முகப்பு
பெங்களூரு

தேர்தல் நடத்தை விதிமுறைகள்: அரசின் முன்மொழிவுகளுக்கு அனுமதி கிடைக்குமா?

லிங்காயத்து தனி மதம், மாநில தனிக் கொடிக்கு அனுமதி கோரி மத்திய அரசுக்கு கர்நாடகம் அனுப்பிய முன்மொழிவுகள் தேர்தல் நடத்தை

Updated On : 29 மார்ச், 2018 at 6:48 AM
பகிர்:

லிங்காயத்து தனி மதம், மாநில தனிக் கொடிக்கு அனுமதி கோரி மத்திய அரசுக்கு கர்நாடகம் அனுப்பிய முன்மொழிவுகள் தேர்தல் நடத்தை விதிமுறைகளால் செயல்வடிவம் பெறுமா? என மக்களிடம் கேள்வி எழுந்துள்ளது.
லிங்காயத்து தனி மத அனுமதி என்பது பாஜக வாக்கு வங்கியை பிரிக்கும் காங்கிரஸின் வியூகம் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். கடந்த 30 ஆண்டுகளாக லிங்காயத்து சமுதாய மக்கள் பாஜகவின் வாக்கு வங்கியாக உள்ளனர்.
எனவே, பாஜகவின் வாக்கு வங்கியை உடைத்து, சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றியை உறுதி செய்யவதே காங்கிரசின் வியூகம். லிங்காயத்து தனிமத அங்கீகாரம் அளித்து, கர்நாடக அரசு அரசாணை வெளியிட்டிருந்தாலும், மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தால்தான் அச்சமுதாயத்துக்கு மதச்சிறுபான்மையினருக்கான சலுகைகள் கிடைக்கும். 
லிங்காயத்து வரலாறு
12-ஆம் நூற்றாண்டில் தோன்றிய சமூக சிந்தனையாளர் பசவண்ணர், சிவபெருமானை உருவ வடிவமாக கோயிலில் வணங்காமல், லிங்க வடிவத்தில் வணங்கும் நடைமுறையை உருவாக்கினார். அதை பின்பற்றுவோர் தங்களது கழுத்தில் லிங்கம் தரிக்க வலியுறுத்தப்பட்டனர். அவர்கள் "லிங்காயத்துகள்' என்று அடையாளப்படுத்தினார். 
சனாதன சடங்குகள், சம்பிரதாயங்கள் இல்லாமல் சிவபெருமானை லிங்க வடிவில் வணங்கும் மக்களின் மதத்துக்கு 'லிங்காயத்து' மார்க்கம் என்று நெறிப்படுத்தினார். கடந்த 800 ஆண்டுகளில் இதில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
வீரசைவர்களும், லிங்காயத்துகளும் இணைந்து செயல்படும் சூழ்நிலை உருவானது. இதனால் இச்சமூகத்தை வீரசைவ லிங்காயத்து என்றே மக்கள் அழைத்து வருகிறார்கள். 
1871-இல் மக்கள்தொகை கணக்கெடுப்பிலும் தங்களை லிங்காயத்து மதமாக மக்கள் அடையாளப்படுத்திக் கொண்டுள்ளனர். இந்நிலையில், பசவண்ணரின் தத்துவங்களைப் பின்பற்றும் லிங்காயத்துகளை தனிமதமாக அங்கீகரிக்கக் கோரி அகில இந்திய லிங்காயத்து அமைப்பினர் கர்நாடகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கோரிக்கை நீண்டகாலமாக எழுப்பப்பட்டாலும் கடந்த 2 ஆண்டுகளாக போராட்டம் தீவிரமடைந்தது.  இதையடுத்து சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, லிங்காயத்து தனி மதக் கோரிக்கை குறித்து ஆராய்வதற்கு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் வழியே நீதிபதி நாகமோகன் தாஸ் தலைமையில் அறிஞர் குழுவை அமைத்தது. இக்குழு அளித்த அறிக்கையின்படி, லிங்காயத்து தனிமதக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட கர்நாடக அரசு, மதச்சிறுபான்மையினராக அங்கீகரித்து அரசாணை வெளியிட்டது. மேலும், இந்த கோரிக்கைகளின் முன்மொழிவை மத்திய அரசின் ஒப்புதலுக்கு கர்நாடக அரசு அனுப்பிவைத்துள்ளது. 
பாஜகவின் வாக்கு வங்கியாகத் திகழும் லிங்காயத்து சமுதாயத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் தனது முயற்சியில் காங்கிரஸ் வென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. 
மத்திய அரசு தயக்கம்
இந்த நிலையில், சட்டப்பேரவைத் தேர்தல் மே 12-ஆம் தேதி நடத்தப்படும் என்றுதேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. மேலும், தேர்தல் சமயத்தில் மக்கள் மனதில் மாறுபட்ட விளைவுகளை உருவாக்கும் எவ்வித முடிவையும் மத்திய அரசு எடுக்க முடியாத நிலையில் உள்ளது. 
இதேபோல, கர்நாடக மாநிலத்துக்கு தனிக்கொடியை வடிவமைத்துள்ள முதல்வர் சித்தராமையா அரசு, அதற்கு ஒப்புதல் அளிக்கக் கோரி மத்திய அரசுக்கு முன்மொழிவை அனுப்பியுள்ளது. தேர்தல் நடத்தைவிதிகள் அமலுக்கு வந்துள்ளதால், இந்த முன்மொழிவு குறித்தும் மத்திய அரசு முடிவு எடுக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 
தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டதால் காங்கிரஸ் அரசு முன்மொழிந்த லிங்காயத்து தனிமதம், மாநில தனிக் கொடி விவகாரங்களை மத்திய அரசு கிடப்பில் போட்டுள்ளது. எனினும், இந்தவிவகாரங்களில் மத்திய அரசு துரிதகதியில் செயல்படாதது, தேர்தலில் எதிர்வினைகளை ஏற்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.