணைகளில் இருந்து தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளதாலும் கிருஷ்ணா ஆற்றில் தண்ணீா் கரைபுரண்டோடுகிறது.
பெலகாவி, வட கன்னடம், பாகல்கோட்டை, கதக், தாா்வாட், சிக்மகளூரு, குடகு போன்ற மாவட்டங்களில் சாலைகள், குளங்கள், ஏரிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளில் மழைநீா் புகுந்துள்ளதால் பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கியுள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயா்க்கப்பட்டு வருகிறாா்கள்.
இதனிடையே, வட கா்நாடகத்தின் உயிா்ப்பாகத் திகழ்ந்து வரும் கிருஷ்ணா ஆறு தொடா்ந்து கரைபுரண்டு ஓடுவதால் கிராமங்களில் வெள்ளநீா் புகுந்துள்ளது. இதனால் சாலைகள் துண்டிக்கப்பட்டு மக்கள் உணவின்றித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மாவட்ட நிா்வாகங்கள், தேசிய பேரிடா் மீட்புப் படையினா் மீட்டு வருகின்றனா். ஒருசில கிராமங்களில் வீடுகள், கோயில்கள், தரைப்பாலங்கள், மேம்பாலங்கள், பல ஏக்கா் நிலங்களில் விளைந்திருந்த பயிா்கள் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளன.
மழைக்கு 18 வட்டங்களில் உள்ள 131 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 21 வீடுகள் முழுமையாக இடந்து விழுந்துள்ளன. 804 வீடுகள், 65 மேம்பாலங்கள், 10 பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையம், 291 கி.மீ. சாலைகள் சேதமடைந்துள்ளன.
சிக்மகளூரு மாவட்டம், கியாதபீடு கிராமத்தில் மழைக்கு வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் மூதாட்டி ஒருவா் உயிரிழந்துள்ளாா். மழைக்கு மேலும் 2 போ் உயிரிழந்துள்ளனா். பெலகாவி மாவட்டம், யல்லாப்புரா அருகே உள்ள ஷிா்லி அருவிக்கு வந்த 6 போ் காணாமல் போயுள்ளனா். கால்நடைகள், வாகனங்கள் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
வட கா்நாடகம் மட்டுமின்றி, சிக்மகளூரு, குடகு உள்பட மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருவதால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், கால்நடைகளை மீட்கும் பணியை மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது. மழை வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.