பாஜகவின் புதிய வரலாறும், காங்கிரஸ்-மஜத வீழ்ச்சியும்!
நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கர்நாடக அரசியல் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு
நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கர்நாடக அரசியல் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 28 தொகுதிகளில் 25 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்துள்ளது.
கர்நாடகத்தில் ஆட்சி நடத்திவரும்கூட்டணி கட்சிகளான காங்கிரஸும், மஜதவும் தலா ஒரு தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற முடிந்துள்ளது.
1952-ஆம் ஆண்டு முதல் கர்நாடகத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த காங்கிரஸ், 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளது அந்தக் கட்சி தொண்டர்களைச் சிந்திக்க வைத்துள்ளது.
2013-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் அறுதிப்பெரும்பான்மை பலத்துடன் கர்நாடகத்தில் ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ், 2014-இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 9 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. அந்தத் தேர்தலில் பாஜக 17 தொகுதிகளைக் கைப்பற்றியது.
தவறுகளை உணராத காங்கிரஸ்: சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு 5 ஆண்டுகாலம் மக்கள் நலன் சார்ந்தத் திட்டங்களைச் செயல்படுத்தியபோதும், சமூக நீதி என்ற போர்வையில் பெரும்பான்மை சமூகமாக விளங்கும் லிங்காயத்துகள், ஒக்கலிகர்களை ஓரங்கட்டியதாகவும் புகார்கள் எழுந்தன. இதனால், லிங்காயத்து சமுதாயத்தை ஹிந்து மதத்தில் இருந்து பிரிக்க முயற்சிப்பதாக எழுந்த குற்றச்சாட்டு, அதீத நம்பிக்கையின் காரணமாக சித்தராமையா செய்த கடைசிநேர தவறுகள் ஆகியவற்றால் மக்களின் நம்பிக்கையைப் பெற்று ஆட்சியை தக்கவைக்கமுடியாமல் காங்கிரஸ் தோற்று போனது.
இந்தத் தவறுகள் தொடர்வதற்காக அல்ல, திருத்திக் கொள்வதற்காக என்பதை காங்கிரஸ் உணரவில்லை.
மஜதவோடு கூட்டணி அணுகுமுறையே தவறு: 2018-ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 80 தொகுதிகளுடன் காங்கிரஸ் ஆட்சியை இழந்திருந்தபோதும், மக்களவைத் தேர்தலை இலக்காக வைத்துகொண்டு 37 தொகுதிகளில் மட்டுமே வென்றிருந்த மஜதவுக்கு முதல்வர் பதவியை தந்தது. இதோடு, ஆட்சி அமைக்க நிபந்தனையற்ற ஆதரவையும் அளித்தது. காங்கிரஸ் கட்சியின் அரசியல் அணுகுமுறையில் ஏற்பட்ட முதல் கோணல் இது. இந்தக் கோணல், மக்களவைத் தேர்தல் வரை எதிரொலித்ததால், அக்கட்சியால் எதிர்பார்த்த வெற்றியை கர்நாடகத்தில் பெறமுடியவில்லை.
"மதவாத பாஜகவை ஆட்சியில் இருந்து விலக்கி வைக்கவே அடுத்த 5 ஆண்டுகளுக்கு மஜத தலைமையில் ஆட்சி அமைக்க நிபந்தனையற்ற ஆதரவளித்துள்ளது" என்று முதல்வர் குமாரசாமி தலைமையில் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு அமைக்க சொல்லப்பட்ட காரணத்தை மக்கள் ஏற்க தயாராக இல்லை என்பதை காங்கிரஸ் தலைவர்கள் உணர தயாராக இல்லை.
காங்கிரஸ்-மஜத கூட்டணியை ஆதரிக்காத லிங்காயத்துகளும், ஒக்கலிகர்களும்..: 104 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வென்றிருந்த பாஜகவை ஆட்சி அமைக்கவிடாமல் தடுத்துவிட்டதாகவே மக்கள் கொந்தளித்தனர். பாஜகவுக்கு ஆதரவளித்து வரும் லிங்காயத்து சமுதாயத்துக்கு காங்கிரஸ் மீது கோபம் மேலும் அதிகரிக்க இது முக்கியமான காரணமாக அமைந்துவிட்டது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு கடுமையாக சாடிக்கொண்ட மஜத தலைவர் குமாரசாமியும், முன்னாள் முதல்வர் சித்தராமையாவும் 'மதச்சார்பின்மை' என்ற ஒற்றை வார்த்தையை பிடித்துக்கொண்டு 'கூட்டணி' அமைத்துக்கொண்டதை பொருந்தாக் கூட்டணியாக மட்டுமல்ல, 'கூடா நட்பாகவும்' மக்கள் காணத் தொடங்கினர்.
மஜதவின் வாரிசு அரசியலையும், காங்கிரஸுடனான கூட்டணியையும் விரும்பாத ஒக்கலிகர் சமுதாயத்தினர் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதுபோன்ற சூழ்நிலைகளே கர்நாடகத்தில் புதிய வரலாறாக முகிழ்ந்திருக்கிறது.
2004-இல் மஜத நடந்த விதமும், இன்றும்..: கர்நாடகத்தில் 2004-இல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தலா இரண்டரை ஆண்டுகளுக்கு ஆட்சி செய்வது என்று காங்கிரஸும், மஜதவும் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தின.
இரு கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், காங்கிரஸ் ஆட்சிக்கு அளித்துவந்த ஆதரவைத் திரும்பப் பெற்ற மஜத, அடுத்ததாக பாஜகவுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்தது. தலா 20 மாதங்கள் ஆட்சி நடத்துவது என்ற நிபந்தனையுடன் முதல்வராக குமாரசாமியும், துணை முதல்வராக எடியூரப்பாவும் பதவி வகித்தனர்.
20 மாதங்களுக்குப் பின்னர் ஒப்பந்தத்தின்படி ஆட்சி அதிகாரத்தை பாஜகவுக்கு வழங்க மஜத மறுத்தது, லிங்காயத்து சமுதாயத்தை மட்டுமல்லாது, கர்நாடக மக்களையும் ஆத்திரத்தை மூட்டியது. மக்களின் ஆத்திரம் 2008-இல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்று ஆட்சி அமைக்க ஆதரவாக மாறியது.
அதேபோன்றதொரு நிலைமையை 2018-இல் மறுபடியும் மஜத செய்துவிட்டதாக லிங்காயத்துகள் வருந்த தொடங்கியதன் விளைவு, அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு பெருமளவு ஆதரிக்க நேர்ந்துள்ளது.
தொண்டர்களும் விரும்பாத கூட்டணி: பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவான அலை, லிங்காயத்து சமுதாயத்தினரின் எடியூரப்பா ஆதரவு நிலைப்பாடு, காங்கிரஸுடனான கூட்டணியை விரும்பாத மஜத ஆதரவு ஒக்கலிகர்களின் வாக்குகள், சித்தராமையாவின் அண்மைக்காலப் பேச்சுகளைப் பிடிக்காத காங்கிரஸாரின் வாக்குகள் என்று பல்வேறு காரணங்கள் காங்கிரஸ்- மஜத கூட்டணியின் தோல்விக்கு காரணமாக கூறப்படுகின்றன.
இருப்பினும், மஜத- காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமல்லாது, அடிமட்ட தொண்டர்கள் மத்தியிலும் காணப்பட்ட பரஸ்பர நம்பிக்கையற்றத் தன்மை, ஒருவருக்கொருவர் குழிபறிக்கும் வேலை, சொந்த கட்சி வேட்பாளர்களுக்கே உலை வைத்தத் தொண்டர்களின் கோபம், மஜதவின் வாரிசு மற்றும் சுயநல அரசியலை விரும்பாதது, ஆட்சி மற்றும் கட்சி மட்டத்தில் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரையில் நம்பகத்தன்மையை கட்டமைக்காமல், இணக்கமான சூழலை உருவாக்க தவறியது தான் மஜத-காங்கிரஸ் கூட்டணியின் படுதோல்விக்கும், பாஜகவின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கும் காரணமாக அமைந்துவிட்டதை அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்ட தவறவில்லை.
'மதச்சார்பின்மை' என்ற முழக்கத்தை வைத்துகொண்டு இனி வாக்குகளை அள்ள முடியாது, மாநிலத்தில் மக்கள் விரும்பும் நல்ல தலைமையை உருவாக்காத வரை கட்சியைக் கட்டமைக்க முடியாது, புதிய தலைமை, உண்மையான கொள்கை, மக்கள் வள திட்டங்கள், தெள்ளத்தெளிவான நிலைப்பாடு, சுதந்திர வேட்கையின்போது காணப்பட்ட உண்மையான உழைப்பு போன்றவற்றை கட்சியில் பாய்ச்சாவிட்டால் வெற்றி என்பது காங்கிரஸுக்கு கனவாகவே இருக்கும் என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.
பாஜகவுக்கு அதிகரித்துள்ள வாக்கு சதவீதம்
2014-இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 43 சதவீத வாக்குகளுடன் 17 தொகுதிகளைப் பெற்றிருந்த பாஜக, தற்போது 51.38 சதவீத வாக்குகளுடன் 25 தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கிறது. 2014-இல் 40.80 சதவீத வாக்குகளுடன் 9 இடங்களை கைப்பற்றியிருந்த காங்கிரஸ், தற்போது 31.88 சதவீத வாக்குகளுடன் 1 இடத்தை பெற்றிருக்கிறது.
2014-இல் 11 சத வாக்குகளுடன் 2 தொகுதிகளை வென்றிருந்த மஜத, அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 9.67 சதவீத வாக்குகளைப் பெற்று 1 தொகுதியை மட்டும் தன் வசப்படுத்தியிருக்கிறது.
2018-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 80 தொகுதிகளை கைப்பற்றியிருந்தாலும் 38.14 சதவீத வாக்குகளுடன் பாஜகவைவிட 1.80 சதவீத வாக்குகளை கூடுதலாக காங்கிரஸ் பெற்றிருந்தது.
கடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ், மஜத பெற்ற மொத்தவாக்குகள் 51.80 சதவீதமாகும். இந்த மக்களவைத் தேர்தலில் இரு கட்சிகளும் 41.55 சதவீத வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.
பாஜகவோ கடந்த தேர்தலை காட்டிலும் 8.38 சதவீத வாக்குகளை கூடுதலாகப் பெற்று, கூடுதலாக 8 தொகுதிகளைப் பெற்றிருக்கிறது. கடந்த தேர்தலில் 40.80 சதவீத வாக்குகளுடன் 9 இடங்களை கைப்பற்றிய காங்கிரஸோ, 8.92 சதவீத வாக்குகளை இழந்து 8 இடங்களை இழந்துள்ளது. கடந்த மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களில் முறையே 40.80 சதவீதம், 38.14 சதவீதம் வாக்குகளை கூட காங்கிரஸ் கட்சியால் அண்மையில் நடந்த மக்களவைத் தேர்தலில் தக்கவைக்க முடியவில்லை.