முகப்பு
பெங்களூரு

"குடகு மாவட்டத்தை மறுகட்டமைக்க வேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது'

குடகு மாவட்டத்தை மறுகட்டமைக்க வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது என்று ஆதிசுன்சுனகிரி மடத்தின் பீடாதிபதி நிர்மலானந்தநாத சுவாமிகள் தெரிவித்தார்.

Updated On : 3 செப்டம்பர், 2018 at 9:26 AM
பகிர்:

குடகு மாவட்டத்தை மறுகட்டமைக்க வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது என்று ஆதிசுன்சுனகிரி மடத்தின் பீடாதிபதி நிர்மலானந்தநாத சுவாமிகள் தெரிவித்தார்.
ஆதிசுன்சுனகிரி மடத்தின் சார்பில் பெங்களூருவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த "குடகு மாவட்டத்துக்கு நமது கொடை' என்ற நன்கொடை வசூலிப்பு நடைபயணத்தை தொடக்கிவைத்து, அவர் பேசியது:  நமது நாட்டுக்காக அனைத்தையும் வழங்கிய குடகு மாவட்ட மக்கள், தற்போது அனைத்தையும் இழந்து நிற்கிறார்கள். இந்த சூழ்நிலையில் குடகு மாவட்ட மக்களின் மறுவாழ்வுக்கும், மறுகட்டமைப்புக்கும் பங்காற்ற வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது. குடகு மாவட்ட மக்களின் மறுவாழ்வுக்கு கர்நாடக மக்கள் அனைவரும் தாராள இதயத்தோடு நன்கொடைகளை வாரி வழங்க வேண்டும். எவ்வளவு கொடுக்கிறோம் என்பதைக் காட்டிலும் எதையாவது கொடுப்பதுதான் நல்ல பண்பாக இருக்க முடியும். 
குடகு மாவட்டம், நமது நாட்டின் மிக முக்கியமான அங்கமாகும். நமது உடலில் ஏதாவது பகுதி பாதிக்கப்பட்டால் எப்படி துடிப்போமோ, அதுபோலதான் குடகு மாவட்டமும் துடித்துக் கொண்டுள்ளது. எனவே, குடகு மாவட்டத்தின் மறுகட்டமைப்புக்கும், துயர்துடைப்புப் பணிக்கும் மக்கள் வாரி வழங்க வேண்டும். உதவி செய்வதில் மதம் முக்கியமல்ல. நன்கொடை சேகரிக்கும் நடைபயணத்தில் இந்து, சமணம்,பெளத்தம், முஸ்லிம், கிறிஸ்துவ மக்களும் கலந்துகொண்டுள்ளனர். துன்பத்தில் தவிக்கும் குடகு மாவட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவது நம் அனைவரின்கடமையாகும். 
குடகு மாவட்டத்தில் இருந்து நமது ராணுவத்துக்கு ஏராளமான வீரர்கள் பங்காற்றியுள்ளனர். தென்கர்நாடகத்தின் மக்களின் உயிர்நாடியாக இருக்கும் காவிரி ஆறு குடகு மாவட்டத்தில் இருந்து பிறந்தோடுகிறது. தென்மாவட்டங்கள் செழிப்பாக இருப்பதற்கு குடகு மாவட்ட மக்களே காரணமாவர். இயற்கை வளத்தால் நிறைந்துள்ள குடகு மாவட்டம், அதே இயற்கை பேரிடரால் சீரழிந்துள்ளது. இந்த சூழ்நிலையில் குடகு மாவட்டத்தை புதுப்பிக்க நாம் அனைவரும் பங்காற்ற வேண்டும் என்றார் அவர். நன்கொடை சேகரிப்பின் போது முன்னாள் அமைச்சர்கள் வி.சோமண்ணா ரூ.25 லட்சம், எம்.கிருஷ்ணப்பா ரூ.25 லட்சம், முன்னாள் துணைமேயர் என்.சீனிவாஸ் ரூ.5 லட்சம் நன்கொடையாக வழங்கினார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.