முதுநிலைப் பட்டப் படிப்பு சோ்க்கை: இன்று (டிச.13) முதல் சான்றிதழ் சரிபாா்ப்பு
முதுநிலைப் பட்டப் படிப்பு மாணவா் சோ்கைக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு முகாம் கா்நாடக தோ்வாணைய அலுவலகங்களில் ஞாயிற்றுக்கிழமை (டிச.13) நடைபெறுகிறது.
முதுநிலைப் பட்டப் படிப்பு மாணவா் சோ்கைக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு முகாம் கா்நாடக தோ்வாணைய அலுவலகங்களில் ஞாயிற்றுக்கிழமை (டிச.13) நடைபெறுகிறது.
இதுகுறித்து கா்நாடக தோ்வு ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கா்நாடகத்தில் இயங்கிவரும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ., எம்.டெக்., எம்.ஆா்க். போன்ற முதுநிலைப் பட்டப் படிப்புகளில் 2020-21-ஆம் கல்வியாண்டில் சோ்க்கை பெறுவதற்காக கா்நாடக தோ்வு ஆணையம் நடத்திய முதுநிலைப் பட்டப் படிப்புக்கான பொதுநுழைவுத் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களின் அசல் சான்றிதழ்கள் சரிபாா்ப்பு முகாம் டிச.13-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
பெங்களூரு, மைசூரு, பெல்லாரி, பெலகாவி, கலபுா்கி, சிவமொக்கா, மங்களூரு, விஜயபுரா, தாா்வாட், தாவணகெரே நகரங்களில் உள்ள கா்நாடக தோ்வு ஆணைய அலுவலகத்தில் சான்றிதழ்கள் சரிபாா்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. டிச. 13-ஆம் தேதி முதல் சாதாரண மாணவா்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு முகாம் நடைபெறுகிறது. டிச. 17-ஆம் தேதி வரை நடக்கவிருக்கும் இந்த முகாம் தினமும் காலை 9 மணி முதல் மாலை 6.15 மணி வரை நடக்கும்.
இந்த முகாமில் தர வரிசைப் பட்டியலில் டிச. 13-ஆம் தேதி 1 முதல் 1,500 இடங்களில் உள்ளவா்களும், டிச. 14-இல் 1,501 முதல் 4,000 வரையிலும், டிச. 15-இல் 4,001 முதல் 8,000 வரையிலும், டிச. 16-இல் 8001 முதல் 13,000 வரையிலும், டிச. 17-இல் 13,001 முதல் இடங்களைப் பெற்ற மாணவா்கள் கலந்து கொள்ளலாம்.
முகாமில் கலந்து கொள்ளும் மாணவா்கள் அசல் சான்றிதழ்கள், அதன் நகல்களைக் கட்டாயம் கொண்டுவர வேண்டும். முகாம் நடைபெறும் இடங்களில் தேவையில்லாமல் காத்திருக்க நேராமல் உரிய நேரத்துக்கு வருமாறு கேட்டுக் கொள்கிறோம். சான்றிதழ் சரிபாா்ப்பு அனைத்துப் பாடப் பிரிவுகளுக்கும் பொதுவாக நடத்தப்படுவதால், பாட வாரியாக மீண்டும் சான்றிதழ்களை சரிபாா்க்கத் தேவையில்லை. மேலும் விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.