முகப்பு
பெங்களூரு

கர்நாடக மக்களின் விருப்பப்படி ஆட்சி நடத்துவேன்: மஜத மாநிலத் தலைவர் குமாரசாமி

கர்நாடக மக்களின் விருப்பப்படி ஆட்சி நடத்துவேன் என மஜத மாநிலத் தலைவர் எச்.டி.குமாரசாமி தெரிவித்தார்.

Updated On : 22 மே, 2018 at 4:21 AM
பகிர்:

கர்நாடக மக்களின் விருப்பப்படி ஆட்சி நடத்துவேன் என மஜத மாநிலத் தலைவர் எச்.டி.குமாரசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூரில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: கர்நாடகத்தில் தற்போது உருவாகியிருக்கும் அரசியல் சூழ்நிலை எனக்கு மகிழ்ச்சி தரவில்லை. கர்நாடக மக்களுக்கு நான் ஏராளமான வாக்குறுதிகளை கொடுத்திருந்தேன். மஜதவுக்கு அறுதிப்பெரும்பான்மை கிடைத்திருந்து, அப்போது நான் முதல்வராகப் பதவியேற்றிருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். ஆனால், மக்கள் ஏனோ என்னிடமும், என் கட்சியிடமும் (மஜத) நம்பிக்கை வைக்கவில்லை. என்னை சந்தர்ப்பவாதி என்று மக்கள் கருதுகிறார்கள். நான் சந்தர்ப்பவாதி அல்ல. மக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் ஆட்சி நடத்த வேண்டியுள்ளது. எனவே, கர்நாடக மக்களின் விருப்பப்படி ஆட்சி நடத்துவேன் என்ற நம்பிக்கை உள்ளது.
நான் முதல்வராக மாட்டேன் என்று தேர்தல் சமயத்தில் முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறிவந்தார். சித்தராமையா மேல் நான் மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளேன். தேர்தல் சமயத்தில் பேசியது தற்போது முக்கியமானதல்ல. தற்போதைய சூழ்நிலையில் கர்நாடக மக்களுக்கு ஆற்றவேண்டிய கடமை குறித்தே நான் கவனம் கொண்டிருக்கிறேன்.
தற்போது எனக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு, ஒரு தேர்வைப் போன்றதாகும். மக்களும், கடவுளும் பாராட்டும் வகையில் ஆட்சி நடத்துவேன் என்ற உறுதிமொழியை மக்களுக்கு வழங்க விரும்புகிறேன். மக்கள் மீது எனக்கிருக்கும் அக்கறையை எனது ஆட்சிமூலம் உறுதிபடுத்துவேன். மிகவும் மோசமான அரசியல் சூழ்நிலையின்போது நான் முதல்வராக இருக்கிறேன்.
2006-ஆம் ஆண்டில் நிலவிய நிலை வேறு. அப்போது நடந்த தவறுகளை மீண்டும் செய்யாமல் இருக்க முன்னெச்சரிக்கையோடு செயல்படுவேன். காங்கிரஸ் மற்றும் மஜதவுடன் இணக்கமான சூழல் நிலவுகிறது. சித்தராமையா 5 ஆண்டு காலம் முழுமையாக ஆட்சி செய்திருக்கிறார். அவரது அனுபவம் எங்களுக்கு தேவைப்படுகிறது.
விவசாயிகளின் பயிர்க் கடனைத் தள்ளுபடி செய்வதில் உறுதியாக இருக்கிறேன். ஆனாலும் நிதிநிலைமையை அனுசரித்து முடிவெடுக்கப்படும். தற்போது நடக்கவிருப்பது கூட்டணி ஆட்சி என்பதை மனதில் கொள்ள வேண்டும். பயிர்க் கடனைத் தள்ளுபடி செய்வதால் அரசுக்கு ஏற்படும் நிதிச்சுமை குறித்து ஆராய வேண்டியுள்ளது. தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியும் மக்களுக்கு ஒருசில வாக்குறுதிகளைக் கொடுத்துள்ளது. அது குறித்தும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்றார் அவர்.
5 ஆண்டுகாலம் நிலையான ஆட்சியை வழங்குவேன்'
ஹாசன், மே 21: 5 ஆண்டுகாலம் நிலையான ஆட்சியை வழங்குவேன். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம் என மஜத மாநிலத் தலைவர் குமாரசாமி தெரிவித்தார்.
தனது சொந்த ஊரான ஹாசன் மாவட்டத்தில் உள்ள குலதெய்வம் உள்ளிட்ட முக்கியக் கோயில்களில் சிறப்பு பூஜை செய்து வழிபடுவதற்காக ஹாசனுக்கு திங்கள்கிழமை வருகை தந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது: கடவுளின் அனுக்கிரகம், தாய்-தந்தையரின் ஆசீர்வாதத்தால் முதல்வராக மீண்டும் மக்களுக்கு சேவையாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இம்முறை முதல்வராக பணியாற்றுவது சவால் நிறைந்ததாக இருக்குமென்று கூறப்படுகிறது. என்னை பொருத்தவரை இதில் எவ்வித சங்கடமும், சவால்களும் இல்லை என்ற நம்பிக்கை உள்ளது. அரசியல் சூழ்நிலை எதுவாக இருந்தாலும், 5 ஆண்டுகாலம் நிலையான ஆட்சியை வழங்குவதில் எவ்வித தொந்தரவும் இருக்காது. இதை சாதிப்பதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் தேவை என்பதை மறுப்பதற்கில்லை. முதல்வர் பதவி முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இரு கட்சிகளின் கருத்துகளையும் அலசி ஆராய்ந்து முடிவெடுத்து, எந்தவித தொந்தரவும் இல்லாமல் ஆட்சி நடத்துவோம். பாஜக மூத்தத் தலைவர் ஸ்ரீராமுலு கூறுவது போல என் தூக்கத்தையோ, காங்கிரஸ் கட்சியின் தூக்கத்தையோ யாரும் கெடுக்க இயலாது. உண்மையில் பாஜகவினர் தான் தூக்கமிழந்துள்ளனர் என்றார் அவர்.
சொந்த ஊரில் குலதெய்வத்தை வணங்கிய குமாரசாமி
ஹாசன், மே 21: மஜத மாநிலத் தலைவரும், முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் எச்.டி.குமாரசாமி சொந்த ஊரில் சிறப்பு பூஜை செய்து குலதெய்வத்தை வணங்கினார்.
மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசின் சார்பில் கர்நாடகத்தின் புதிய முதல்வராக பதவியேற்க இருக்கும் மஜத மாநிலத் தலைவர் எச்.டி.குமாரசாமி, பெங்களூரில் மே 23-ஆம் தேதி நடைபெறும் விழாவில் பதவியேற்க இருக்கிறார். இந்நிலையில், கடந்த சில நாள்களாக பல்வேறு கோயில்களுக்கு சென்று சிறப்பு பூஜை செய்து சுவாமி தரிசனம் செய்து வரும் குமாரசாமி, அவரது சொந்த ஊரான ஹாசன் மாவட்டத்துக்கு திங்கள்கிழமை வருகை தந்தார். ஹாசன் மாவட்டத்தின் ஹொளேநரசிபுராவில் உள்ள தனது குலதெய்வக் கோயிலில் தனது மனைவி அனிதாவுடன் சிறப்பு பூஜை செய்த குமாரசாமி, சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார். பின்னர், லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில், ஹரதனஹள்ளியில் உள்ள சிவன் கோயில் உள்ளிட்ட பல கோயில்களுக்கு சென்று சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.
அதன்பிறகு தனி விமானம் மூலம் புது தில்லி சென்றுள்ள குமாரசாமி, செவ்வாய்க்கிழமை பெங்களூரு திரும்பியதும் தென் கன்னட மாவட்டத்தில் உள்ள தர்மஸ்தலாவுக்கு சென்று அங்கு மஞ்சுநாத சுவாமி கோயிலில் சிறப்பு பூஜை செய்கிறார். பின்னர், குக்கே சுப்பிரமணிய சுவாமி கோயில், சிருங்கேரியில் உள்ள சாரதாம்பா கோயில் உள்ளிட்ட பல கோயில்களுக்கு செல்ல திட்டமிட்டிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.