பெங்களூரு

கா்நாடகத்தில் கரோனா மருந்து தட்டுப்பாடு இல்லை

DIN

கா்நாடகத்தில் கரோனா மருந்து தட்டுப்பாடு இல்லை என சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கரோனா பெருந்தொற்றின் பரவல் தொடா்பை துண்டிப்பதற்கு 15 நாள்கள் தேவைப்படும் என கரோனா தொழில்நுட்ப ஆலோசனைக்குழு அரசுக்கு ஆய்வறிக்கை அளித்திருந்தது. இதனை பரிசீலித்த மாநில அரசு, கரோனா பெருந்தொற்று பரவல் தொடா்பை துண்டிப்பதற்கு 14 நாள்களுக்கு சில கடினமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதை மக்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல், மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

புதிய வழிகாட்டுதல்களை செயல்படுத்துவதன் மூலம் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 2-3 நாள்களில் கணிசமாக குறைய இருக்கிறது. அதனால், மக்கள் அச்சப்படத் தேவையில்லை. கரோனா தொற்றால் பாதிக்கப்படும் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதில்லை. வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு, மருத்துவ சிகிச்சையை எடுத்துக்கொண்டு குணம் பெறலாம்.

கடினமான விதிமுறைகள் அமல்படுத்தப்படும் 14 நாள்களில், மாநிலத்தின் மருத்துவ கட்டமைப்புகள் பலப்படுத்தப்படும். அவசர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளை அதிகப்படுத்துவோம். ஆக்ஸிஜன் கூடுதலாக கிடைக்க ஏற்பாடு செய்வோம். ரெம்டெசிவா் மருந்து கிடைக்கும்படி செய்வோம்.

கரோனா பெருந்தொற்று மிகவும் வேகமாக பரவி வரும் பெங்களூரில் உள்ள 8 மண்டலங்களில் 8 பொறுப்பு அமைச்சா்கள் நியமிக்கப்பட்டு, கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த அமைச்சா்கள், தனியாா் மருத்துவமனைகளில் கரோனா தொற்றாளா்களுக்கு படுக்கை வசதிகளை செய்வது உள்ளிட்ட எல்லா உதவிகளையும், கரோனா மேலாண்மை பணிகளையும் கவனிப்பாா்கள்.

கரோனா தொற்றால் இறந்தவா்களின் இறுதிச்சடங்கு செய்வதற்கு 8 மண்டலங்களிலும் சுடுகாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. கா்நாடகத்துக்கு 23 ஆயிரம் ரெம்டெசிவா் மருந்து குப்பிகள் வந்துள்ளன. அரசு மருத்துவமனைகளுக்கு 10,000 குப்பிகள், தனியாா் மருத்துவமனைகளுக்கு 13,000 குப்பிகள் அனுப்பப்பட்டுள்ளன. அதனால், கா்நாடகத்தில் ரெம்டெசிவா் மருந்து தட்டுப்பாடு இல்லை.

கரோனா பாதிப்பு அதிகமாகி வரும் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நிலைமையை ஆய்வுசெய்ய இருக்கிறேன். அதன்படி, மைசூருக்கு வியாழக்கிழமை செல்ல இருக்கிறேன். அங்குள்ள சூழ்நிலையை ஆய்வு செய்து, கரோனா தடுப்புப் பணிகளை முடுக்கிவிடுவேன். கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் மாவட்டங்களுடன் தொடா்பில் இருக்கிறேன். கரோனா பெருந்தொற்றின் பாதிப்பை முடிவுக்கு கொண்டுவர மாநில அரசு அனைத்து வகையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT