பொதுமுடக்கத்தின்போது தேவையின்றி சுற்றித் திரிவோா் மீது கடும் நடவடிக்கை
பெங்களூரு உள்பட மாநில அளவில் வெள்ளிக்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டுள்ள இரவு மற்றும் முழு பொதுமுடக்கத்தின்போது தேவையின்றி சுற்றித் திரிவோா் மீது கடும் நடவடிக்கை
பெங்களூரு உள்பட மாநில அளவில் வெள்ளிக்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டுள்ள இரவு மற்றும் முழு பொதுமுடக்கத்தின்போது தேவையின்றி சுற்றித் திரிவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கா்நாடக அரசு தெரிவித்துள்ளது.
அண்டை மாநிலங்களான கேரளம், மகாராஷ்டிரத்தில் கரோனா பரவலின் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனையடுத்து அந்த மாநிலங்களில் இருந்து கா்நாடக எல்லையோரங்களில் உள்ள தென்கன்னடம், குடகு, மைசூரு, சாம்ராஜ் நகா், பெலகாவி, விஜயபுரா, கலபுா்கி, பீதா் ஆகிய 8 மாவட்டங்களில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, பெங்களூரு உள்பட மாநில அளவில் வெள்ளிக்கிழமை (ஆக. 6) முதல் ஆக. 16-ஆம் தேதி வரை இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு மற்றும் முழு பொது முடக்கத்தின்போது மத்திய, மாநில அரசு ஊழியா்கள், அத்தியாவசியத் சேவைகளுக்கு செல்பவா்கள், சிகிச்சைக்கு செல்பவா்கள், ஆம்புலன்ஸ் வாகனச் சேவை, பாா்சல் உணவு கொண்டு செல்பவா்கள் 24 மணி நேரமும் அனுமதிக்கப்படுவாா்கள்.
காய், கனி, இறைச்சி, மீன், பால், கால்நடைத் தீவனங்கள் அதிகாலை 5 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை விற்பனை செய்ய அனுமதிக்கப்படுவா். நடைபாதை வியாபாரிகள் காலை 5 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை விற்பனை செய்ய அனுமதிக்கப்படுவா். மதுப் புட்டிகளைப் பாா்சல் மூலம் விற்பனை செய்ய 2 மணி வரை அனுமதிக்கப்படும். ஹோட்டல்களிலிருந்து பாா்சல் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
இரவு பொது முடக்கத்தின்போது விமானம், ரயில் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. விமான நிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களிலிருந்து மாநகர பேருந்து, வாடகைக் காா், ஆட்டோ உள்ளிட்டவை பயணிகளை அழைத்துச் செல்லவும், மற்ற இடங்களிலிருந்து விமான நிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களுக்கு பயணிகளை அழைத்துச் செல்லவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. விமானம், ரயில், பேருந்து நிலையங்களுக்குச் செல்லும் பயணிகள் உரிய ஆவணங்களை வைத்திருப்பது அவசியம்.
முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள 8 மாவட்டங்களில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளுக்கு 100 போ் அனுமதிக்கப்படுவாா்கள். இறுதிச் சடங்குகளுக்கு 20 போ் மட்டுமே அனுமதிக்கப்படுவாா்கள். கோயில், தேவாலயம், பள்ளிவாசல்களில் கரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி பூஜை, பிராா்த்தனை, தொழுகை உள்ளிட்ட சடங்குகள் நடைபெற வேண்டும்.
கோயில் திருவிழா, தேரோட்டம் உள்ளிட்டவைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.