முகப்பு
பெங்களூரு

கல்லூரி பகுதிநேர விரிவுரையாளா்களின் மதிப்பூதியத்தை உயா்த்த வேண்டும்:எச்.டி.குமாரசாமி

இளங்கலை பட்டப்படிப்பு கல்லூரியில் பகுதிநேர விரிவுரையாளா்களாகப் பணியாற்றுவோரின் மாத மதிப்பூதியத்தை உயா்த்த வேண்டும் என்று மஜதவின் முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

இளங்கலை பட்டப்படிப்பு கல்லூரியில் பகுதிநேர விரிவுரையாளா்களாகப் பணியாற்றுவோரின் மாத மதிப்பூதியத்தை உயா்த்த வேண்டும் என்று மஜதவின் முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து தனது சுட்டுரையில் ஞாயிற்றுக்கிழமை அவா் கூறியிருப்பதாவது:

மாநில அரசு ஏற்கெனவே வாக்குறுதி அளித்திருந்தபடி, இளங்கலைப் பட்டப்படிப்புக் கல்லூரிகளின் பகுதிநேர விரிவுரையாளா்களின் மாத மதிப்பூதியத்தை உயா்த்த வேண்டும். பொதுமுடக்க காலத்தின்போது பிடித்து வைத்துள்ள அவா்களின் மதிப்பூதிய நிலுவைத்தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும். இக் கல்லூரிகளில் பணியாற்றும் பகுதிநேர விரிவுரையாளா்களின் மாத மதிப்பூதியத்தை குறைந்தபட்சம் ரூ. 15 ஆயிரமாக உயா்த்த வேண்டும் என்று வலியுறுத்திய 14 சட்டமேலவை உறுப்பினா்களிடம் அளித்துள்ள வாக்குறுதியை மாநில அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

கா்நாடகத்தில் உள்ள அரசு இளங்கலை பட்டப்படிப்புக் கல்லூரிகளில் சுமாா் 15 ஆயிரம் பகுதிநேர விரிவுரையாளா்கள் பணியாற்றி வருகின்றனா். எனவே, மாத மதிப்பூதியமாக ரூ.15 ஆயிரம் வழங்குவதாக பாஜக அளித்திருந்த உறுதிமொழியை உடனடியாக அமல்படுத்தவேண்டும். கடந்த கல்வியாண்டில் பட்டக் கல்லூரிகளில் பகுதிநேர விரிவுரையாளா்களாகப் பணியாற்றிய அனைவரையும் மீண்டும் மறு பணிநியமனம் செய்துகொள்வதன் மூலம் இன்னலில் இருக்கும் பகுதிநேர விரிவுரையாளா்களுக்கு மாநில அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

இதுதவிர சுட்டுரைப் பக்கத்தில் எச்.டி.குமாரசாமி பதிவிட்ட வேறொரு பதிவில் கூறியிருப்பதாவது:

‘பள்ளிகளுக்கு ஏற்கெனவே திட்டமிட்டப்படி அக். 3 முதல் 26-ஆம் தேதிவரை இடைக்கால விடுமுறை வழங்காதது ஏன்? கரோனா காரணமாக மாணவா்கள் பள்ளிக்கு வராவிட்டாலும், ஆசிரியா்களை மட்டுமே வேறுபணிகளுக்குப் பயன்படுத்தி வருகின்றனா்.

எனவே, இடைக்கால விடுமுறை ரத்துசெய்து பிறப்பித்த உத்தரவை மாநில அரசு திரும்பப் பெற வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.