மின் வெட்டுக்கு அவசியமில்லை: அமைச்சர் சிவக்குமார்
மாநிலத்தில் தேவையான அளவுக்கு மின் உற்பத்தி செய்யப்படுவதால், மின் வெட்டுக்கு அவசியமில்லை என்றார் அந்த மாநில மின் துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார்.
மாநிலத்தில் தேவையான அளவுக்கு மின் உற்பத்தி செய்யப்படுவதால், மின் வெட்டுக்கு அவசியமில்லை என்றார் அந்த மாநில மின் துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார்.
இதுகுறித்து புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: மாநிலத்தின் மின் தேவை 10,777 மெகா வாட்டாக உள்ளது. தேவைக்கு ஏற்ப மின் உற்பத்தி உள்ளது. அண்மைக் காலமாக மின் உற்பத்தியில் மாநிலம் தன்னிறைவு அடைந்துள்ளது. எனவே, பகலிலே விவசாயிகளின் பம்புசெட்டுகளுக்கு மின்சாரம் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
2013-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சிப் பொறுப்பேற்ற போது மின் உற்பத்தி 14,030 மெகா வாட்டாக இருந்தது. கடந்த 5 ஆண்டுகளில் 24,616 மெகா வாட்டாக மின் உற்பத்தியை அதிகரித்துள்ளோம். மின் விநியோகத்தில் இழப்பான மின்சாரத்தை 15.3 சதவீதத்திலிருந்து 13.34 சதவீதமாக குறைத்துள்ளோம். மின் துறை அமைச்சர் என்ற வகையில் பொதுமக்களுக்கு தேவையான வளர்ச்சிப் பணிகளைச் செய்துள்ளேன். மாநில அளவில் புதிதாக 149 மின் உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன. 4,004 கி.மீ தொலைவுக்கு சர்க்கியூட் லைன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 35,903 கி.மீட்டர் தொலைவுக்கு சர்க்கியூட் லைன் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் 123 வட்டங்களில் 20 கிலோவாட் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
மாநில அளவில் மின் துறையில் 21 ஆயிரம் ஊழியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். விதிகளை மீறி 5 லட்சம் பம்ப்செட்டுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டிருந்தது. இதனை கண்டறிந்து, 4 லட்சம் பம்ப்செட்டுகளை விதிகளுக்குள்படுத்தப்பட்டு, இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார்.